ஸ்டெனோகிராபர் தேர்வு



உத்வேகத் தொடர்-65

வேலை வேண்டுமா?


எஸ்.எஸ்.சி நடத்தும் ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ அண்ட் ‘டி’ தேர்வு


பிளஸ் 2 முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசில் பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசின் பணிகளில் சேர்ந்து பணியாற்ற, தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க எஸ்.எஸ்.சி. (SSC) என அழைக்கப்படும் “ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission) நடத்தும் தேர்வுகளான - “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வு” (Combined Graduate Level Examination [CGLE]), “கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் தேர்வு” (Combined  Higher Secondary Level (10th/+2) Examination), “கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு” (Constable [General Duty] Examination) ஆகியவற்றைப்பற்றி கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம்.

இனி - இந்த இதழில் எஸ்.எஸ்.சி. நடத்தும் “ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ அன்ட் ‘டி’ தேர்வு” (Stenographer Grade ‘C’ and ‘D’ Examination) பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.

பணிகள்

மத்திய அரசின் அமைப்புகள் (Organisations), பல்வேறு துறைகள் (Departments) மற்றும் அமைச்சகங்கள் (Ministries) போன்றவற்றில் ‘ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘ஸ்டெனோகிராபர் கிரேடு ‘டி’ ஆகிய பணிகளுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பதவிகளில் பணிபுரியவும் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வயது விவரம்

 ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ (Stenographer Grade ‘C’ Examination) தேர்வில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்சமாக 30 வயதுள்ளவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். இதேபோல், ஸ்டெனோகிராபர் கிரேடு ‘டி’ (Stenographer Grade ‘D’ Examination) தேர்வு எழுத விரும்புபவர்களின் வயது 18 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மாறுபடும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (SC/ST) அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. இதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (OBC) அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கும் வயது வரம்பில் தளர்வு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித்தகுதி   

பிளஸ் 2 (12th) தேர்வில் வெற்றி பெற்றவர்களும், அதற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்தத் தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இவை தவிர, தொழிற்கல்வியில் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வுக் கட்டணம்

ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ அண்ட் ‘டி’ தேர்வு (Stenographer Grade ‘C’ and ‘D’ Examination) எழுதுவதற்கான தேர்வுக் கட்டணம் ரூபாய் 100/- ஆகும். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் இந்தத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமையம்

இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், தென் மண்டல அலுவலகத்தோடு தொடர்புடைய குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, புதுச்சேரி, ஹைதராபாத், நிசாமாபாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் நடத்தப்படுகிறது.

 தேர்வுமுறை

இந்தத் தேர்வு 2 நிலைகளில் நடத்தப்படும். அவை -
1. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination)
2. சுருக்கெழுத்துத் திறன் தேர்வு (Skill Test in Stenography)
1.கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination)
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மூன்று பிரிவுகளில் (Parts) நடத்தப்படும். அவை -

இத்தேர்வில் இடம்பெறும் கேள்விகள் அனைத்தும் கொள்குறி வகை வினா அமைப்பில் இடம்பெறும். இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தவறான பதில் (Wrong  Answers)  எழுதியிருந்தால், அந்தக் கேள்விக்காக 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். எனவே, இதனை கருத்தில்கொண்டு மிகவும் கவனமாக சரியான பதிலை தேர்வில் எழுதுவது நல்லது. தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கு சரியான முறையில் விடையளிக்க விரும்புபவர்கள் முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.

(A) பொது அறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence and Reasoning):
“பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மைப்” பகுதியில் வெர்பல் மற்றும் நான்-வெர்பல் (Verbal and non-verbal) அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும். இந்தப் பகுதியில் பொதுவாக analogies, similarities and differences, space visualization, problem solving, analysis, judgment, decision making, visual memory, discriminating observation, relationship  concepts, arithmetical reasoning, verbal and figure classification, arithmetical number series, non-verbal series போன்ற பாடப் பகுதிகளிலிருந்து கேள்விகள் இடம்பெறும். குறியீடுகள் மற்றும் அதன் உறவுகள் (Symbols and their Relationship), கணித அளவீட்டு மதிப்பீடுகள் (Arithmetical Computation), பகுத்தாய்வு பணிகள் (Analytical Functions), கருத்துச் சுருக்கங்கள் (Abstract Ideas) ஆகியவற்றிலும் போட்டியாளரின் திறனை மதிப்பீடு செய்யும் விதத்தில் கேள்விகள் அமையும்.  

