ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் டீம் எவரெஸ்ட்!



சேவை

பிற உயிர்களிடத்தில் கொள்ளும் அன்பும், ஜீவகாருண்யமும் தான் அறம் என்று சொல்வார்கள்.  அதுபோலவேதான் நோட்டு புத்தகம் கூட வாங்க முடியாமல் வறுமையில் வாடிய தன் சக மாணவனின் துயர் பாதித்ததின் விளைவுதான் சேவை உள்ளம் கொண்ட ஒருவரைச் சமூகம் பெற்றுள்ளது.

பணம் உள்ளவர்கள் தரமான கல்வியைப் பெறுவதும், பணம் இல்லாதவர்கள் செயல்திறன் இருந்தும் அரசுப் பள்ளிகளில் பத்தோடு பதினொன்றாக சேர்கின்ற அவலத்தைப் பணம் தான் தீர்மானிக்கிறது என்கிற யதார்த்தத்தைத் சிறு வயதிலேயே உணர்ந்து டீம் எவரெஸ்ட் என்ற சமூக சேவை அமைப்பை உருவாக்கிய கார்த்திக்தான் அந்த சேவை உள்ளம் கொண்டவர்.

தன்னுடைய சக மாணவனின் வறுமையைக் கண்டு வருந்தியதோடு நின்றுவிடாமல், தன் முதல் மாதச் சம்பளத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவி செய்ய ஆரம்பித்ததன் விளைவாகத் துளிர்விட்டதுதான் தற்போது 12வருடங்களைக் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் டீம் எவரெஸ்ட் எனும் ஏழை மாணவர்களின் துயர்போக்கும் தன்னார்வ அமைப்பு.

திருவண்ணாமலையைத் தலைமையிடமாகக்கொண்டு சென்னையிலும் இயங்கும் இவ்வமைப்பானது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி கற்றுக்கொடுத்து சான்றிதழ் வழங்குவது, அரசுப் பள்ளி மாணவர்கள் தரமான கல்வியைக் கற்க உதவித் தொகைகளை வழங்குவது, சீருடைகள், நோட்டு புத்தகங்கள், இலவச டியூஷன் எடுப்பது, பெற்றோரை இழந்த ஆதரவற்ற பிள்ளைகளைப் படிக்கவைப்பது, மாணவர்களுக்குச் சமூக சேவையின் அவசியத்தையும், அறத்தையும் போதிப்பது என பல்வேறு சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இவ்வமைப்பின் கல்விச் செயல்பாடுகளை இதன் நிறுவனர் கார்த்திக் வித்யா நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு வரையிலும் படித்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் சக மாணவன் ஒருவன் வறுமை காரணமாக திடீரென்று சில நாட்கள்
பள்ளி வருவதையே தவிர்ப்பான். அடுத்து கொஞ்ச நாள் கழித்துதான் பள்ளிக்கு வருவான். அவனிடம் நோட்டு புத்தகம், பென்சில், பேனா வாங்கவே காசு இருக்காது. அவன் அப்பா சைக்கிள் கடை வைத்திருந்தார்.

நோட்டு புத்தகங்கள் அவசியம் வாங்கியே ஆகவேண்டுமெனில் அவன் சைக்கிள் கடைக்குச் சென்று சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிதான் வாங்க வேண்டும். அவனுடைய இந்த ஏழ்மை நிலை என்னுடைய ஏழாம் வகுப்பில் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பின் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மாணவனாகத் தேர்வானேன். பிறகு சென்னைக்குப் படிக்க வந்தேன்.

சென்னைக்கு வந்த பிறகு பள்ளியில் என்னுடன் படித்த அத்தனை பேரும் பொருளாதார ரீதியில் மேலோங்கி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் பள்ளியில் தகுதியான ஆசிரியர்களால் தரமான கல்வியும் வழங்கப்பட்டது. இங்குதான் பணம் இல்லாதவனுக்கு மறுக்கப்படும் தரமான கல்வியையும், பணம் இல்லாதவனின் நிலையையும், சமூக பாகுபாட்டின் யதார்த்தத்தையும் உணர்ந்தேன். அப்போதே இந்த சமூகத்திற்கு ஏதாவது பண்ண வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது’’ என்கிறார் கார்த்திக்.

