வாழ்வுக்கு வழிகாட்டி!



வாசகர் கடிதம்

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழியைப் போல +1, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதிரி வினாத்தாள், பொதுத்தேர்வு டிப்ஸ் எல்லாம் வழங்குவது சிறப்பு. தமிழக அரசில் நிரப்ப உள்ள 9351 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதலுக்கு நன்றி.
  எம்.ராஜசேகர், திருச்சி.
 
நரிக்குறவர் சமூகத்தில் இருந்து வந்த சக்தி என்ற மாணவனுக்கு குழந்தைகளுக்கான நோபல்பரிசு கிடைக்கப் போகிறது என்ற செய்தி மிகுந்த பரவசமளிக்கிறது. நரிக்குறவர் சமூகத்தின் சிக்கலான வாழ்வியலை விவரித்து அதிலிருந்து மீண்டெழுந்து தன் சமூகத்தையும் மீட்டெடுக்க முயன்றுவரும் மாணவனின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. நிச்சயமாகஇந்தப் பரிசு விளிம்புநிலை மக்களின் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
  கே.விஜயா, காஞ்சிபுரம்.
 
பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திரைப்பட விழா குறித்த கட்டுரை அற்புதம். திரைப்படங்களுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இத்திரைபடங்கள் ஏன் மாணவர்களுக்காக மட்டும் திரையிடச் செய்யப்படுகிறது? இதன் பின்னணி என்ன என முழு விவரங்களையும் விரிவாக, எளிமையாக விவரிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற மாணவ சமூகத்துக்கும் இளைஞர்களுக்கும் பயனுள்ள பல கட்டுரைகளோடு வெளிவரும் கல்வி வேலை வழிகாட்டி இதழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாக தனிச்சிறப்பு பெறுகிறது.
   ஏ.திருமலைராஜா, திருச்செங்கோடு.
 
படித்த படிப்புக்கு தகுதியான வேலை தேடிக்கொண்டிருப்பதைவிட சுயமாக தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு சுயதொழிலுக்கான ஆரம்பப்புள்ளியாக அமைந்திருந்தது ‘மாதம் ரூ.95,000 வருமானம் தரும் டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு!’ என்ற கட்டுரை. இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தொழில் தொடங்க தேவையான திட்ட அறிக்கை, மூலதனம், அரசு மானியம், வரவு செலவு உள்ளிட்ட விவரங்கள் அற்புதம்.
  இரா.கார்த்திகேயன், விழுப்புரம்.