(B) பொது விழிப்புணர்வு (General Awareness):
“பொது விழிப்புணர்வு” பிரிவில் ஒரு போட்டியாளரின் சுற்றுச்சூழல் பற்றிய பொது விழிப்புணர்வு மற்றும் அந்த விழிப்புணர்வை சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் உருவாக்கும் திறன் (Application of General Awareness to Society) ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் விதத்தில் கேள்விகள் வடிவமைக்கப்படும்.

ஒரு படித்த மனிதரிடம் எதிர்பார்க்கப்படும் அறிவியல் சார்ந்த அனுபவங்கள் , நாள்தோறும் நிகழும் தற்கால நிகழ்வுகள் ஆகியவற்றை கணிக்கும் விதத்தில் கேள்விகள் அமைந்திருக்கும். குறிப்பாக - இந்தியா மற்றும் அதன் அருகாமையிலுள்ள நாடுகளிலுள்ள (Neighbouring Countries) விளையாட்டுக்கள் (Sports), வரலாறு (History), பண்பாடு (Culture), புவியியல் (Geography),  பொருளாதாரக் காட்சிகள் (Economic Scene), பொது அரசியல் (General Polity) ஆகியவை கேள்விகளாக வடிவமைக்கப்படும்.

(C) ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் திறன் (English Language and Comprehension) : ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ளும் திறனை மதிப்பீடு செய்யும்போது ஆங்கில இலக்கணம் (Grammar), ஆங்கிலச் சொற்கள் (Vocabulary), ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைக்கும் முறை (Sentence Structure), ஒரே பொருளிலுள்ள நேர்மறை சொற்கள் (Synonyms), ஒரே பொருளிலுள்ள எதிர்மறை சொற்கள் (Antonyms) ஆகியவற்றை போட்டியாளர் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறார்? என்பதை மதிப்பீடு செய்யும் விதத்தில் கேள்விகள் அமையும். இவை தவிர, சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதையும் இத்தேர்வில் மதிப்பீடு செய்வார்கள்.

போட்டியாளரின் எழுத்துத் திறமையை (Writing   Ability) கணிக்கும் விதத்திலும் இத்தேர்வில் கேள்விகள் இடம்பெறும்.

2. சுருக்கெழுத்துத் திறன் தேர்வு (SKILL TEST IN STENOGRAPHY)
சுருக்கெழுத்துத் திறன் தேர்வில் போட்டியாளர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால் தகுதியானவராக கருதப்படுவார் என்பதை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அவ்வப்போது தெரிவிக்கும். இந்தத் தேர்வில் - சொல்வதை சுருக்கி எழுத ஒரு போட்டியாளருக்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும்.
‘ஸ்டெனோகிராபர் கிரேடு சி தேர்வு’ எழுதுபவர்கள் சுருக்கெழுத்துத் திறன் தேர்வில் 1 நிமிடத்திற்குள் 100 வார்த்தைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் சுருக்கி எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல், ‘ஸ்டெனோகிராபர் கிரேடு டி தேர்வு’ எழுதுபவர்கள் 1 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகளை சுருக்கி எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.  சுருக்கி எழுதப்பட்ட தகவல்களை விரித்து வாக்கியங்களாக கம்ப்யூட்டரில் டைப் செய்யவும் இவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கி எழுதியதை விரித்து எழுதுவதற்காக (Transcription) கீழ்க்கண்ட வகையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக விவரங்கள் பெற…
ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ அன்ட் ‘டி’ (Stenographer Grade ‘C’ and ‘D’ Examination) தேர்வுகளுக்கான கல்வித்தகுதி, பாடத்திட்டங்கள் பற்றிய அதிகமான விவரங்களை www.ssconline.nic.in மற்றும் www.ssc.nic.in என்ற இணையதள முகவரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு:

The Regional Director (SR),Staff Selection Commission, IInd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai - 600 006, Tamilnadu. www.sscsr.gov.in- என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

தொடரும்.

நெல்லை கவிநேசன்