+2 உயிரி-விலங்கியல் முழு மதிப்பெண் பெறும் வழிகள்!



+2 பொதுத் தேர்வு டிப்ஸ்              

+2படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்க அடிப்படையான பாடங்களில் ஒன்று உயிரியல். அந்த உயிரியல் பாடத்தில் இரண்டாம் பகுதியாக உள்ள விலங்கியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும்பட்சத்தில் மருத்துவப் படிப்புக்கான தேர்வை எதிர்கொள்ளவும் அது உதவியாக இருக்கும். அதனடிப்படையில் உயிரி-விலங்கியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

“உயிரி தாவரவியலுக்கு 75 மதிப்பெண்கள் போக, உயிரியலில் மிச்சமிருக்கும் 75 மதிப்பெண்கள் விலங்கியல் பாடத்திலிருந்து கேட்கப் படுகின்றன. உயிரி விலங்கியலில் மொத்தமே ஏழு பாடங்கள்தான் உள்ளன. ஆனால், இது மாணவர்களின் சென்டம் கனவை ரொம்பவே அசைத்துப் பார்க்கும் ஒரு சப்ஜெக்ட். காரணம், இதில் வரிக்குவரி முக்கியமான பாயின்ட்கள் இருப்பதால் புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது.

எனவே, கவனமாகப் படித்தால் மட்டுமே இதில் முழு மதிப்பெண்களைப் பெறமுடியும்...” என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியர் கே.கே.தேவதாஸ். அவர் தரும் டிப்ஸ்...பொதுவாக சென்டம் கனவைத் தகர்ப்பது ஒரு மதிப்பெண் கேள்விகளே! இதில் கேட்கப்படும் 16 வினாக்களில் 8 மட்டுமே பாடங்களின் பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்படுகின்றன. ஏனைய 8 வினாக்கள், பாடத்தின் உள்ளிருந்தோ, பாட வினாக்களைச் சற்றே மாற்றியோ அமைகின்றன.

முதல் பாடத்திலிருந்து நான்கு ஒரு மார்க் கேள்விகள் வரும். 2, 6வது பாடங்களிலிருந்து தலா 3 கேள்விகளும், 3,7வது பாடங்களிலிருந்து தலா ஒன்று, 4 மற்றும் 5வது பாடங்களில் இருந்து தலா 2 என்பதாக ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், முழு மதிப்பெண்களைப் பெற ஒரே வழி, புத்தகத்தின் பின்பக்கம் உள்ள ஒரு மார்க் கேள்விகள், முந்தைய வருட கேள்வித்தாள்களை ஒருமுறை முழுமையாகப் புரட்டுவதுதான்.

மூன்று மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை 12 கேள்விகளுக்கு எட்டிற்கு விடையளிக்க வேண்டும். இதில் 1, 3, 6வது பாடங்களிலிருந்து தலா 2 கேள்விகள் கேட்பார்கள். 4வது பாடமான தற்கால மரபியலில் மூன்று கேள்விகள் வரும். 2, 5, 7வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி. இதிலும் முழு மதிப்பெண்களைப் பெற பழைய கேள்வித்தாள்களைப் படிப்பதுதான் சிறந்த வழி. ஏனெனில் ரிபீட் ஆன கேள்விகள்தான் மீண்டும் மீண்டும் வருகிறது.

அதே சமயம் ஒருமுறை கேட்கப்படும் கேள்வியை அடுத்த முறைப்படியே கேட்கமாட்டார்கள். ஆனால், அதனோடு தொடர்புள்ள ஒரு கேள்வியைக் கேட்பார்கள். இதில் நான்காவது பாடத்தை நன்றாகப் படித்துக்கொண்டால் மூன்று வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம். இதில் முக்கிய கேள்வி என மூன்று மார்க்கில் 35 தான் உள்ளன.

அடுத்ததாக 1, 3, 6வது பாடங்களில் மொத்தமாக நூறு கேள்விகள் இருக்கின்றன. இவற்றைப் படித்தால் ஒன்பது கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்துவிடும். இதோடு 7வது பாடத்தில் முக்கியமான கேள்விகள் 12தான் இருக்கின்றன. இவற்றையும் படித்தால் கூடுதல் நம்பிக்கையோடு மூன்று மார்க் வினாக்களுக்குச் சுலபமாக விடை எழுதலாம். 3 பாயின்டுகள் எழுதினால் முழு மதிப்பெண்கள் என்ற
போதும், கூடுதலாக ஒன்றிரண்டு எழுதுவது நல்லது.

‘என்றால் என்ன?’, ‘வகைகள் கூறுக’ என்பது போன்ற கேள்விகளில் உதாரணம் கேட்கவில்லை என்றபோதும், அவற்றை எழுதுவது அவசியம். படம் வரைந்து பாகம் குறிப்பதில், 4 பாகங்கள் போதுமென்றாலும் அவற்றை 6-ஆக குறிப்பது நல்லது. 3 மதிப்பெண் பகுதியின் அனைத்து வினாக்களும் விடை தெரிந்ததாக இருப்பினும், அவற்றில் நன்கு தெரிந்த முழு மதிப்பெண்ணுக்கு வாய்ப்புள்ள வினாக்களுக்கு மட்டுமே பதிலளிப்பது நல்லது. 

