எஞ்சினியரிங் படிப்புகளுக்கு மவுசு குறைந்தது ஏன்!



பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு 2017-18 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைந்தது. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் இடங்களுக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 89,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் எஞ்சினியரிங் படிப்பு என்றால் போட்டிப்போட்ட மாணவர்களுக்குப் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்தது ஏன்? இந்நிலை நீடித்தால் பொறியியல் கல்லூரிகளின் நிலைமை என்னவாகும் எனக் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் கேட்டபோது அவர் விரிவான விளக்கம் அளித்தார்.

“எஞ்சினியரிங் படிப்புகளுக்கு மவுசு குறைந்ததற்கு மிக முக்கியமான காரணம் வேலைவாய்ப்பு என்பது எதிர்பார்த்தபடி இல்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐ.டி) கடந்த 12 ஆண்டுகளாக எஞ்சினியர்களின் தேவை அதிகமாக இருந்தது. அப்போது அவர்கள் சில சிறந்த கல்லூரிகளுக்குச் சென்று பெயரளவுக்கு திறனறியும் தேர்வு (Aptitude Test) நடத்திவிட்டு ஆங்கிலம் பேசத் தெரிந்தாலே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். அன்றைக்கு கல்லூரிகளோ மாணவர்களோ ஐ.டி இண்டஸ்ட்ரியின் வேலைவாய்ப்பு நீண்டகாலம் நீடிக்காது என்பதைப் பற்றி யோசிக்கவேயில்லை.

அதேபோல், கல்லூரிகள் பாடத்திட்டத்தைத் தாண்டி சொல்லித்தரக்கூடிய மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளவில்லை. புதிய டெக்னாலஜியிலும் முதலீடு செய்யவில்லை. இன்ஃப்ராஸ்ட்ரெக்‌ஷரை டெவலப் செய்தால்போதும் எனப் பெரிய பெரிய கட்டடங்களை கட்டினார்களே தவிர, புதுப்புது டெக்னாலஜிகள் வரவர அதற்கேற்பப் பாடத்திட்டங்களை மாற்றிக்கொள்ளவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார் ஜெயபிரகாஷ்.

“இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைக்கு நாம் படிக்கும் பாடத்திட்டம் 90 சதவீதம் அவுட்டேட் ஆகிவிட்டது. இப்போது நாம் படிக்கும் பாடத்திட்டத்துக்கும் தேவைக்கும் சம்பந்தமேயில்லாமல் போய்விட்டது. அதேநேரத்தில் உடனடியாக டெக்னாலஜியை இம்ப்ரூவ் பண்ணுவதற்கோ அல்லது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கோ காலநேர அவகாசம் இல்லாமலும் போய்விட்டது. புதிய டெக்னாலஜிக்கான லேப் கொண்டுவர வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.

பெரும்பாலான  கல்லூரி கள் அதைச் செய்யாமல் லாபத்தை நோக்கி மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கல்லூரிகளுக்குக் கிடையாது. பொறியியல் கல்லூரிகள் என்பது இன்றைக்கு ஒரு தொழில் என்ற அளவில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், எஞ்சினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்துவிட்டது. இனிமேல் எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எஞ்சினியரிங் படித்தால் இன்றைக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. யாருக்கு என்றால், எந்த மாணவன் பாடத்திட்டத்தைத் தாண்டி படிக்கிறானோ, எந்தக் கல்லூரி பாடத்திட்டத்தைத் தாண்டி புதிய டெக்னாலஜியில் முதலீடு செய்து, ஒரு இண்டஸ்ட்ரிக்குத் தேவையானதைச்  சொல்லிக் கொடுக்கிறதோ அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அன்றைக்கு நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு செய்து எடுத்துச் சென்று தொழில் குறித்த பயிற்சிகளைக் கொடுத்தன. இன்றைக்கு இண்டஸ்ட்ரிகள் போகிற நிலைமையில், பயிற்சி கொடுத்து பணத்தைச் செலவு செய்யத் தயாராக இல்லை.

கல்லூரிகளே எங்களுக்குத் தேவையான அளவுக்கு மாணவர்களைத் தயார் செய்து கொடுங்கள் எனக் கேட்கின்றன. கல்லூரிகளில் அந்த அளவுக்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டுமென்றால் புதிய டெக்னாலஜிக்கு தகுந்தமாதிரி லேப் இருக்க வேண்டும். பயிற்சி கொடுக்கக்கூடிய அளவுக்கு ஆசிரியர்கள் வேண்டும். நிறைய அட்வான்ஸ்டு டெக்னாலஜி தெரியவேண்டும். இதற்கெல்லாம் முதலீடு செய்வதற்கு தற்போது பணம் கிடையாது” என்று பொறியியல் கல்லூரிகளின் நிலைமையையும், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களையும் பட்டியலிடுகிறார்.

