ஏழைக் குழந்தைகளுக்கு உதவி டும் பாதை!



வயிற்றுப் பசியால் வாடும் ஒருவனுக்கு உணவளித்தால், அவனது நன்றி அந்த ஒருவேளை உணவோடு போய்விடும். ஆனால், ஓர் ஏழைக் குழந்தையின் பசியையும் போக்கி கல்விக்கும் உதவி செய்து அறிவு ஒளியையும் ஏற்றினால், அந்தக் குழந்தை படித்து ஒரு நல்ல வேலைக்குச் செல்லும்போது, அதன் வாழ்க்கைமுறையே தரமானதாகிவிடும். இந்தக் கருத்தை முதன்மையாகக்கொண்டு, சமுதாயத்தில் அனைவருக்குமான சமநிலைக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சேவையாற்றிவரும் பாதை தொண்டு நிறுவனச் செயலர் அமல்ராஜை சந்தித்தபோது பல தகவல்களை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார்.

“ஓர் ஏழைக் குழந்தையின்  சமூகச் சூழலை மாற்றக் கல்வி ஒன்றே சரியான ஆயுதமாக இருக்க முடியும். இன்றைக்குப் பல ஆடம்பரச்செலவு களைச் செய்வது என்பது வசதி
படைத்தவர்களுக்கு வேண்டு மானால் மிகச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், மாற்று உடை வாங்கக்கூட வழியில்லாமல் தவிக்கும் ஏழை மக்கள் இங்கே இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. அம்மாதிரியான ஏழைக் குழந்தைகளுக்கு உதவிடும் வகையில், ஒரு குழுவாக அமைத்து நண்பர்கள் ஒன்றிணைந்து 1996 முதல் 2000 வரை சென்னை குடிசைப் பகுதிகளில் கல்விவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் குழந்தை களுக்குக் கல்விக் கட்டணம், சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட  உதவிகளைச் செய்துவந்தோம்.அதனைத் தொடர்ந்து, பொருளாதாரம், கல்வி, சமூகத்தில் பின்தங்கிய, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழிகாட்டும்வண்ணம் 2000-வது ஆண்டில் எனது மனைவி சுனிதா மற்றும் நண்பர்கள் இணைந்து ‘பாதை’ தொண்டு நிறுவனத்தை உருவாக்கினோம். இதனையடுத்து 2002-ல், பெற்றோரை இழந்த, குடும்பம் மற்றும் சமூகச் சூழலால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, கல்வி பெறும் வாய்ப்பை இழந்த பெண் குழந்தைகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது” என்று பாதை தொண்டு நிறுவனம் உருவான விதத்தை விவரித்தார் அமல்ராஜ்.

“பாதை தொண்டு நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு உணவு, உடை, இடம், கல்வி, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. பெண் குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளைக் கையாள்வதில் சுனிதா பெரும்பங்கு வகிக்கிறார். குழந்தைகள் உதவி மையம், குழந்தைகள் நலக் குழுமம், காவல் துறை, பள்ளி ஆசிரி யர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரால் அடையாளம் காணப்படும் குழந்தைகளின் உண்மை நிலையை ஆராய்ந்தறியப்பட்டே குழந்தைகள் பாதை இல்லத்தில் சேர்க்கப் படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் 568 குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவை களோடு கல்வியும் அளிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மருத்துவம் (பிஸியோதெரபி), ஒருவர் பொறியியல், 4 பேர் ஆசிரியப் பயிற்சியும் மற்றும் பலர் பள்ளி மேல்நிலைப் படிப்பையும் முடித்துள்ளனர்” என்றார்.

“கடந்த கல்வியாண்டில் (2016-17) ஐந்து பெண் சிறார்கள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது சுயமாக வாழ்வதற்கான வழிசெய்யப்பட்டுள்ளது. மூன்று பெண் சிறார்கள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிப் படிப்பிற்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண் சிறார்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் வீடற்றோருக்கான இரவு காப்பகத் திட்டத்தில் பாதையும் இணைக்கப்பட்டு வீடற்ற குழந்தைகளுக்கான இரவுக் காப்பகம் 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது. 

குழந்தைகளின் தனித்திறன்கள் கண்டறியப்பட்டு அவற்றையும் வளர்க்கும் வண்ணம் அக்குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வ ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மாதம் இருமுறை குழந்தைகள் சார்ந்த குறும்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதுகுறித்து விவாதிக்கப்படுகிறது. மாதம் ஒருமுறை குழந்தைகள் சார்ந்த புத்தகங்கள் வாசிக்கப்பட்டு அவற்றில் இருக்கும் கருத்துகள் ஆய்வுக்குட்படுத்தி விவாதிக்கப்படுகிறது. மேலும், சமூகத்தில் அவ்வப்போது எழும் குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்துக் கலந்துரையாடல் நிகழ்த்தப்படுகிறது” என்று பொறுப்பாகச் செயல்படும் பாதை அமைப்பின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டார்.

மேலும் அவர், “இங்குள்ள பிள்ளைகளுக்கு வாங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் முதற்கொண்டு மளிகைப் பொருட்கள் வரை அனைத்தையும் பிள்ளை களே நிர்வாகம் செய்கின்றனர். இங்குள்ளவர்களுக்கு தான் ஓர் அனாதை என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக எங்களது நிறுவனத்திற்கு போர்டு கூட வைக்கவில்லை. மேலும், திருமண மண்டபத்திலோ, விழாக்களிலோ, ஓட்டல் களிலோ சாப்பாடு மீதமாகிவிட்டது, கொண்டு வரலாமா எனக் கேட்டால் எனக்கு கோபம் வந்துவிடும். குப்பையில் கொட்ட வேண்டியதை எங்களுக்கு கொண்டு வராதீர்கள்.

உங்கள் உறவினர் ஒருவருக்கு மீதமானதைக் கொடுப்பீர்களா, எங்களையும் உங்கள் உறவுகள் என நினைத்தால் இங்கு வந்து செய்து கொடுங்கள் எனக் கண்டிப்புடன் கூறிவிடுவேன்” என்று நிறைவாகச் சொல்லி முடித்தார். பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவனுக்கு அதுவே நிரந்தரத் தீர்வாக அமையும். அந்தவகையில் பாதை நிறுவனம் பசியைப் போக்கி கல்விக்கும் உதவி செய்து வாழ்வுக்கும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. பாதையின் பயணங்கள் தொடர வாழ்த்துகள்.

- தோ.திருத்துவராஜ்,
படங்கள்: ஆர்.சி.எஸ்