மாணவர்களின் தவறான உணவு முறை!



ஆலோசனை

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்


வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக உள்ளத்திற்கு ருசியாகச் சாப்பிட மறந்துவிட்டது இளைய தலைமுறை. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு ஒரு குளிர்பானம், கூடுதலாக ஒரு பர்கருடன் மதிய உணவை முடித்துக்கொள்ளும் மாணவ கூட்டத்தைப் பார்க்கும்போது மனசு பதறுகிறது. ‘உடலினை உறுதி செய்ய வேண்டிய எதிர்கால தலைமுறை உணவு விஷயத்தை உதாசீனப்படுத்தி விட்டுப் போய்க் கொண்டிருப்பது ஆரோக்கியமானது அல்ல.

நாம் உண்ணும் உணவு நம் உடலில் தேய்ந்து போகும் திசுக்களைப் புதுப்பிக்கும் வேலையைச் செய்கிறது. மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கியமான உடல் உறுப்புகள் அதனதன் வேலையைச் செய்ய பல்வேறு விதமான சத்துகள் தேவைப்படுகின்றன. இந்த சத்துகளை எல்லாம் நாம் சாப்பிடும் உணவு வழியாகத்தான் பெற வேண்டும். நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் தேவைப்படுகிற அனைத்துச் சத்துகளும் கிடைக்கும் வகையில் உணவு முறை இருக்க வேண்டும்.

அதிலும் குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் உண்ணும் உணவுகள் மூலம்தான் உடலினை வலிமைபெறச் செய்யமுடியும். வயதான காலத்தில் எவ்வளவு சத்துப்பொருட்களை உண்டாலும் அதை எடுத்துச் செலவழிக்கிற நிலையில் உடல் உறுப்புகள் இருக்காது.

இவற்றையெல்லாம் இளைய தலைமுறை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டது. இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை அல்லது ஒரு பிரட் ஆம்லேட் இதெல்லாம் இல்லாத பட்சத்தில் அரை கப் பால். இத்துடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் காலை உணவு முடிந்துவிடுகிறது.

நாகரிகம் என்ற போர்வையிலும்,  ஃபேஷன் என்ற பெயரிலும் இன்றைய மாணவர்கள் மேற்கத்திய நாடுகளின் உணவு முறையைத் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். குளிர்ப் பிரதேச நாடுகளான மேலைநாடுகளின் உணவு வகைகள் கொழுப்புச்சத்தை அடிப்படையாக கொண்டவை. வெப்ப மண்டல நாடான நம் நாட்டிற்கு மேற்கத்திய உணவு வகைகள் கொஞ்சம் கூட பொருந்தாது.
எதுதான் சிறந்த உணவு?

நம் நாட்டுப் பாரம்பரியமான உணவு வகைகளே மிகச் சிறந்த உணவுகள்தான். பழைய உணவு முறைகளைக் கடைப்பிடித்தாலே உடலும், உள்ளமும் சுத்தமாகிவிடும்.சைவ உணவே மிகச் சிறந்த உணவு என்கிறார் வள்ளலார். சைவ உணவு உண்பதால் உடலில் அளவிற்கு அதிகமான புரதமும், கொழுப்பும் சேராது. மாணவர்களுக்குக் கொழுப்புச் சத்து சேர்வதால் தான் சிறு வயதிலேயே அதிக எடையுடன் காட்சியளிக்கிறார்கள். இதுவே அவர்களின் மன உளைச்சலுக்கும் காரணமாகிவிடுகிறது.

கீரைகளும் - பழங்களும் உரமிட்டு வளர்க்காத கீரைகளைச் சாப்பிடலாம். முருங்கைக் கீரை, கொடிப் பசலைக்கீரை, புளிச்சக்கீரை ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாழைப்பழங்களில் பேயன் வாழைப்பழம் நல்லது என்கிறார் வள்ளலார். பேயன் பழம் கிடைக்காத நேரங்களில் ரஸ்தாளிப் பழம் கொடுக்கலாம். இதனால் நாடி நரம்புகளுக்கு உள் உஷ்ணமும், சூடும் உண்டாகும். இதனால் நாடி நரம்புகள் வலுவடையும். மாணவர்கள் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள். விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவார்கள்.

பசி எடுத்ததும் தாமதிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை நம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இன்னொன்று அவசர அவசரமாக சாப்பிடுவது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் எல்லாம் இந்த ரகம். அவசர அவரசமாக சாப்பிடுகிறார்கள்.

