உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகள்!பயிற்சி

விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!


சர்வதேச அளவில் உணவுப் பொருட்கள் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த முறையில்தான் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது.உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முறை மூலமே உணவுகளை டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யவும், வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பவும் முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள உணவு சார்ந்த பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப்  படிப்பு அவசியம் தேவைப்படுகிறது.

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மத்திய அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் தஞ்சாவூரில் ‘இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்’ (Indian Institute of Food Processing Technology (IIFPT) உணவு சார்ந்த பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை அளித்துவருகிறது.

வழங்கப்படும் படிப்புகள்: பி.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல் 4 ஆண்டுபடிப்பு, எம்.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல், எம்.டெக். உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு, பிஹெச்.டி உணவு பதப்படுத்தும் பொறியியல், பிஹெச்.டி உயிரித் தொழில்நுட்பம் ஆகிய ஆராய்ச்சிப் படிப்புகளையும் வழங்கிவருகிறது.

படிப்பின் தேவையும் வேலை வாய்ப்புகளும்: இந்தப் படிப்பின் நோக்கமானது, தன்னிறைவான உணவு உற்பத்தி  மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் ஆகும். அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் தானிய இழப்புக்களைக் குறைத்து மேம்பட்ட சேமிப்பு, உணவு தானியங்களின் ஆயுட்கால நீட்டிப்பு, உணவு பதப்படுத்துதல், புத்தாக்க உணவுப் பண்டங்கள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி, உணவு உற்பத்தி, சேமிப்பு, பதப்படுத்துதல் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும், உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கும் ஏற்றவாறு உணவு பொறியியல் மற்றும் அறிவியல் பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கு என்.ஏ.பி.எல். என்ற தேசிய நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற ‘ஃபுட் அலயன்ஸ் லேப்’ அமைக்கப்பட்டுள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் கலப்படம், கலப்படத்தின் தன்மை, எவை கலப்படம் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய ஆய்வுக்கூடம் உள்ளது. ஃபுட் பேக்கேஜ் அண்டு ஸ்டோரேஜ் என்ற ஆய்வுக் கூடம் உள்ளது. ‘ஃபுட்  புராசஸிங் பிசினஸ் அண்ட் ட்ரெயினிங்  இன்குபேசன் சென்டர்’ என்ற ஆய்வுக் கூடமும் உள்ளது.

இந்த ஆய்வுக்கூடங்களில் உணவு பதப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்வார்கள். உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனை செய்தல், உணவு தானிய இழப்பீட்டினைத் தவிர்க்க தொழில் நுட்ப ஆலோசனைகள் குறித்த பாடங்
களும், பயிற்சியும், உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சிகளும், உணவு மாதிரிகளுக்கான தர நிர்ணயம் செய்தல் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் படித்தவர்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வுப்பணி, உணவு தரப் பரிசோதனை மையங்களில் வேலைவாய்ப்பு, மத்திய அரசின் உணவு தரச்சான்று அளிக்கும் நிறுவனத்தில் வேலை, ‘ஃபுட் புராசஸிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ போன்ற நிறுவனங்களில் வேலை, மத்திய தானிய சேமிப்புகிடங்குகளில் வேலை, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை, மசாலாப் பொடி, ஜாம், சர்பத், ஊறுகாய், மாம்பழக்கூழ் உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை என பலவிதமான வேலைகளும் இந்தப் படிப்பின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கல்வித் தகுதி மற்றும் மாணவர் சேர்க்கை முறை பி.டெக். (உணவு தொழில்நுட்பம்) விண்ணப்பிக்க ஜெ.இ.இ - மெயின் - 2018 தாள்-I (J.E.E. - Main Paper I) விண்ணப்பித்திருக்க வேண்டும். +2-ல் பொதுப் பிரிவினர் குறைந்தது 55 விழுக்காடும், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறைந்தது 50 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெ.இ.இ மெயின் அகில இந்திய தரவரிசை அடிப்படையில், அரசின் இடஒதுக்கீட்டின்படி 60 இடங்கள் நிரப்பப்படும்.

எம்.டெக் (உணவு பதன பொறியியல்) விண்ணப்பிக்க, ஃபுட் புராஸஸிங் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் மற்றும் ஃபுட் எஞ்சினிரியங், ஃபுட் டெக்னாலஜி மேனேஜ்மென்ட், ஃபுட் புராசஸிங் மற்றும் பிரிசர்வேசன், போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி என்ற ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/பி.டெக் படித்திருக்க வேண்டும். குறைந்தது 70 விழுக்காடு மதிப்பெண் உள்ளவர்கள்தான் விண்ணப்பிக்க இயலும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதுமானது. இப்படிப்பிற்கு 20 இடங்கள் உள்ளன.

எம்.டெக் (ஃபுட் சயின்ஸ் டெக்னாலஜி) விண்ணப்பிக்க, ஃபுட் புராசஸ் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் எஞ்சினியரிங், ஃபுட் டெக்னாலஜி, ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிசியன், ஃபுட் சயின்ஸ் அண்ட் குவாலிட்டி கண்ட்ரோல், ஃபுட் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், ஃபுட் புராசஸிங் அண்ட் பிரிசர்வேசன் டெக்னாலஜி, போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி, ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி என்ற ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 70 விழுக்காடு எடுத்திருக்க வேண்டும். தேர்ச்சி முறையில் 30 விழுக்காடு இளநிலைப் பட்டப்படிப்பு மதிப்பெண்ணும், 70 விழுக்காடு முதுநிலை மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இப்படிப்பிற்கு 20 இடங்கள் உண்டு.

முனைவர் (பி.எச்டி) படிப்பிற்கு ஃபுட் புராசஸ் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் அண்ட் ஃபுட் எஞ்சினியரிங், ஃபுட் டெக்னாலஜி மேனேஜ்மென்ட், ஃபுட் பிரிசர்வேசன் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, டெய்ரி எஞ்சினிரியங், ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி, போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் புராசஸ் எஞ்சினியரிங், டெய்ரி அண்ட் ஃபுட் எஞ்சினிரியங் என்ற ஏதேனும் ஒரு பாடத்தில் எ.இ/எம்.டெக்கில் குறைந்தது 70 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தபட்ச தேர்ச்சி போதுமானது.
இளநிலை, முதுநிலை பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பிற்கு 10 இடங்கள் உண்டு.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600 மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ. 300 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 22.6.2018.

தொடர்பிற்கு:
The Director
Indian Institute of Food Processing Technology
Ministry of Food Processing Industries, Government of India
Pudukkottai Road, Thanjavur - 613 005
Tamil Nadu, India.
Contact No. : +91 4362 228155
web : www.iifpt.edu.in