எங்கிருந்து பிறருக்கு உதவும் பணி தொடங்கியது என்பதை விவரிக்கும்போது, ‘‘கல்லூரிப் படிப்பைச் சேலத்தில் தொடங்கினேன். அங்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபோது கேம்பஸ் இன்டர்வியூவிலேயே நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துவிட்டது. ‘இவ்வாழ்கையில் உன்னை வழிநடத்துவது நீ கொண்ட அறமே ஆகுக, ஆம் அவ்வாறே ஆகுக’ என்ற மேன்மையான வாசகம் தமிழில் உண்டு.

அதை மனதில் கொண்டு 2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கிடைத்த முதல் சம்பளத்தை எடுத்துக்கொண்டு முதல் வேலையாகத் திருவண்ணாமலை சென்று சிறுமூர் கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடை வாங்கித் தந்தேன். அப்படி 2006ம் ஆண்டு உருவானதுதான் டீம் எவரெஸ்ட் எனும் கல்விக்கான தன்னார்வ அமைப்பு’’ என்று  மகிழ்ச்சி பெருக தெரிவித்தார் கார்த்திக்.

டீம் எவரெஸ்ட்டின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து கூறுகையில், ‘‘கிராமப்புற சேவை மற்றும் நகர்ப்புற சேவை என இவ்வமைப்பை இரண்டாகப் பிரித்து கல்விச் சேவையை செய்யத் தொடங்கினோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்துக் கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கென நவீன கற்றல் வசதியுடன் இலவச கற்றல் மையம் உருவாக்கியது, வார இறுதி நாட்களில் எம்.எஸ்.ஆபிஸ், மைக்ரோ சாஃப்ட் வேர்டு, பவர் பாயின்ட் என ஒவ்வொரு வாரமும் கணினி பயிற்சி கொடுத்து சான்றிதழ் வழங்குவது, பெற்றோரை இழந்த மாணவர்கனுக்கு
உதவித் தொகை வழங்கி கல்வி கற்க செய்தல் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வில் 70 % மதிப்பெண் எடுத்து பெற்றோரை இழந்த அல்லது தாயையோ தந்தையையோ இழந்த மாணவர்கள் உயர்கல்வியைக் கற்க ஆண்டுதோறும் ரூ.30,000 என நான்கு ஆண்டுகள் உதவித் தொகை அளிக்கிறோம். மேலும் அவர்களுக்கு சாஃப்ட் ஸ்கில் பயிற்சி வழங்குவது, கணினி பயிற்சி, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இன்டர்ன்ஷிப் அழைத்துச் செல்வது என மாணவர்கள் இளநிலைப் பட்டம் படிக்கும்போதே சிறந்த வேலைவாய்ப்புக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ள பயிற்சி வழங்கப்படுகிறது.

கல்வி பயிற்சியோடு நில்லாமல் ஒவ்வொரு வாரமும் அவர்களைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் இன்னல்களை, சமூகப் பிரச்னைகளை உள்வாங்கச் செய்து தங்களால் இயன்ற சேவையை செய்ய வைத்து மாணவர்களுக்கு அறப்பணிகளை ப்போதிக்கிறோம்.

வருங்காலத்தில் மனிதநேயமிக்க ஒரு தூய சமூகத்தை உருவாக்குவதையே தன் இலக்காக கொண்டு செயல்படும் இவ்வமைப்பில் தற்போது இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து பத்தாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்’’ என்ற கார்த்திக் கடைசியாக ‘‘ஒரு மாணவனின் பொருளாதாரம் அவனுடைய கல்வி உரிமைக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே எங்கள் அமைப்பின் ஆசை லட்சியம்’’ என்றார் நிறைவாக.

கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில் நடந்துமுடிந்த பிள்ஸ் 2 பொதுத் தேர்வில் 70% மதிப்பெண் எடுத்த, பெற்றோரை இழந்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிக்க உதவித்தொகை பெற விரும்புவோர்கள் 8955664410 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 20ம் தேதிவரை இதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- வெங்கட்