புதிய பாடத்திட்டம் சொல்லும் பாடம்!



ஆலோசனை

பாடத்திட்ட வரைவு ஒரு கண்ணோட்டம்


தமிழகப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான பாடத் திட்டம் வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது. வல்லுநர் குழுவினர் பாடத்திட்டம் வடிவமைத்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுப் பாடத்திட்டம் குறித்து கல்வியாளரும், தேசிய விருது பெற்றவருமான முனைவர் முருகையனிடம் பேசினோம்.

“கடந்த 2016, டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மாற்றப்பட்ட முதல்வர்கள், கல்வியமைச்சர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் எனத் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டது போலவே கல்வித்துறையிலும் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுவந்தன.

குறிப்பாகப் பொதுத் தேர்வில் ரேங்க் முறை ஒழிப்பு, பதினோராம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, பொதுத்தேர்வு நேரமும் மதிப்பெண்களும் குறைப்பு, ஆண்டுத் தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுத் தேதிகள் அறிவிப்பு, சீருடை மாற்றம், பாடத்திட்ட மாற்றம், நடுநிலைப் பள்ளிக்கும் மாற்றுச்சான்று முறை என்பன இவ்வறிவிப்புகளில் அடங்கும்” என்று பட்டியலிட்டார்.

மேலும் அவர், “கடந்த 13 ஆண்டுகளாக மேனிலைப் பாடத்திட்டமும், 7 ஆண்டுகளாகத் தொடக்க, இடைநிலைப் பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்படாமல் இருந்த சூழ்நிலையில் இப்பாடத்திட்டத்தினை மாற்றி அமைத்திட 22.5.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

பாடத்திட்ட மாற்றத்திற்கான நோக்கங்களாக 1. கற்றலைப் படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், 2. தேர்வு முறைகளை மாற்றியமைத்தல், 3. அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தினை உணரச் செய்தல், 4. மாணவர்கள் தமிழர்தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை இலக்கியம் குறித்த பெருமித உணர்வைப் பெறச்செய்தல் எனக் கூறப்பட்டன.

இவற்றையெல்லாம் தாண்டி, நீட் (NEET) என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதும் மத்திய, மாநிலப் பொறுப்பான அமைச்சர்கள் நீட் தேர்வு தமிழகத்துக்கு வராது என மருத்துவக் கல்லூரிக் கனவோடு இருந்த மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டி, இறுதியில் கைவிரித்து அதனால் குழப்பங்களும் போராட்டங்களும் உருவாகி அனிதா என்ற கிராமப்புற ஏழை மாணவி
தற்கொலை செய்துகொண்டதும் தான் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், கல்வியமைச்சரும் தமிழக மாணவர்கள் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தினை மாற்றியமைத்துள்ளோம் என்று பேசிவருகின்றனர். ஆனால், தகுதித்தேர்வே தமிழ்நாட்டுக்கு வேண்டாம் எனப் போராடும் நாம் போட்டித் தேர்வை முன்னிலைப்படுத்திப் பாடத்திட்டம் அமைப்பது கற்றல், கற்பித்தலைச் சுமை ஆக்குமே தவிர கற்றலை இனிமை ஆக்காது” என்று ஆதங்கபட்டவர், அவசரகதி குறித்தும் விளக்கினார்.

“பாடத்திட்டத்தினை மாற்றியமைத்திட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் எம். ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்கள் கடந்து 20.11.2017 அன்று இக்குழு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களுக்கான புதிய வரைவுப் பாடத்திட்டத்தினை வெளியிட்டுள்ளது.

2018 ஜூன் மாதத்தில் பள்ளி திறக்கும்போது 1,6,9,11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். இன்னும் ஆறு மாதங்களே உள்ள சூழ்நிலையில் கீழ்க்காணும் படிநிலைகளில் சிறப்பாகப் புத்தகம் எழுதி அச்சிட இயலுமா? என்ற ஒரு ஐயமும் எழுந்துள்ளது” என்றார்.

கலைத்திட்டம் - புத்தகம் ஆக்கம் குறித்து விளக்கும்போது, “இதில் கலைத்திட்டம், வரைவு மற்றும் பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவு பாடத்திட்டங்கள் குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்க 20 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏராளமான பக்கங்களைக் கொண்ட இப்பாடத்திட்ட வரைவினைப் படித்து கருத்து சொல்ல இக்குறுகிய நாட்களில் எவ்வாறு சாத்தியப்படும்? மொழி மற்றும் ஒருசில பாடங்களைத் தவிர்த்து அனைத்துப் பாடத்திட்டங்களும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாமரமக்களும், ஆங்கிலம் தெரியாத பிறரும் இதை எப்படிப் படித்துப் புரிந்து விமர்சிப்பார்கள் எனத் தெரியவில்லை.

