இந்திய கராத்தே பயிற்சியின் நிலையும் தரமும்!



அலசல்

கராத்தே… இந்த வார்த்தை சொல்லும்போதே அப்படி ஒரு கம்பீரமும், தன்னம்பிக்கையும் நமக்குள் உருவாகும். இதை தற்காப்பு கலை என்று சொல்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை, தைரியம், உடல் ஆரோக்கியம், வலிமை இப்படி அனைத்தையும் கொடுக்கும் இந்தக் கலை.

கராத்தே கலைக்கான பயிற்சியும், பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பும் எந்த அளவிற்கு இந்தியாவில் இருக்கின்றது என்ற ஒரு கேள்வி தோன்றியதன் காரணமாகப் பதிலைத் தேடியபோது சிக்கியவர் டோனால்ட் தைசன்தான். இவர் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் ஜப்பான், டோக்கியோவில் முறைப்படி கராத்தே பயிற்சி மேற்கொண்டு ஐந்தாம் டான் பிளாக் பெல்ட் முடித்து திரும்பி யுள்ளார் இந்த சென்னை இளைஞர்.

“இந்தியாவில் வாங்கும் பிளாக் பெல்ட்கள் இந்தியாவில் மட்டும்தான் செல்லும், பார்டரைத் தாண்டினாலே அது வெறும் கலர் பெல்ட்தான்”என ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தார் தைசன். அப்படியென்றால் நமக்கு உலக கராத்தே போட்டிகளில் இடமே இல்லையா?

“இப்போதைக்கு இல்லை. இங்கேயும் கராத்தேவை முறைப்படுத்தினால் எதிர்காலத்தில் வரலாம். சரி யோகா, கலரி இது எல்லாமே இந்தியாவுல பிறந்த கலைகள்தானே. இதைப் போய் நான் அமெரிக்காவிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ கத்துக்க முடியாது. யோகா கத்துக்க எப்படி பலரும் இந்தியா வருகிறார்களோ அப்படிதான் கராத்தேவுக்குப் பிறப்பிடம் ஜப்பான்தான். ஜப்பான்ல பழங்காலத்துல விவசாயத் திருட்டு அதிகமா இருந்துச்சு.

அதைத் தடுக்க வேண்டிதான் விவசாயிகள் ஒண்ணுசேர்ந்து எதாவது ஒரு தற்காப்புக்கலை கத்துக்க விரும்பினாங்க. அப்படி உருவானதுதான் கராத்தே. அப்படி பூர்வீகமா உருவான கராத்தேவை அங்கேயே போய் கத்துக்கிட்டு முறைப்படி தேர்வுகளைக் கடந்து நின்னாதான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். உலகப் போட்டிகள் சாத்தியப்படும்!”

அப்படியென்றால் கராத்தேவைப் பொறுத்தமட்டில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது, என்ன செய்தால் நாமும் உலகப் போட்டிகளில் கால்பதிக்கலாம்?

‘‘முறைப்படுத்தணும். ஒவ்வொரு வருஷமும் எண்ணிக்கையே இல்லாம கராத்தே தேர்வுகள் நடக்குது. மாதத்துக்கு இரண்டு மூன்று உலக சாம்பியன் கராத்தே போட்டிகள்கூட நடக்குறதுதான் இதுல சோகம்.

இதெல்லாம் ஒரே தேர்வா மாறி இந்தியாவுக்கென ஒரு கராத்தே அமைப்பு செயல்படணும். இப்படி முறைப்படுத்தினால் ஜப்பான் மாஸ்டர்களே நேரடியா வந்து கராத்தேவை நமக்கு சொல்லிக் கொடுப்பாங்க!”கராத்தேவுக்கு அந்த அளவுக்கு எதிர்காலம் இருக்கா?

‘‘கராத்தேவுக்கு எதிர்காலம் இருக்கா… இல்லையா? என்கிற கேள்வியை விட கராத்தேவில் வாழ்க்கை இருக்கா? என்று வேணும்னா கேட்கலாம். நீங்க தொடர்ச்சியா ஜிம்ல உடற்பயிற்சி செய்யலாம், இல்லை பல கிலோ மீட்டர் ஜாகிங் ஓடலாம், ஏன் கஷ்டப்பட்டு 100 கி.மீ கூட சைக்கிள் மிதிக்கலாம்.

