எலெக்ட்ரிக்கல் கடை நடத்தலாம்…



சுயதொழில்

ரூ.55,000 சம்பாதிக்கலாம்!


லாந்தர் விளக்குகளையும், விறகு அடுப்பு களையும் இன்றைய தலைமுறையினரில் பலர் பார்த்திருக்ககூட வாய்ப்பு இல்லை. காரணம், பகல் வேளைகளில் கூட பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின்சார விளக்குகள் ஒளிர்ந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். மேலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டோம். எனவே, மின்சாதனங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தநிலையில், எலெக்ட்ரிக்கல் கடை என்பது லாபம் தரும் தொழில்தான்.

’’எலெக்ட்ரிக்கல் கடை வைப்பதில் மூன்று வகை உள்ளது. ஏதாவது ஒரு மின்சார சாதனத்தை மட்டுமே விற்கும் கடைகள்.  உதாரணம், ஃபேன்களை விற்கும் நிறுவனங்கள். இரண்டாவது வகை, ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக்கல் பொருட்களை மட்டும் விற்கும் டீலர்கள். இவைகூட கொஞ்சம் பெரிய அளவிலேயே செய்வார்கள். மூன்றாவது, எல்லாவிதமான மின்பொருட்களையும் விற்கும் சிறிய கடைகள்’’ என்று சொல்லும் வெற்றி விடியல் நிவாசன் எலெக்ட்ரிக்கல் தொழில் தொடங்குவதற்குத் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

ஒரு மெடிக்கல் ஷாப்  தொடங்க பி.பார்ம் (B.Pharm) என்னும் கல்வித்தகுதி வேண்டும். அரசு மருத்துவத் துறையிலிருந்து லைசன்ஸ் வாங்க வேண்டும்.  எலெக்ட்ரிக்கல் ஷாப்பிற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.  நேரடியாகவே ஒருவர் தொடங்கலாம். மார்க்கெட் பகுதியில் கடை போட்டிருப்பவர்கள் பதிவு செய்வதுபோல் ஒரு டிரேடராகப் பதிவு செய்துகொண்டால் போதும்.

ஜி.எஸ்.டி. இல்லாவிட்டாலும் ஒரு வியாபாரியாகப் பதிவு செய்துகொள்வது அவசியம்.கடை தொடங்க நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும்.  கடைக்கு அட்வான்ஸ் சுமார் 1 லட்சம் வரை ஆகும். இது கடை இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடலாம். அடுத்தது ஸ்டாக். பொருட்களை ஸ்டாக் வைத்துக்கொள்ள குறைந்தது ரூ.1 லட்சம், இரண்டு லட்சம் இருந்தால் நல்லது. மின் பொருட்கள் கொஞ்சம் விலை அதிகம். அதனால் இவ்வளவு தேவைப்படுகிறது. மிக முக்கியமானது ஸ்டாக்கை வைக்கும் அலமாரிகள்.

பெரும்பாலும் கண்ணாடிப் பொருட்கள். ஒரு ஹார்டுவேர் ஷாப்பில் இரும்புச் சாமான்களைக் கொட்டி வைப்பதுபோல் இவற்றை வைக்க முடியாது. அந்தந்தப்  பொருட்களை எளிதாக வைக்கவும் எடுக்கவும் வசதியான அலமாரிகளில்  வகைப்படுத்தி வைக்க வேண்டும். முன்கடையில் இருக்கும் அலமாரி பிறகு உள்ளே மீதியுள்ள ஸ்டாக்கை வைக்க அலமாரி. இந்த உட் ஒர்க் மற்றும் கணினி சேர்ந்து ரூ.1 லட்சம். ஆக மொத்தம் ரூ.4 லட்சம்.
செலவுகள்: செலவுகள் என்று பார்த்தால், பெரும்பாலும் மற்ற கடைகளைப்போல் வாடகை, மின்சாரம் போன்றவைதான். தொடர்ந்து விளம்பரம் செய்வதற்குக் கூடுதல் செலவுகள் உண்டு. புதியதாக உருவாகும் நகர்ப்பகுதிகளில் ஒரு கடை இருந்தாலும் இன்னொன்றைத் தாங்கும். ஆனால் அருகருகே இரண்டு கடைகளைத் தவிர்க்கலாம்.

புதியதாகக் கடை தொடங்கியவர் விளம்பரம் செய்வதற்கு, எளிய வழி காலம்காலமாக உள்ள துண்டுப் பிரசுரம்.  ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுப்பதற்கு ஆட்களை நியமிக்கலாம். முதலில் ஒவ்வொரு மாதமும் விநியோகிக்கலாம். பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம். இதை விட இன்னொரு சுவாரஸ்யமான யுக்தி ஒன்று உள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரைக் கொண்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் மின்சாதன பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம். மின்சார பயன்பாட்டில் உள்ள சிக்கல் ஷாக் என்ற ஆபத்து ஆளையே கொன்றுவிடும். அதனால் சிறுவர், பெரியவர் என அனைவரும் எப்படி பாதுகாப்பாக மின்சாதனங்களைக் கையாள வேண்டும் என்பதைப் பாடமாக எடுக்கலாம். குறிப்புகளைக் கொண்ட கையேடுகளை விநியோகிக்கலாம். அதில் நம் கடையின் பெயரை அச்சிடலாம். இந்தக் குறிப்புப் புத்தகத்தைப் பள்ளி வாசலிலும் விநியோகிக்கலாம்.

