அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?மொழி

 ஸ்போக்கன் இங்க்லிஷ் பேச்சு 1 (இலக்கணம் தேவையா?)

‘‘ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும். நான் என்னங்க சார் பண்ணனும்?” என்ற ரவியிடம்,‘‘முதலில் சேரில் உட்கார வேண்டும்” என்றார் ரகு. சிரித்துக்கொண்டே உட்கார்ந்தான் ரவி. அன்று பவர் ஷட் டவ்ன். எனவே, எந்த வேலையும் இல்லை. கூடவே அகிலாவும்  வந்தமர்ந்தாள்.
“தாராளமா பேசலாமே! உனக்கென்ன அதில் சங்கடம்?” என்ற ரகுவிடம், “இல்லைங்க சார்! எதாவது இலக்கணப் பிழை வந்துட்டா எதிர்ல இருக்கறவங்க ஏளனமா பார்ப்பாங்களே. அதுதான் தயக்கமா இருக்கு” என்றான் ரவி. “ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கணம் அவசியமே இல்லை ரவி” என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்த அகிலா, “என்னங்க சார் சொல்றீங்க..? இலக்கணம் தெரிஞ்சுக்காம மொழியைப் பேச முடியுமா என்ன? நம்ப முடியலிங்க சார் நீங்க சொல்றத” என்றாள்.

“ஆமா. நம்ப முடியாதுதான். கோயில்ல யானையை ஒரு தாம்புக் கயித்தில அல்லது இரும்புச் சங்கிலியால கட்டிப்போட்டுருப்பாங்க. பார்த்திருப்பீங்க. அந்த யானையால அத்துக்கிட்டு போகமுடியாதா? முடியும்தானே? ஆனாலும் அது அப்படி செய்யாது. ஏன்னா அந்த யானை குட்டியா இருக்கும்போது அதே மொத்தக் கயித்தால அல்லது சங்கிலியாலதான் கட்டிப் போட்டுருப்பாங்க. குட்டி யானை அந்த கயித்தில இருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கும். ஆனால், முடியாது.

போராடிப் போராடி கடைசியா அந்தக் குட்டி யானை மனசில ‘நம்மால இந்த கயித்தை அத்துக்கிட்டு போகமுடியாது’ என்று உறுதியாக எண்ணத் தொடங்கிவிடும். வளர்ந்த பின்னும் (மதம் பிடிக்கும் தருணத்தைத் தவிர) தன்னால் சங்கிலியை அறுக்கும் சக்தியில்லை என்றுதான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கும். அது மாதிரிதான் நீங்களும் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க” என்ற ரகுவை சற்றே ஆச்சர்யம் கலந்த சந்தேகப் பார்வையில் பார்த்தனர் இருவரும்.

“என்ன? இன்னும் நம்ப முடியலயா? சரி! இப்போ நம் தாய்மொழி தமிழையே எடுத்துக்கலாம். நல்லா சிந்திச்சு பதில் சொல்லுங்க. இலக்கணம் கத்துக்கிட்டதுக்கு அப்புறம் பேச ஆரம்பிச்சீங்களா? அல்லது பேச ஆரம்பிச்ச பின்ன கத்துக்க ஆரம்பிச்சீங்களா?” என்று கேட்ட ரகுவிடம், “பேச்சுக்கு அப்புறம்தான் இலக்கணம் கத்துக்கிட்டோம் சார்” என கோரஸாக கத்தினர்.

“So, first you started speaking and only then learned Grammar. Is it not?” என்ற ரகு, ”இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா…. அந்த இலக்கணத்தைக் கூட இரண்டு மதிப்பெண்களுக்கும், நான்கு மதிப்பெண்களுக்கும்தானே கற்றுக் கொண்டோம். இல்லையில்லை! கற்றுக் கொண்டோம் எனச் சொல்வது தவறு. குருட்டுத்தனமாய் மனப்பாடம் செய்தோம். என்னையும் சேர்த்துதான் நான் சொல்கிறேன். Ultimately, I would like to remind you that we didn’t learn Grammar for the purpose of speaking and writing but only for scoring marks. Say yes or no!” என்றபோது சற்று அமைதி நிலவியது.             
                
(விவாதம் தொடரும்)

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்