ஆனால், இது எல்லாமே ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மனது ஒத்துழைக்கற அளவுக்கு உடல் ஒத்துழைக்காம கொஞ்சம் கொஞ்சமா ஓய்வுக்குக் கொண்டுபோயிடும். ஆனால், கராத்தேவின் நிலை வேற. எந்த அளவுக்கு உங்களுக்கு வயசாகுதோ அந்த அளவுக்கு உங்கள் உடலும் மனதும் இளமையாக இருக்கும். ஜப்பான்ல நீங்க கராத்தே கத்துக்கிட்டா 35 வயதுக்கு மேலதான் உங்களால ஐந்தாம் டான் லெவலே தொடமுடியும்.

கிராண்ட் மாஸ்டர் பட்டமெல்லாம் உங்களுக்கு ஐம்பது வயதுக்கு அப்புறம்தான் சாத்தியப்படும். ஆனால், நான் 27 வயதில் ஐந்தாம் லெவல் டான் முடிச்சிட்டேன். அடுத்து ஆறாம் லெவல் போக எனக்கு வயது பத்தாதுன்னு காத்திருக்க சொல்லிட்டாங்க. ஏன் என்னுடைய அப்பாவுக்கு 60 வயசுன்னு யாருமே சொல்லமுடியாது.

அவ்ளோ ஆரோக்கியமா பாடிபில்டர் மாதிரி இருந்தார். அவர் இறந்தது கூட ஒரு சாலை விபத்துலதான். சாகுற வரைக்கும் ஒரு காய்ச்சல், ஜலதோஷம் கூட அவருக்கு வந்தது இல்லை!” சரி அப்போ இந்தியாவில் தெருவுக்கு தெரு கராத்தே வகுப்புகள், பயிற்சிகள் நடக்குதே? அவையெல்லாம் எப்படிப்பட்டவை?

“இந்தியாவுலயே முறைப்படி கராத்தே கத்துக்கொடுக்கற மாஸ்டர்களும் இருக்காங்க. ஆராய்ந்து பார்த்தா அவங்க பரம்பரையோ அல்லது சொல்லிக்கொடுத்த குருவோ எங்கேயோ அவங்களுக்கு ஜப்பான் முறைகள் தெரிஞ்சி அதன்படி பயிற்சி எடுத்திக்கிட்டவங்களா இருப்பாங்க. ஆனால், சிலர் கராத்தேவுக்கு பதிலா கோர் ஒர்க்-அவுட்தான் நடத்திகிட்டு இருக்காங்க. உங்க குழந்தைகளுக்கு தற்காப்பை விட உடல் ஆரோக்கியமும், தன்னம்பிக்கையும்தான் தேவை. அதுதான் கராத்தேவின் அடிப்படை நோக்கமே.

இங்கே சண்டைபோட சொல்லித் தருவாங்க… ஆனால், எதிரி என்ன நோக்கத்துடன் எப்படித் தாக்குதல் நடத்தப்போறான் என்கிற மாதிரியான மனதிற்கும் சேர்த்த பயிற்சிகள் கிடையாது. எதிரி இப்படித் தாக்கினா அப்படி அடி இதுதான் இந்திய கராத்தே.

ஆனால், கராத்தே எதிரி தூரத்துல வரும்போதே அவனுடைய நடவடிக்கையை மையமா வெச்சு இவன் இப்படிதான் நம்மை தாக்கப்போகிறான் என்பதையே சொல்லிக் கொடுக்கறதும் அதுக்கான பயிற்சிகள் கொடுக்கறதும்தான் கராத்தேவின் உண்மையான நோக்கம்!” கராத்தேவில் ஏதேனும் ஒரு ஸ்டைல் பற்றிய சிறப்பம்சத்தை சொல்லுங்களேன்?

