வெளி மாநிலங்களில் கேள்விக்குறியாகும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு!



சர்ச்சை

நிபுணர்களின் கருத்து…


உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதைவிட வெளி மாநிலங்களில் படிப்பதுதான் தமிழக மாணவர்களுக்குச் சவாலாக அமைந்துவிடும்போல் தெரிகிறது. அதற்குக் காரணம் மாணவர்களின் தற்கொலை என்று சொல்லப்படும் மர்ம மரணங்கள்.

சமீப காலமாகவே வெளிமாநிலங்களில் தங்கி உயர்கல்வி பயின்றுவரும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அதிகரித்துவருகிறது. இதற்கு முன் 2016-ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் விஷ ஊசி செலுத்தி படுகொலை செய்யப்பட்டார்.

அதேபோல், திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்துவந்தார். கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த அவர் 2018ம் ஆண்டு விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில்  இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டாரா? என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை.

தற்போது, சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ மேற்படிப்பு பயின்றுவந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துவருகிறது.

அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து உயிரிழப்பதைத் தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் மாணவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டோம். அவர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

டாக்டர் த.முஹம்மது கிஸார்: வெளிமாநிலங்களுக்கு உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் கொலை, தற்கொலை நடந்துகொண்டிருப்பதைத் தற்செயலான சாதாரண நிகழ்வு என எடுக்க இயலாது.

சமீபத்தில் நடந்த தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் சில விஷயங்கள் பொதுவானவை. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து வடமாநில பிரபல மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உயர்கல்வி பயில, தகுதியின் அடிப்படையில் தேர்வான பொருளாதார மற்றும் சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள்.

இதில் கவனங்கொள்ள வேண்டிய விஷயம், இந்த இடங்கள் காலியானால், இதை மற்ற மாணவர்களைக்கொண்டு நிரப்ப வாய்ப்புள்ளதா? என்பதைத் தெரிந்து, காத்திருப்பில் இருந்து இந்த இடத்தை நிரப்ப உள்ள மாணவர்களின் பின்புலத்தையும் ஆய்வு செய்யவேண்டும். பொதுவாகத்
தமிழக மாணவர்கள் வடமாநிலத்தில், பூகோள ரீதியாக வேறுபாட்டுடன் நோக்கப்படுவதும் கவலைக்குரியதே. அவர்களின் சமூக சூழலும், அவர்களை ஏளனமாகப் பார்க்கவும் நடத்தவும் வைக்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் யாருமே சமூக பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இல்லை என்றபோதும், இதில் சமூகரீதியான சகிப்புதன்மையின்மையும் சேர்ந்தே உள்ளது. முதுகலை படித்து அறிவை வளர்ப்பதோடு, மனிதநேயத்தையும், சமூக நீதியையும் தங்களுக்கள் வளர்த்துக்கொண்டாலே ஒழிய இந்த நிகழ்வுகளைத் தடுப்பது கடினம்.

அரசும் சமூகநீதி சார்ந்த சட்டங்களைக் கடினமாக்கி, தவறிழைத்தவர்களைக் கடுமையாக தாமதமின்றி தண்டித்தால் மட்டுமே, தவறிழைக்க நினைப்பவர்கள் இக்குற்றங்களைச் செய்ய நினைக்கமாட்டார்கள்.சண்முக சுந்தரம், கல்வியாளர்: நல்ல கல்வி கிடைத்தால்தான் நமது பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பும் பெற்றோர்கள் பள்ளிக்கல்விக்கே இன்று பல லட்சம் செலவழிக்கத் தயாராகிவிடுகின்றனர்.

குறிப்பாக, உயர்கல்வி  எனும்போது, பெற்றோர்களின் விருப்பம் மாநிலத்தின் சிறந்த கல்விநிலையங்கள் மட்டுமே. அதில் இடம் கிடைக்காதபோது அடுத்தக்கட்ட கல்விநிலையங்களைக்கூட பலர் விரும்புவதில்லை.

அவர்களின்  தேடல் வெளிமாநிலம் அல்லது வெளிநாடு என்று மாறிப்போய்விடுகிறது. மேலும், குறிப்பிட்ட வேலைவாய்ப்புப் படிப்புகளைக் குறிவைக்கும் மாணவர்களும் தமிழகத்தில் அப்படிப்பு இல்லையெனும்போது, வெளிமாநிலம் அல்லது வெளிநாடு என்பதே அவர்களின் ஒரே தேர்வாகும். இங்கேதான் சிக்கல்கள் எழுகின்றன.

