செய்தித் தொகுப்பு
கேம்பஸ் நியூஸ்
‘ஸ்மார்ட் போன்’ மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம்!
புதிய பாடத்திட்டத்தில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் கோடு’ (க்யூ.ஆர். கோடு) என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் ‘ஸ்மார்ட் போன்’ இல்லாமல் பாடம் நடத்த முடியாது.சமீபத்தில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. மேலும் அந்தப் புத்தகங்களில் ‘க்யூ.ஆர். கோடு’ என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை ‘ஸ்மார்ட்போன்’ மூலம் ‘ஸ்கேன்’ செய்தால் அந்தப் புத்தகத்தை மின் நுாலாக படிக்கலாம்.
அனைத்துப் பாடங்களுக்கும் உரிய மதிப்பீடு, கேள்விகள், பாடம் சார்ந்த கூடுதல் தகவல், அதற்குரிய இணையதளங்கள் இடம்பெற்றிருக்கும். பாடல்கள் ஆடியோ, வீடியோ வடிவிலும், கணிதத்திற்கு செயல்விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும். ‘க்யூ.ஆர். கோடு’ பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பாடம் நடத்தும்போது கண்டிப்பாக ‘ஸ்மார்ட்போன்’ வைத்திருக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் ‘க்யூ.ஆர். கோடு’ பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இட மாறுதலுக்கான மொபைல் செயலி!
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி (TN Mutual Transfer Mobile App) வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள நபர் இருந்தால் நீங்களே மனமொத்த மாறுதல் பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம்.
இந்த செயலியில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் துறை வாரியாக தங்களது தகவல்களைப் பதிவு செய்யவும், துறை வாரியாக தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும் முடியும். மேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியினை Google Play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
புதிய பாடத்திட்ட நூல் விற்பனை ஆரம்பம்!
தமிழகத்தில் புதிய பாடத்திட்டப்படி தயார் செய்யப்பட்ட, மூன்று வகுப்புகளுக்கான, பாடநுால்களின் விற்பனை நேற்று தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கேற்ற வகையில், புதிய பாடநுால்கள் வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன.
இந்த பாடநுால்கள், பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களுக்கும், பாடநுால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கான, பாடநுால்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ‘பிளஸ் 1 பாடநுால்கள் விற்பனை மட்டும், ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும்’ என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு?
யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. தற்போது, இந்தத் தேர்வாளர்களுக்கு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுகளின் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்படும்.
இதற்குப் பின், மூன்று மாத அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும் நடைமுறை, தற்போது பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த நடைமுறையில் மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும், மூன்று மாதம், அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் அவர்கள் பெறும் தர மதிப்பீடு, சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகிய இரண்டின் அடிப்படையில், அவர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்வது குறித்து, அரசு பரிசீலித்துவருகிறது.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் அடிப்படை பயிற்சியில் அளிக்கப்படும் தர மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் தருவதற்கான சாத்தியம் பற்றி ஆராயும்படி, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
|