‘‘இந்தியாவுல மட்டும் ஆயிரக் கணக்கான ஸ்டைல் இருக்கு. ஆனால், உலகப் போட்டிகளுக்கு நாலு மேஜர் ஸ்டைல்தான் உண்டு. அதுல இந்தியாவுல அதிகம் பரிச்சயம் ஆகாத ‘Wadokai’பத்தியே சொல்றேன். நான் இந்த ஸ்டைல்லதான் ஐந்தாம் டான் லெவல் முடிச்சேன். மொத்தம் நாலு மேஜர் ஸ்டைல்கள். அதுல ஷோடோகானும் (Shotokan) - ஜுஜுட்சுவும்(Jujutsu) சேர்ந்ததுதான் இந்த ‘Wadokai’ ஸ்டைல். மேலும் ஜுஜுட்சுவும் இன்னொரு தற்காப்புக் கலை. கராத்தேவின் இந்த ஸ்டைல்ல மட்டும்தான் ஜுஜுட்சு சேர்ந்து வரும்.

அதாவது, கராத்தேவைவிட வேகமான டெக்னிக் ஸ்டைல். இதைக் கற்றுக்கொள்வது சுலபம், ஆனால் ரிஸ்க் அதிகம். இந்த ஸ்டைல்ல நீங்க லெவல் கடந்து JKFஇல்(Japan Karate Foundation, Tokyo) சாதனை படைக்கிறதுதான் சிரமம்.

இதை செய்ததினாலதான் எனக்கு வயதே குறைவா இருந்தாலும் வேற வழியில்லாம ஐந்தாம் டான் ரேங்க் கொடுத்தாங்க. இந்த ஸ்டைல் முடிச்சதுனால நானும் ஒரு ஜப்பானைச் சேர்ந்த மாஸ்டரும் இணைந்தா கராத்தே தேர்வுகளை அதிகாரப்பூர்வமா இந்தியாவுல நடத்தலாம்.

அதுதான் இந்த ஸ்டைல் கொடுத்திருக்கிற அங்கீகாரம். இப்படி இன்னும் கராத்தேவுல தெரிஞ்சுக்க நிறைய விஷயம் இருக்கு. ஆனால், இதையெல்லாம் தாண்டி கராத்தே மூலமா முதல்ல ஒழுக்கமும், வாழ்க்கையின் முக்கியத்துவமும் சொல்லிக் கொடுக்கறதுதான் எங்களைப் பொறுத்தவரை ஸ்பெஷல் ஸ்டைல்!”

கராத்தேவில் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கின்றன, எப்படிப்பட்ட கராத்தே வகுப்புகளைத் தேர்வு செய்தால் கராத்தேவில் மாஸ்டர் ஆகலாம்?‘‘கராத்தே என டைப் செய்தால் அவ்வளவு தகவல்கள் இணையத்துல கொட்டிக் கிடக்கின்றன. ஒரு மாஸ்டரை நாம் தேர்வு செய்யும்போது அவர் எப்படிப்பட்ட ஸ்டைல்கள் கற்றுக்கொடுக்கிறார், அவருடைய பூர்வீகம் என்ன, என்ன ஸ்டைல் அவருடைய ஸ்பெஷல், இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து கராத்தே வகுப்புகளைத் தேர்வு செய்வது நல்லது.

இன்னைக்கு எல்லாருக்குமே ஆரோக்கியமா இருக்கணும், பாதுகாப்பா இருக்கணும் என்கிற மனநிலை ரொம்ப அதிகமாகிட்டு வருது. எல்லாருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் முக்கியத் தேவையா இருக்கு.

இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகளும் இருக்கு. ஏன் இன்னைக்கு பல ஸ்கூல்கள் கராத்தே வகுப்புகளை முக்கியப் பயிற்சியா நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. நாம செய்ய வேண்டியது ஒண்ணுதான். ஆரம்பமே சரியான மாஸ்டரைத் தேர்வு செய்து பயிற்சி எடுத்துக்கிட்டா கராத்தே தன்னம்பிக்கை தைரியம் மட்டுமில்லை, வருமானமும் கொடுக்கும்!” 

- ஷாலினி நியூட்டன்