அரசு வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை!



போட்டித் தேர்வு

பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் ரயில்வே துறையைப் போலவே வங்கித்துறையும் மாறியுள்ளது. அதற்குக் காரணம், அரசு வங்கிகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துவதோடு, தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாகப் பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளதுதான். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection) தேர்வாணையம் செய்துவருகிறது.

இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபிசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் 2017 - 18ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 3,562 காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி/கல்லுாரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.8. 2017 ஆம் தேதியின்படி 20-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்.சி/எஸ்.டி. ரூ.100 இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய இரு வழிகளில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.9.2017.
தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்குத் தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப் பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவர். பிரிலிமினரி தேர்வு அக்டோபர் 7, 8 மற்றும் 14, 15 தேதிகளில் நடைபெறும். மெயின் தேர்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான விவரங்களுக்கு http://www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.