பாடநூல் எழுத ஆசிரியர்களையும், குழு உறுப்பினர்களையும், மேற்பார்வையாளர்களையும் நியமனம் செய்ய வேண்டும் புத்தகம். எழுதுவதற்கு முன் இவர்களுக்குப் போதுமான பயிற்சி தர வேண்டாமா? எழுதி முடித்த பின் சரிபார்க்க, அச்சடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவை?என ஒரு செயல்திட்டம் (Action Plan) போட்டுக்கொள்வது நல்லது.

இவ்வாறான படிநிலைகளைக் கடைப்பிடிக்காமல் எல்லாமே தயாராகிவிட்டது எனக் கூறினால் அது இயல்புக்கு மாறானதாகவும், அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாகத்தான் மாறிவிடும்” எனப் பல கேள்விகளை எழுப்புகிறார் முருகையன்.

“கருத்துக் கேட்புக்கான இறுதிநாள் டிசம்பர் 5 என்ற நிலையில் அதற்கு முன்னாள் வரை இப்பாடத்திட்ட வரைவை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், 2.5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் 7500 பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவைகளுள் தகுந்தவை உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு இணைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

 பாடங்களைத் தகவல் தொழில் நுட்பத்தோடு இணைப்பது, மெய்நிகர் வகுப்பறை திறன்மிகு வகுப்பறை, ரோபோடிக், நானோ சயின்ஸ் பாடங்கள் போன்றவை வரவேற்கப்பட்டு கருத்து தெரிவிக்கப்படுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் 7500 பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

மேலும் கருத்துகள் பெற  வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். பெறப்பட்ட மொத்த கருத்துகளைத் தொகுத்து ற்றுக்கொள்ளப்பட்டவைகளையும் நிராகரிக்கப்பட்டவைகளையும் வெள்ளை அறிக்கையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்கிறார்.

வரவேற்புக்குரிய மாற்றங்கள் குறித்து முருகையன் கூறுகையில், “தாய்மொழிக்கான வரைவு பாடத்திட்டம் சீரிய முயற்சியோடு தயாரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

நிலைப்படுத்தப்பட்ட தாள் (Position Paper) மற்றும் தமிழ்ப் பாடத்திட்ட வரைவினை நோக்கிய வகையில் மிகவும் கவனம் செலுத்தி, சில மாற்றங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது எனலாம். செய்திப்பிழை, ஆதாரப் பிழை இன்றி மூல நூல்களைப் பார்த்து எழுதவேண்டும் என்பது தற்போதுள்ள புத்தகங்களில் உள்ள பிழைகள் மீண்டும் ஏற்பட்டுவிடாது எனத் தெம்பளிக்கிறது. குழந்தைப் பாடல்களைக் குழு முன் பாடிக்காட்டிக் குழுவின் மற்ற உறுப்பினர்களும் எளிதாகப் பாடமுடிகிறதா எனப் பார்த்து தேர்வு செய்யும் முறை வரவேற்கத்தக்கது.

பேராசிரியர் த.பரசுராமனின் பள்ளித்தமிழ்ப் பாடநூல் மதிப்பீடு என்ற ஆய்வுநூலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் இப்பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளையும் மனதிற்கொண்டு, பாலினச் சமத்துவம், சமயச்சார்பின்மை பேணப்பட்டுத் தமிழ்ப்பாடங்கள் அமையும் என்பது வரவேற்கத்தக்கது” என்றவர், அதில் உள்ள நல்ல விஷயங்களை விளக்கினார்.

“மொழிப்பாடம் ஒரு திறன்பாடம், கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற அடிப்படை மொழித்திறன்களோடு மொழிவழி தகவலறி திறன்கள், தொடர்பாடல் திறன்கள் (Communication Skills), சொற்களஞ்சியப் பெருக்கம் / மொழியாளுமைத் திறன்கள், எளிய தலைப்புகளில் எழுதும் திறன், வாழ்வியல் திறன்கள், படைப்புத் திறன்கள், திறனாய்வுத் திறன்கள், மொழிபெயர்ப்புத் திறன்கள், சொல்லாக்கத் திறன்கள், புத்துலகிற்கான திறன்கள் (இதழியல், ஊடகம், கணினி, இணையம் சார் மொழித்திறன்கள்) எனப் பத்து வகைத் திறன்களையும் வளர்க்குமாறு பாடப்புத்தகம் அமையும் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

பாடப்பொருள் 1. மொழி, 2. நாடு / சமூகம், 3. அரசு / நிர்வாகம், 4. இயற்கை / வேளாண்மை / சுற்றுச்சூழல், 5. தொழில் / வாணிகம், 6. கலை / கல்வி, 7. நாகரிகம் / பண்பாடு 8. அறிவியல் / தொழில்நுட்பம் 9. அறம் / தத்துவம் / சிந்தனை, 10. மனிதம் / ஆளுமை, 11. அமைப்பியல் / அழகியல் / புதுமைகள் என்ற பொருண்மைகளின் அடிப்படையில் பருவத்துக்கு 3 இயல்கள் வீதம் மூன்று பருவங்களும் 9 இயல்கள் என வடிவமைப்பது சிறப்பை நல்கும்.” என்கிறார்.

