சர்வீசஸ் செலக்‌ஷன் போர்டு உங்கள் ஆழ்ந்த அறிவை சோதிக்கும்!



உத்வேகத் தொடர்

‘எஸ்.எஸ்.பி.’ என அழைக்கப்படும் ‘சர்வீசஸ் செலக்‌ஷன் போர்டு’ (Services Selection Board) நடத்தும் நேர்முகத்தேர்வில், ஒரு போட்டியாளரின் பல்வேறு தகுதிகளையும், சிறப்புப் பண்புகளையும் மதிப்பீடு செய்யும் விதத்தில் பலவிதக் கேள்விகள் கேட்கப்படும். அவற்றை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு அவற்றில் இரண்டு பிரிவுகளை கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக 3 மற்றும் 4ஆம் பிரிவு கேள்விகளைப்பற்றி இனி பார்ப்போம்.

3. சமூகப் பிரச்னைக் கேள்விகள்
(Social Problem Questions): பொதுவாக, உலக நிகழ்வுகள், தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் போட்டியாளர் தெரிந்துவைத்திருக்
கிறாரா? என்பதைக் கண்டறியும் விதத்தில் நேர்முகத் தேர்வில் கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்புள்ளது. இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது, அந்த நிகழ்வுகளுக்கான தீர்வுகளையும் போட்டியாளர் தெரிந்து வைத்திருக்கிறாரா? என்பதை மதிப்பீடு செய்வார்கள். மேலும், போட்டியாளரின் ஆழ்ந்த அறிவையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் அணுகு
முறையை யும் (Approach)கண்டறிந்து கொள்வார்கள். உதாரணமாக, ‘தீவிரவாதம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டு அவற்றின் நன்மை, தீமைகளை அலசி ஆராயச் சொல்வார்கள். மேலும், ‘தீவிரவாதத்தை ஒழிக்க உங்கள் தீர்வு என்ன?’ என்றும் கேள்வி கேட்டு, அந்தத் தீர்வின் அடிப்படையில் போட்டியாளரை மதிப்பீடு
செய்வார்கள்.

சமூகப் பிரச்னை கேள்விகளில் சில:
*  Do you think military should be engaged is to tackle “Internal Defence Problems”?
*  Besides terrorism, which in your opinion the most burning and pressing problem facing in India?
*  What do you think of the various reasons for youngsters not joining in Defence Forces?
*  What is the condition of women in India today?

4. தொழில்நுட்பக் கேள்விகள் (Technical Questions): போட்டியாளர் தொழில்நுட்ப அடிப்படையிலான தகுதிகளைப் பெற்றிருந்தால், தொழில்நுட்பம்
சம்பந்தப்பட்ட கேள்விகளும் நேர்முகத் தேர்வில் இடம்
பெறும். குறிப்பாக - பொறியியல் பட்டதாரிகள், பொறியியல் டிப்ளமோ படித்தவர்கள் ஆகியோருக்குப்
பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பல கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உள்ளது.
தொழில்நுட்பக் கேள்விகளாக - போட்டியாளர்கள் படித்த பாடங்களிலிருந்தும், தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களிலிருந்தும் கேள்விகள் இடம்பெறும்.

எடுத்துக்காட்டாக:
*  Why should pumping be not used in case of concreting works?
*  How a Diesel Engine Works as Generator?
*  Explain Second Law of Thermo dynamics?
*  What are the Advantages and Disadvantages of using LPG in Car?
*  If you heat a steel pipe with the hole at center, how does heat affects the hole diameter?
*  What is Ampere?
*  Define Ohm’s Law?
*  How many satellites are required to cover the earth?
*  What is an Amplifier?
*  What is a semi conductor?
*  Differentiate between RAM and ROM?
*  Differentiate between Compiler and Interpreter?
*  If two processes which shares same system memory and system clock in a distributed system. What is it called?

- போன்ற அடிப்படையான தொழில் நுட்பக் கேள்விகளும் கேட்கப்படலாம். நேர்முகத்தேர்வு கேள்விகளின் வகைகளைத் தெரிந்துகொண்டபின்பு போட்டியாளர்கள் நேர்முகத்தேர்வுக்காக வளர்த்துக்கொள்ள வேண்டிய சில பண்புகளையும், நேர்முகத்தேர்வின்போது நடந்துகொள்ள வேண்டிய முறைகளையும் பற்றி விரிவாக இனிவரும் இதழ்களில் பார்ப்போம்.
ஒரு அலுவலருக்குத் தேவையான பண்பு களை (Officers Like Quality) 4 பெரும் காரணிகளாகப் (Factors) பிரித்து, அதன் அடிப்படையில் 15 பண்புகளை (Qualities) மதிப்பீடு செய்கிறார்கள்.