அந்தக் குறிப்பிட்ட கல்விநிலையத்தில் என்னென்ன வசதிகள், பிரச்னைகள், குறைபாடுகள் உள்ளன என்பது குறித்து நேரில் சென்று பார்க்க வாய்ப்பு இருப்பதில்லை. அதற்கான  மெக்கானிசமும் இன்று கிடையாது. கல்விநிலையத் தேர்வு அல்லது படிப்புத் தேர்வில் அரசு எந்த வழிகாட்டலும் செய்வதில்லை. அதை மாணவர்களின், பெற்றோர்களின் விருப்பமென்று கூறி அரசு ஒதுங்கிக்கொள்கிறது என்பதால், படிப்புக்காக வெளிமாநிலம் செல்லும் மாணவர்களின் பட்டியலைக்கூட எந்த மாநில அரசும் பராமரிப்பதில்லை.

தகுதியான கல்விநிலையம் மட்டுமல்லாது, மார்க்கெட்டிங்கில் முன்னணியில் இருக்கும் கல்லூரிகளும் மாணவர்களை எளிதில் ஈர்த்துவிடுகின்றனர். ஆனால், அங்கு போதுமான வசதிகளோ, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளோ இல்லாதபோது ஏமாற்றப்பட்டதாகவும் எதிர்காலம் சிக்கலாவதாகவும் மாணவர்கள் முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

வெளிமாநிலத்தில் பயிலும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அவர்களின் சொந்தப் பிரச்னைகள் என்றே ஆகிவிடுகிறது. பெற்றோர்களுக்கு அதில் போதிய அக்கறையில்லாமல் இருப்பது அல்லது மாணவர்கள் மறைப்பது ஒருபுறம்... மற்றொரு புறம் மாணவர்கள் சொன்னாலும் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம், தாங்கிக்கொள் அல்லது உன் வாழ்வே நாசமாகிவிடும் என்று சொல்லும் சூழலில்தான் பெற்றோரும் இருக்கின்றனர். பெற்றோர்களின் இயலாமை மட்டுமல்ல இது. அக்கல்வி நிலையம் உள்ள மாநில அரசுக்கும் சரி, தமிழக அரசுக்கும் சரி இதில் பொறுப்பே இல்லாத சூழல்தான் இன்றுள்ளது.

வெளிமாநிலத்தில் படிக்கும் மாணவர்களின் பட்டியலை அரசு பராமரிப்பது, அம்மாணவர்கள் புகார் அளித்தால், அம்மாநில அதிகாரிகளைத் தொடர்புகொண்டு  அதைச் சரி செய்வதற்கான ஒரு ஆணையத்தைத் தமிழக அரசு உருவாக்குவது, என்றிருந்தால், தரமற்ற கல்விநிலையங்களைக்கூட களைந்துவிடலாம். மொழி, இனப் பாகுபாடுகள் குறித்த பிரச்னைகளை அரசின் உதவியோடு அணுகும்போது எளிதில் தீர்வு கிடைக்கும். அத்தோடு,  புகார் அளித்த மாணவர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைக்கும்.

அருமைநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகம்: வெளிமாநிலத்தில் படிக்கும் மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இங்கே ஒரு டிபார்ட்மென்டை ஏற்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களில் எத்தனை பேர் எங்கே என்ன படிக்கிறார்கள் என்பதை அந்த டிபார்ட்மென்ட் கேட்டு வாங்கி பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

சேர்ந்ததில் இருந்து படித்து முடிக்கும் வரை அவர்களோடு தொடர்பில் இருந்து பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருப்பதாகத் தெரியவந்தால் அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய காவல்துறையையோ அல்லது கல்வித்துறையையோ அணுகி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அத்தோடு விட்டுவிடாமல் அந்தப் பிரச்னை பற்றிய தொடர்பிலும் இருக்க வேண்டும். இது அரசு செய்ய வேண்டியது.

அடுத்து, பெற்றோர்களைப் பொறுத்தமட்டிலும், வெளிமாநிலங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க அனுப்பும்முன் அங்குள்ள சூழ்நிலை எப்படி இருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கு ஒத்துப்போகுமா, அவர்களின் கலாசாரம் எப்படி என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். உயர் படிப்புக்காகத்தானே அதனால் அங்கு போய் சேரட்டும் என விட்டுவிடக்கூடாது.

 தங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், கல்வியாளர்களை அணுகி தெரிந்துகொண்டு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே பிள்ளைகளை அனுப்ப வேண்டும். இப்படி நாமும் விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே வெளிமாநிலங்கள் மட்டுமல்ல வெளிநாட்டுக்கே சென்றாலும் பாதுகாப்போடு படிப்பை முடித்து மாணவர்கள் திரும்பி வருவார்கள்.

- தோ.திருத்துவராஜ்