அடுத்ததாக ஐந்து மதிப்பெண் வினாக்கள். ஐந்து மதிப்பெண் வினாக்கள் பகுதியில் 5 கேள்விகள் கேட்கப்படும். இதில் மூன்றுக்கு விடையளிக்க வேண்டும். வினா எண் 31 கட்டாய வினாவாகக் கேட்கப்படுகிறது. 3வது பாடத்திலிருந்து இக்கட்டாய வினா அமையும்.

இப்பாடத்திலிருந்து நேரடியான 5 மதிப்பெண் கேள்வியைக் கேட்பதை விட, அவ்வினாவினைச் சற்றே மாற்றிக் கேட்பதும், 2 மூன்று மதிப்பெண் கேள்விகளை இணைத்துக் கேட்பதும் உண்டு. எனவே, அதற்கேற்றவாறு கவனமாகப் படியுங்கள். 1, 2, 4, 7 ஆகிய பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படும்.

இந்த நான்கில் இரண்டு கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டும். இதில் 2வது பாடமான நுண்ணுயிரியல் எளிமையானது. இந்தப் பாடத்தில் உள்ள முக்கியமான 9 கேள்விகளையே திரும்பத் திரும்ப பல தேர்வுகளில் கேட்டுள்ளனர்.

இதிலிருந்துதான் மறுபடியும் கேள்விகள் வரும். இதைப் படித்தால் ஒரு கேள்விக்கு நிச்சயம் பதிலளிக்க முடியும். அடுத்து, நான்காவது பாடத்தில் 12 கேள்விகள்தான் ஐந்து மதிப்பெண் வினாக்களாக உள்ளன.

இந்தப் பாடத்தையும் படித்தால் ஐந்து மதிப்பெண் பகுதியில் முழு மதிப்பெண்களையும் பெற்று விடலாம். இருந்தும் சில வேளைகளில் கஷ்டமான கேள்விகள் வந்தால் என்ன செய்வது? இதற்காக 1, 7வது பாடங்களில் உள்ள எளிதான ஐந்து மதிப்பெண் வினாக்களைப் படித்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக உள்ள பத்து மதிப்பெண் வினாக்களில் நான்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் இரண்டிற்கு விடையளிக்க வேண்டும். இதில், முதல் பாடத்திலிருந்து மட்டுமே இரண்டு கேள்விகள் கேட்கப்படுகிறது.

அடுத்து 5, 6வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி. முதல் பாடத்தில் அதிக பக்கங்கள் இருக்கின்றன. எனவே, குருதிச் சுழற்சி என்கிற தலைப்பு வரை, அதாவது, முதல் 43 பக்கங்கள் கொஞ்சம் தெளிவாகப் படித்துக்கொண்டால் ஒரு பத்து மதிப்பெண்ணுக்கான விடையை எளிதாக எழுதிவிடலாம்.

இந்தப் பக்கங்களுக்குள் 12 கேள்விகள் பத்து மதிப்பெண்ணில் இருக்கிறது. நிச்சயம் இதிலிருந்து ஒரு கேள்வி வரும். அடுத்த கேள்வியை 5வது பாடத்தில் எழுதுவது போல் பார்த்துக்கொள்ளலாம். ஏனெனில் சுற்றுச்சூழல் அறிவியல் என்கிற இந்தப் பாடத்தில் பத்து மதிப்பெண் கேள்விகள் 12தான் இருக்கின்றன. எளிமையான பாடம்.

எழுதுவதும் சுலபம். இருந்தும் 6வது பாடமான பயன்பாட்டு உயிரியலில் உள்ள முக்கியமான கேள்விகளைப் பார்க்க வேண்டியது அவசியம். பத்து மதிப்பெண் கேள்விகளை எழுதும்போது குறுந்தலைப்புகளை அடிக்கோடிட்டு எழுத வேண்டும்.

விலங்கியலில் சென்டம் பெற மாணவர்கள் ப்ளூ பிரின்ட்டை முதலில் பார்த்துப் படித்துத் தொடங்க வேண்டும். அடுத்ததாக முந்தைய கேள்வித்தாள்கள் + புக் பேக் கேள்விகளை முழுவதுமாகப் படித்திருக்க வேண்டும். தெளிவான கையெழுத்து அவசியமானது. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தைச் சரியாகக் கவனிப்பது, உடனுக்குடன் அவற்றைப் படிப்பது, படித்ததைச் சிறு தேர்வுகளில் அடிக்கடி எழுதிப் பார்ப்பது. இவையெல்லாம் இருந்தால் சென்டம் உங்கள் வசமாகிவிடும்.