அந்த 4 காரணிகள் இவைதான்:
I.  திட்டமிடல் மற்றும் அமைப்பை உரு
வாக்குதல் (Planning and Organising)
II. சமூகத்தோடு இணைந்து பழகுதல் (Social Adjustment)
III. சமூக செயல்மிகுதிறன் (Social Effectiveness)
IV. செயலாற்றும் திறன் (Dynamicity)

- இந்தக் காரணிகளில் இடம்பெறும் 15 பண்புகள் ஒரு அதிகாரிக்குத் தேவையான 15 முக்கிய பண்புகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. அந்தப் பண்புகள் எவை? என்பது பற்றி தெளிவாகத் தெரிந்துகொண்டால் நேர்முகத்தேர்வில் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்று பணி வாய்ப்பை எளிதில் பெறலாம். திட்டமிடல் மற்றும் அமைப்பை உருவாக்குதல் (Planning and Organising) என்னும் பிரிவின்கீழ் - திறன்மிகு புத்திக்கூர்மை (Effective Intelligence), காரணம் அறியும் திறன் (Reasoning Ability), அமைப்பை ஏற்படுத்தும் திறன் (Organising Ability), வெளிப்படுத்தும் திறன் (Power of Expression)  - ஆகிய பண்புகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சமூகத்தோடு இணைந்து பழகுதல் (Social Adjustment) என்னும் பிரிவின்கீழ் - சமூகச் சூழலுக்குஏற்ப மாறிக்கொள்ளும் திறன் (Social Adaptability), சமூகப் பொறுப்பு ணர்வு (Social Responsibility), ஒற்றுமையுடன் செயல்படுதல் (Co-operation) - ஆகிய பண்புகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

சமூக செயல்மிகு திறன் (Social Effectiveness) என்னும் பிரிவின்கீழ் - தன்னூக்கம் (Initiative), தன்னம்பிக்கை (Self Confidence), விரைவாக முடிவெடுத்தல் (Speed of Decision Making), குழுவில் தாக்கம் ஏற்படுத்தும் திறன் (Ability to Influence a Group), உற்சாகத்தோடு செயல்படுதல் (Liveliness) - ஆகிய பண்புகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
செயலாற்றும் திறன் (Dynamicity) என்னும் பிரிவின்கீழ் - தீர்மானிக்கும் திறன் (Determination), தைரியம் (Courage), உடல் மற்றும் மன உறுதி (Stamina) - ஆகிய பண்புகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள 15 பண்புகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக் கேள்விகள் இடம்பெறும் என்பதால், அதிக கவனத்தோடு நேர்முகத்தேர்வுக்கான தயாரிப்புப் பணியை முன்கூட்டியே மேற்கொள்வது நல்லது.

