வற்றாத ஜீவ நதி
 +2 முடித்துவிட்டு நீட் தேர்வு பிரச்னையால் மருத்துவப் பட்டப்படிப்பில் சேரமுடியாமல் போன மாணவர்களுக்கு ஆறுதலோடு வழிகாட்டும் விதமாக அமைந்தது துணை மருத்துவப் பட்டப்படிப்புகள் குறித்த கட்டுரை. கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, துணை மருத்துவப் படிப்புகளின் பட்டியல் என மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல்களைப் படிக்கமுடிந்தது. -ஆர்.புஷ்பராஜ், வளவனூர், விழுப்புரம். ஆட்டிஸ மாணவர்களின் ஓவியக் கண்காட்சி பற்றிய கட்டுரை அற்புதம். ஆட்டிஸம் என்பது மூளை சார்ந்த குறைபாடே தவிர அது நோயல்ல என்பதையும் எந்த வகையிலும் மூளையின் ஆற்றலை மங்கச்செய்திடாது என்பதையும் நிரூபித்துள்ளனர் அம்மாணவர்கள். பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை தரும் உத்வேகக் கட்டுரை. -ஏ.சிவச்சந்திரன், திருச்சி. குழந்தைகளின் பொழுதுபோக்கான கேமை தாங்களே தங்களுக்குத் தேவையானமாதிரி உருவாக்கலாம் எனக் கூறி கோடிங்கை கற்றுத் தரும் ஆறாம் வகுப்பு மாணவிக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை வெளியிடும் குங்குமச் சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டிக்கு ஒரு ஹாட்ஸ்-ஆப். -எம்.மலர்கண்ணன், காஞ்சரம்பேட்டை, மதுரை. ஆங்கில மருத்துவம் படிக்க முடியாமல் போனவர்களும் இந்திய முறை மருத்துவம் படித்து மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொடுப்பது இந்திய முறை மருத்துவப் பட்டப்படிப்புகள் என்பதை விளக்கியது இந்திய முறை மற்றும் ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த கட்டுரை. -எம்.ரவிசங்கர், காஞ்சிபுரம் பள்ளிக்கல்வித் துறை முதல் உயர்கல்வித்துறை உள்ளிட்ட தகவல்களையும், வேலைவாய்ப்புச் செய்திகளையும் A to Z வாரி வழங்கும் வற்றாத ஜீவ நதியாக குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி உள்ளது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும், வேலைவாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களுக்கும் பயன் தரும் பொக்கிஷம். -எஸ்.சிவசங்கரி, தஞ்சாவூர்
(வெளிநாட்டுக் கல்வி - அடுத்த இதழில் இடம்பெறும்)
|