அவசர அவசரமாக சாப்பிடுவது ஆபத்தானது. இந்த அவசரக்காரர்களுக்கு ஏற்ற மாதிரி ஹோட்டல்களிலும் நின்றுகொண்டே சாப்பிடுகிற மாதிரி “டைனிங் டேபிள்கள்”வடிவமைக்கப்படுகின்றன. நின்றுகொண்டு சாப்பிடாமல், தரையில் சம்மணமிட்டு மெதுவாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை மாணவர்கள் கற்றுக்கொள்வது நல்லது.

உப்பு, புளி, காரம் என்றால் சாப்பாட்டை ஒரு வெட்டுவெட்டிவிடுகிறார்கள். அதிக காரமான உணவுகள் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன் செரிமான உறுப்புகளையும் பாதிக்கின்றன. இது மாணவப் பருவத்திற்கு ஏற்றதல்ல. உப்பு, புளி, மிளகாய் முதலிய உணவுப்பொருட்களின் எண்ணெய் சத்து போகச் சுடவைத்து சமைத்துக் கொடுப்பதன் மூலம் மாணவப் பருவத்தில் ஏற்படும் மந்த நிலையைப் போக்கலாம்.

சாப்பிட்டவுடன் அளவாக தண்ணீர் குடிக்க வேண்டும். இந்தப் பழக்கமும் நம் குழந்தைகளிடம் இல்லை. ஒரு மிடறு மட்டும் உறிஞ்சிவிட்டு அப்படியே வைத்து விடுகிறார்கள். சாப்பிட்ட பின் மிதமான சூட்டுடன் வெந்நீர் குடிப்பது உணவு செரிக்க உதவும்.

இரவில் தயிர், கீரை வகைகளை தவிர்த்து விட வேண்டும். சிறு கத்தரி, முருங்கை, அவரை மற்றும் வற்றல் வகைகளை இரவு உணவாக கொடுக்கலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரை, தூதுவளைக் கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவற்றை பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளி சேர்த்தும் சமைத்து (கறி செய்து) மாணவப் பருவத்தினருக்கு கொடுக்கலாம். கீரை வகைகளை தனியாகவே சமைத்துக் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

பருப்பு வகைகளில் முளை கட்டாத துவரம் பருப்பு அல்லது முளை கட்டிய துவரம் பருப்புடன் மிளகு சேர்த்துக் கடைந்து கொடுக்கலாம். துவையல் செய்தும் கொடுக்கலாம். பொங்கல், புளியோதரை போன்ற உணவுகளை எப்போதாவது மட்டுமே சாப்பிடக் கொடுக்க வேண்டும்.முன் உண்ட உணவு நன்கு செரித்து அதன் சாறு உடலில் சேர்ந்துவிட்ட பிறகு தான், உடல் இயக்கத்திற்கு சக்தி தேவைப்படும். எனவே, பசியெடுத்த பிறகு தான் உணவு ஊட்ட வேண்டும். குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி உணவைத் திணிக்கக் கூடாது.

பசியின் அளவு அறிந்தே உணவு உண்ண பழக்க வேண்டும். பிடித்த உணவு என்றால் அதிக அளவு சாப்பிடுவதை மாணவர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் தவறுதான். ஏனென்றால் பசியை “தீ”என்று கூறுகிறார் வள்ளுவர். பசித் தீயின் அளவறிந்தே சாப்பிட வேண்டும் என்பது அவருடைய அறிவுரை.

“தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 
 நோயள வின்றிப் படும்”

உப்பு, புளி, மிளகாய் இம் மூன்றையும் குறைத்து உண்ணும் பழக்கத்தை இளம் வயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இம்மூன்றும் உடலுக்கு கேடு உண்டாக்குபவை. உடல் என்பது மனதிற்கு வேலை செய்யும் வேலையாள். மனம் புத்துணர்சியோடு செயல்படும் போதும், இயல்பாக இயங்கும் போதும்தான் உடல் சரியாக ஒத்துழைக்கும்.

ஒழுங்கு இல்லாத எண்ணங்களால் உடலில் நோய் உண்டாகிறது. எனவே, குழந்தைப் பருவத்திலேயே நல்ல எண்ணங்களை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். தூய்மையற்ற கருத்து களால் தேவையில்லாத சிந்தனைகளால், கவலைகள் உண்டாகின்றன. இவை உடலைக் கரைக்கின்றன. எனவே, நல்ல உணவுடன் நேர்மறையான கருத்துகளையும் ஊட்டுவோம். குழந்தைகளின் வருங்காலத்தை மட்டுமல்ல, தேசத்தின் எதிர்காலத்தையும உறுதிசெய்வோம்.