கல்விச் சீர் கொடுக்கும் ஊர்மக்கள்! கற்றலைச் சிறப்பாக்கும் ஆசிரியர்கள்!போட்டித் தேர்வு

அரசுப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள், ஆங்கில உரையாடலுக்கு தனிப்பயிற்சி, இந்தி வகுப்புகள், இசை, நடனம், ஓவியம், யோகா, கராத்தே பயிற்சி வகுப்புகள், இவற்றைக் கற்றுக்கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என நமக்கு எண்ணத் தோன்றும். அப்படி பன்முகத் திறன்களைக் கொண்ட ஓர் அரசுப் பள்ளி கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ளது. இது ஓர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இவ்வளவு சிறப்புகளோடு செயல்படக் காரணமான அப்பள்ளியின் தலைமையாசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசியபோது… “2005 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். அப்போது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாமல் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து, அந்த ஆண்டிலேயே சுற்றுச் சுவர் அமைக்க ஏற்பாடு செய்தோம்.

அதேபோல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அணுகி 5 கம்ப்யூட்டர்கள் பெற்றோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கியவை உட்பட 9 கம்ப்யூட்டர்களுடன் கூடிய ஆய்வகத்தை அமைத்தோம். அரசு தொடக்கப் பள்ளியில் இப்படி ஒரு கம்ப்யூட்டர் ஆய்வகத்தை அமைத்தது ஊர்மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் கிடைத்த பாராட்டு களால் உற்சாகம் அடைந்த நானும் பள்ளி ஆசிரியர்களும் ஊர்மக்கள் ஒத்துழைப்போடு நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறோம்” என்று மனமகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார். “எங்கள் பள்ளியில் நடப்பாண்டில் 190 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தாங்களாகவே வாகனங்கள் ஏற்பாடு செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களின் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஆசிரியர்கள் உரிய மதிப்பளித்து உடனுக்குடன் நிறைவேற்றுவதால், ஆசிரியர்கள் - பெற்றோர்கள் இடையே வலுவான பிணைப்பு நிலவி வருகிறது. கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் 12 கம்ப்யூட்டர்கள் உள்ளன. பாடத் திட்டத்தோடு தொடர்புடைய விளையாட்டுகளைக்கொண்ட ஏராளமான செயலிகளை (Apps) மாணவர்களே டேப்லெட் கருவி மூலம் கையாளுகின்றனர். புரொஜக்டர், ஹோம் தியேட்டர் வசதிகள் கொண்ட மல்டி மீடியா டிஜிட்டல் வகுப்பறை 2012-ல் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. மையக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, எல்லா வகுப்பறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தடையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 3 கிலோவாட் திறன்கொண்ட இன்வெர்ட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது” என்று தங்கள் பள்ளியின் தொழில்நுட்ப வசதிகளைப்பற்றி விவரித்தார்.

மேலும் அவர், “மாணவர்களின் வீட்டுப் பாடம் உட்பட பெற்றோர்களுக்குத் தினமும் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் குரல்வழிச் செய்தியாக (Voice message) பெற்றோர்களின் செல்போன்களுக்கு அனுப்பப்படுகின்றன. காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய குரல் வழித் தகவலை அவர்களின் பெற்றோருக்கு உடனே அனுப்பிவிடுவோம். இதனால் எங்கள் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. வண்ணப் படங்களுடன் கூடிய சுவரோவியங்கள், மின் விசிறிகள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரை, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் போன்ற வசதிகள் அனைத்து வகுப்பறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நடனம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கிராமிய நடனமும், மேற்கத்திய நடனமும் கற்றுத் தரப்படுகின்றன. இசை வகுப்பில் சேர்ந்துள்ளவர்களுக்கு கீ-போர்டு இசைக்கவும், வாய்ப்பாட்டு பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் மைசூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த லோ.மஹா, நா.ரிதேஷ் ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றனர். கேரம், செஸ் மற்றும் பல பாரம்பரிய விளையாட்டு களில் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது” என்று தங்கள் மாணவர்களின் சாதனைகளையும் பெருமையோடு பட்டியலிட்டார் செல்வக்கண்ணன். “செயல்வழிக் கற்றல் முறையினை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக எங்கள் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப் பட்டது. 2008-ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த கணினி வழிக் கற்றல் மையத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருதினை இரண்டு முறை(25000 ரூபாய் ரொக்கப் பரிசுடன்) எங்கள் பள்ளி பெற்றுள்ளது.

அரசுப் பள்ளி என்றாலே உடைந்த நாற்காலி , தண்ணீர் வராத கழிவறை என்ற நிலையினை மாற்ற வேண்டும். அரசுப் பள்ளிகள் பிற தனியார் பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவையல்ல என்பதை உணர்த்தும் நோக்கில் பள்ளியின் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தியதன் மூலம் எங்கள் பள்ளிக்கு 2015-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஓ. 9001: 2015 சர்வதேச தரச்  சான்று கிடைத்தது. இப்படிப் பல சிறப்புகளோடு வளர்ந்து வரும் எங்கள் பள்ளிக்குச் கூடுதல் இடவசதி தேவைப்படுவதை உணர்ந்த ஊர் பொதுமக்கள், 2015 ஆம் ஆண்டில் ரூ.7 லட்சம் மதிப்புடைய 5 சென்ட் நிலத்தை வாங்கிக் கொடுத்தனர். இதுவரை ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஊர் மக்களும், முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும், நன்கொடையாளர்களும் பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்  படிக்கும் பள்ளிக்குத் தேவையான பொருட்களைச் சீர்வரிசையாக வழங்கும் கல்விச்சீர் வழங்கும் விழா என்ற பெயரில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறோம். இதன் மூலமாக மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கிடைத்துள்ளன’’ என்று நினைத்ததை நிறைவேற்றிய மகிழ்வோடு பேசி முடித்தார் தலைமையாசிரியர் செல்வக்கண்ணன். இப்படி ஊர்கூடி தேர் இழுத்தால் அவல நிலைகளில் இருந்து அரசுப் பள்ளிகள் கட்டாயம் மீண்டெழும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

- தோ.திருத்துவராஜ்