நேர்முகத்தேர்வுக்கான தயாரிப்பு
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவர்கள், முன்கூட்டியே நேர்முகத்தேர்வுக்கான தயாரிப்பு (Interview Preparation) பணிகளில் ஈடுபடுவது அவசியமாகும். நேர்முகத்தேர்வு தயாரிப்புக்கான சில குறிப்புகள்:
*  உங்கள் தன் குறிப்பு விவரத்தைத் (Resume) தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
*  தனிநபர் தகவல் கேள்வித்தாளில் (Personal Information Questionnaire) [PIQ] நீங்கள் எழுதிய பதிலையும்
நினைவில் கொள்ளுங்கள்.
*  சுய விளக்கத் தேர்வில் (Self Description Test) நீங்கள் எழுதிய பதிலையும்
நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
*  பொது அறிவுக்கான (General Knowledge) கேள்விகள் எவ்வாறெல்லாம் இடம்பெறும்? என்பதைப் பற்றியும், பல கோணங்களில் சிந்தித்து அதற்கான பதில்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
*  உங்கள் பொழுதுபோக்கு, உங்கள் சொந்த ஊர், உங்கள் இதர தகுதிகள் ஆகியவற்றைப் பற்றியும் சில கேள்விகளை நீங்களே உருவாக்கி, அதற்கான பதிலையும் தெரிந்துகொள்ளுங்கள்.
*  உங்கள் நண்பர்கள், குடும்பம், பள்ளி, கல்லூரி போன்றவற்றைப் பற்றியும் பல கேள்விகளை உருவாக்கி அதற்குத் தகுந்த பதில்களையும் குறித்துக்
கொள்ளுங்கள்.
*  நேர்முகத் தேர்வில் கலந்துகொள்
வதற்குத் தேவையான ஆடைகள், டை, ஷூ, கைக்குட்டை ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருங்கள்.
*  தேர்வு எழுதத் தேவையான பேனா,
பென்சில், ஸ்கேல் போன்றவற்றையும் முந்தைய நாளே எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள்.
நேர்முகத் தேர்வின்போது...
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும்போது போட்டியாளர் சில முக்கிய
தகவல்களை நினைவில் நிறுத்திச் செயல்பட வேண்டும். அவற்றுள் சில:-
*  நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழையும்முன்பு, புன்முறுவல் தவழும் முகத்தோடு, அனுமதி பெற்று உள்ளே
செல்லுங்கள்.
*  நேர்முகத் தேர்வு அலுவலர்களுக்கு முதலில் வணக்கம் சொல்லுங்கள்.
*  தேர்வு அலுவலர் உங்களை இருக்கையில் அமர அனுமதியளித்தபின்பு உட்காருங்கள். உட்கார அனுமதி வழங்கியதற்கு நன்றி சொல்லுங்கள்.
*  “First Impression is the Best Impression” என்பதால் நேர்முகத் தேர்வின் தொடக்கத்திலேயே உங்கள்மீது நல்லெண்ணம் உருவாகும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள்.
*  உடல் மொழிகள் (Body Language) மிகவும் முக்கியம் என்பதால், நேர்மறை உணர்வை (Positive Feelings) ஏற்படுத்தும் விதத்தில் உங்கள் உடல்மொழிகளை அமைத்துக்கொள்ளுங்கள்.
*  கையை நீட்டிப் பேசுதல், தேவையில்லாமல் தலையை ஆட்டுதல் போன்ற வீணான உடல்மொழிகளைத் தவிர்த்து விடுங்கள். இந்தத் தேவையற்ற உடல்மொழிகளை நீக்கும் விதத்தில் வீட்டில் கண்ணாடிமுன்பு நின்று சில கேள்வி
களுக்கு பதில் சொல்லிப் பழகுங்கள். இதன்மூலம் பதில் தெரிவிக்கும்போது உங்கள் உடல்மொழிகள் எப்படி இருக்கிறது? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
*  நேர்முகத் தேர்வின்போது கையைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. இப்படி அமர்ந்திருந்தால் நேர்முகத் தேர்வு அலுவலர்களின் மனதில் அந்தச் செய்கை எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.
*  நேர்முகத்தேர்வின்போது தேர்வு அலுவலர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். கீழே அல்லது மேலே பார்த்துக்கொண்டு பேசினால் உங்கள் கவனம் சிதறும். உங்கள் பதில்கள் அலுவலர் எதிர்பார்க்கும் விதத்தில் அமையாது.
*  உங்கள் ஆர்வத்தையும், உற்சாகத்தையும், சுய கட்டுப்பாட்டையும் வெளிப்
படுத்தும் விதத்தில் உங்கள் தோற்றம் அமைய வேண்டும். நிற்கும்போதும், உட்காரும்போதும் உங்கள் உடல் நேராக நிமிர்ந்து நிற்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
*  நாற்காலியில் அமர்ந்து பதில்சொல்லும்போது பின்பக்கமாகச் சாய்ந்துகொண்டு பேசுவது நல்லதல்ல. அது உங்கள்மீது உள்ள மரியாதையைக் குறைத்து விடும். அதேபோல் நாற்காலியின் நுனியில் உட்கார்ந்துகொண்டு பேசுவது
நீங்கள் பதற்றத்தில் இருப்பதைத் தேர்வு
அலுவலருக்கு உணர்த்திவிடும்.
*  உங்கள் பதில்களை மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தெரிவியுங்கள்.
*  தேர்வு அலுவலருக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்.
*  நேர்முகத் தேர்வு கேள்விகளில் ஓரிரு கேள்விகள் புரியவில்லையென்றால் போதிய விளக்கத்தைத் தேர்வு அலுவலரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
*  எந்தச் சூழலிலும் எரிச்சல்படுவதையோ, கோபப்படுவதையோ தவிருங்கள்.
*  ”உண்மையான தகவல்களைத்தான் நேர்முகத் தேர்வில் தெரிவிக்க வேண்டும்” என்பதை மனதில் நிறுத்திப் பதில் சொல்லுங்கள்.
*  தேர்வு அலுவலரிடம் விவாதம் செய்யாதீர்கள். உங்கள் குரலை உயர்த்திப் பேசுவதையும் தவிர்த்துவிடுங்கள்.
*  உங்கள் மீதுள்ள தவறுக்காக யாரையும் குறை சொல்லாதீர்கள். எந்தச் சூழலை யும் வெற்றியுடன் எதிர்கொள்ளும் போட்டியாளரையே நேர்முகத் தேர்வு அலுவலர் தேர்ந்தெடுக்க விரும்புவார் என்பதையும் நினைவில் நிறுத்திச் செயல்படுங்கள்.
இனி - எஸ்.எஸ்.பி நேர்முகத் தேர்வில் ஐந்தாம் நாள் நடத்தப்படும் நிகழ்வுகளைப்பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
- தொடரும்