இதில் லாபத்துக்கான வாய்ப்பு எப்படி என்றால்,  நாம் டிரேடிங்தான் செய்கிறோம்.  அதாவது, வாங்கி விற்கிறோம். சில பொருட்
களில் 20% கமிஷன் உண்டு. சிலவற்றில் 15% கிடைக்கும். நாம் சராசரியாக 15% என்று வைத்துக்கொள்வோம். செலவு 5 முதல் 7% வரை இருக்கும். செலவு போக கையில் லாபம் குறைந்தது 7% நிற்கும். உதாரணமாக, ஒரு மாத வியாபாரம் ரூ.1 லட்சம். விற்பனை லாபம் ரூ.15000, வாடகை ரூ.5000, இதர செலவுகள் 5000 என்று வைத்துக் கொண்டால் மீதம் ரூ.5000. இது தோராயமான கணக்கு. இந்த வியாபாரத்தையே இரண்டு லட்சமாக ஆக்கினால் அதில் கிடைக்கும் மொத்த லாபமும் நமக்கே.

ஒரு மாதத்திற்கு  ஒரு லட்சம் ரூபாய் வியாபாரம் சாத்தியமா என்று பார்த்தால், ஒரு குண்டு பல்ப் ரூ.15. டியூப் லைட் மட்டும் ரூ.40. பட்டியோடு சேர்த்து ரூ.200. எல்.இ.டி. பல்ப் ரூ.70 முதல் தொடங்குகிறது. எல்.இ.டி. டியூப் லைட்  ரூ.450 முதல் விற்கப்படுகிறது. இவைதான் அதிகமாக விற்கும் பொருட்கள். இதைத் தவிர என்னென்ன பொருட்களை விற்கலாம் என்றால், இன்வேட்டர் இப்போது பலரும் பயன்படுத்தும் ஒன்று. இதில்
பேட்டரி ரீசார்ஜ் முதல் சர்வீஸிங் வரை நமக்கு வியாபார வாய்ப்பு இருக்கிறது.

வீட்டிற்கு அருகே ஒரு கடை இருப்பதையே எல்லோரும் விரும்புவர். பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றிற்கு மின் அலங்காரம் இப்போது மிகவே அதிகமாக சூடுபிடித்திருக்கிறது. இந்தச் சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் நமது வாடிக்கையாளர்கள். எமெர்ஜன்சி லைட்டும் சோலார் லைட்டும் இன்னும் சில வருடங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். சிறிய அளவு ஜெனரேட்டரை வாடகைக்குக்கூட விடலாம். மாத வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் நிறுவனங்கள் இருக்கின்றன. முன்பே கூறிய மூன்று நிலையில் இரண்டு நிலை விற்பனை குறித்த தோராயமான ஒரு புள்ளிவிவரத்தை இப்போது பார்ப்போம்…

முதல் வகை (ஒரே பொருளை மட்டும் விற்பனை செய்வது)

* விற்பனைத் தொகை      - ரூ.1,00,000
* விற்பனை லாபம்     - 15%  (ரூ.15,000)
* மாதச் செலவு     - ரூ.10,000.
* மீதம்     - 5,000

இரண்டாம் வகை (ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிகல் பொருட்களை மட்டும் விற்பது)

* விற்பனைத் தொகை     - ரூ.5,00,000
* விற்பனை லாபம்     - 15%  (ரூ.75,000)
மாதச் செலவு ரூ.20 000 (வாடகை போன்ற செலவுகள் அப்படியே இருக்கும். பெட்ரோல் போன்ற செலவுகள் கூடியிருக்கும்)
* மீதம்    - ரூ. 55,000.

இங்கே நாம் கணக்கில் எடுத்திருப்பது இரண்டு வகையான விற்பனை. ஒன்று டிரேடிங். இன்னொன்று சுற்றிலும் உள்ள கடைகளுக்கு எல்.இ.டீ பல்பையும் டியூப் லைட்டையும் விற்பது. அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால் கூடுதல் வியாபாரம் கிடைக்கும். விலையில் சலுகை தரவேண்டி யிருக்கும். ஆனாலும் நேரடி லாபம் 7% கிடைக்கும்.

நம் பொருளை வாங்க 25 கடைகள் இருந்தால் போதும். வியாபாரத்தை ஆரம்பித்துவிடலாம். ஒரு கடைக்கு மாதத்திற்கு ரூ.10,000 விற்பனை செய்யலாம். ஒரு கடைக்கு பல்பில் 50, டியூப் லைட்டில் 50 என சப்ளை செய்து ஆரம்பிக்கலாம். ஃபேன் போன்றவைகளும் இதில் அடக்கம். கொஞ்சம் கொஞ்சமாக மாத விற்பனை ரூ.10,000 என்று உயர்ந்தாலே 2,50,000 ஐ எட்டலாம்.  அதன் பின்னர் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்” என்றார்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்