“வரைவுப் பாடத்திட்ட முகவுரையின் இரண்டாவது பத்தியில் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய வகையில் சமமானக் கல்வியை அளிக்கும் நோக்கத்தோடு வழிமுறைகள் வகுக்கப்படும் என்பது எந்த அளவுக்கு அரசு செயல்படப்போகிறது என ஆவலோடு உள்ளோம்.

மூன்றாவது பத்தியில் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழும், ஆங்கிலமும் கற்பிக்கப்படும் என்பதோடு, தாய்மொழி வழிக்கல்விக்கு ஊக்கம் தரும் இப்பாடத்திட்டம் என்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒன்றாவது வகுப்பு முதலே ஆங்கிலமொழி வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியதும் இவ்வரசுதான் என்பதாலே” என சந்தேகங்களை எழுப்புகிறார்.

“மற்ற மாநிலங்களோடு சில வெளிநாடுகளையும் கல்வித் திட்டத்தில் ஒப்பீடு செய்ததாகக் கூறும் இவ்வல்லுநர்குழு நம்மைவிடச் சிறிய நாடான கியூபாவையும் ஒப்பிட்டு இருக்கலாம். ஏனெனில், கியூபாவில் ஒரு குழந்தை பிறந்தால் அதைப்பற்றிப் பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை. கல்வி தருவதும், சுகாதாரமும் அரசின் பொறுப்பு. தொடக்கக் கல்வி தாய்மொழியான ஸ்பானிஷ்ல்தான். 6 ஆண்டுகள்கொண்ட தொடக்கக்கல்வியில் வீட்டுப்பாடம், நோட்டு, தேர்வு என்பதெல்லாம் கிடையாது.

இசை, தோட்டம் போடுதல், சுகாதாரக் கல்வி, நடனம், நாட்டுப்பற்று இவையே அடிப்படைப் பாடத்திட்டம். மருத்துவக்குழு இல்லாக் கல்வி நிலையங்களோ, பள்ளி செல்லாக் குழந்தைகளோ அங்கு கிடையாது.

ஒவ்வோர் ஆண்டும் யுனெஸ்கோவின் உலகக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் முதல் 2, 3 இடங்களில் ஒன்றைப் பிடிக்கிறது கியூபா எனில் நம்மால் ஏன் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் கொண்டுவந்த பிறகும் கல்வியில் சாதிக்க முடியவில்லை என எண்ணிப் பார்க்கும் தருணம் வந்துவிட்டது” என்கிறார்.

“6.8.2017 அன்று பாட வடிவமைப்புக் குழுத்தலைவர் பாடத்திட்டத்தில் அடிப்படை மாற்றங்கள் செய்திருப்பதாகவும் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு எதிர்காலத் திட்டத்துடன் மாணவருக்குப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழ் நாட்டில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும், இனியும் பத்து ஆண்டுகள் கழித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல் அவ்வப்போது பரிசீலனைக்குட்பட்டு மேம்படுத்துவோம் (update) எனக் குறிப்பிட்டுள்ளார்.

 பாடப்புத்தகத்தில் ஒரு புதிய முறையாக ஒரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் என்ன புரிந்துகொண்டிருக்கின்றனர் என்பதை (அவுட் கம் பேஸ்) என்ற முறையில் ஆசிரியர்களுக்கு ஒரு கையேடு தரப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் ஆர்வமுடன் பார்க்க, படிக்க வாய்ப்பளிக்கும் வகையில் பாடங்கள், கேள்விகள், கருத்துகள், படங்கள் அமையும் என்று தெரிவித்துள்ளார். முக்கியமாக வட்டாரத் தொழில், முக்கிய இடங்கள், தாம் வாழும் ஊரின் முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேடு வழங்கவும் திட்டம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புடையதாக பாடத்திட்டம் அமையும் எனக் கூறியுள்ளார்.  மாணவர்கள் இனி மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற முடியாது. கண்டிப்பாகப் பாடத்தைப் புரிந்து கொண்டுதான் படிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் பாடத்திட்ட வரைவில் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.

புத்தகம் வந்த பிறகுதான் நடைமுறைக்கு வந்துள்ளதா என அறிய முடியும்” என்றவர், ஆக்கப்பூர்வ நடவடிக்கை வேண்டும். அதாவது, சமையலுக்கு வேண்டிய அத்தனைப் பொருட்களும் இருப்பினும் சமைக்கத் தெரியாதவன் சமைத்தால் பொருட்கள் அத்தனையும் பாழ் எனப் புரிந்து அவசரத்தில் அள்ளித் தெளித்துவிடாமல் எதிர்காலச் சமுதாய நலன் கருதி பாடநூல் எழுதும்பணி ஆக்கபூர்வமாக நடுவுநிலைமையோடு நடக்க வேண்டும்” என்று புதிய பாடத்திட்ட வரைவு குறித்த சாதக பாதகங்களைப் பட்டியலிட்டுவிட்டார் முருகையன்.

- தோ.திருத்துவராஜ்.