மேலும் அவர் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குறைவுக்கான காரணங்களை விவரிக்கும்போது, “இன்றைக்குக் கல்லூரிகளில் ஒரு மாணவர் எஞ்சினியரிங் படிக்க வேண்டுமென்றால் ஹாஸ்டல் ஃபீஸோடு சேர்த்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஹாஸ்டல் ஃபீஸ் மட்டுமே 60,000 ரூபாய் ஆகிவிடுகிறது. கவுன்சலிங் மூலம் சென்றால்கூட 50,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதன்பிறகு புத்தகம் உள்ளிட்ட எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஒன்றரை லட்சம் வரை செலவாகிறது. அடுத்து, பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் கல்லூரிக்குச் செல்வது என்பது ஒரு பொழுதுபோக்காக நினைக்கும் மனநிலை உள்ளது. இன்றைக்கு சராசரியாகப் பத்துப் பேரில் ஒரு மாணவன் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் அதிக நேரத்தைச் செலவிடுகிறான்.

அதே நேரத்தை டெக்னாலஜியை அப்டேட் செய்வதில் செலவிடுவதில்லை. ஒரு நிறுவனத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலையை ஒருவர் எதிர்பார்க்கிறார் என்றால், அந்த நிறுவனத்துக்கு அவர் ரூ.3,00,000 சம்பாதித்துக் கொடுத்தால்தான் அந்தச் சம்பளத்தை அந்தநிறுவனம் கொடுக்கும். இது மாணவர்களுக்குத் தெரிவதில்லை. டிகிரியை முடித்தால் மட்டும்போதும் வேலையைக் கொடுத்து விடுவார்கள் என்ற நினைப்பு உள்ளது. அப்படியெல்லாம் இனிவரும் காலகட்டங்களில் நடக்காது. எஞ்சினியரிங் படிப்பு என்பது ஸ்கில் பேஸ்டு ஆகிவிட்டது. அதாவது, திறன்மேம்பாட்டோடு படிக்க வேண்டும். உண்மையாகவே திறன்மேம்பாடு இருந்தால் வேலைவாய்ப்பு உண்டு. புதிய டெக்னாலஜியை அப்டேட் செய்யவில்லை என்றால், வேலையில் சேர்ந்த இரண்டாண்டுகளில் வேலையை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்.

எஞ்சினியரிங் வேலைவாய்ப்பு என்பது இனிமேல் எப்படி இருக்குமென்றால், கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் முறை மாற்றியமைக்கப்படும். அதாவது, கேம்பஸ் இன்டர்வியூ என்பது இருக்காது. அரசுப் பணிகளுக்கு நடப்பது போல் போட்டித் தேர்வுகள் மூலமாகத்தான் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு நிறுவனமும், கேம்பஸுக்குப் போவதற்கு முன்னால் ஆன்லைன் மூலமாகவோ நேர்முகமாகவோ போட்டிகளை நடத்துவார்கள். இந்தப் போட்டிகளில் எந்த மாணவர் தன் திறமையைக் காண்பிக்கிறாரோ அந்த மாணவருக்கு இன்டெர்ன்ஷிப் கொடுத்து வேலையும் கொடுக்கப்படும். இதுதான் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது. அதனால் ஒரு மாணவன் படித்தால் மட்டும் போதாது, புதிய டெக்னாலஜியைக் கற்றுக்கொண்டு கம்பெனிகள் நடத்தும் பல போட்டிகளில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினால்தான் வேலை. கல்லூரியில் சொல்லிக் கொடுக்கப்படும் எஞ்சினியரிங் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு படித்தால் அது வெறும் டிகிரி. பாடத்திட்டத்தைத் தாண்டி படித்தால்தான் வேலை. 

இந்தியாவில் எஞ்சினியரிங் படிப்பில் ஒரு மாணவன் தனக்கான சரியான பாடத்தைத் தேர்வு செய்யும் முறை இல்லை. பெற்றோர்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள். உனக்கு எதில் விருப்பம் எனக் கேட்பதில்லை. பிளஸ் 2 மாணவனுக்கு டெக்னாலஜியைப் பற்றியோ வருங்காலத்தில் என்ன மாதிரியான தொழில்வளம் இருக்கும் என்பது பற்றியோ தெரியுமா என்றால், கண்டிப்பாகத் தெரியாது. ஒரு மாணவனுக்கு முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் 21 வயதில்தான் வருகிறது. ஆகவே, 16 வயதில் ஒருவர் பொறியியல் படிப்பில் விரும்பம் எனக் கூறுகிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு, ஒரு மாணவர் மெக்கானி–்க் எடுக்கிறார் என்றால், அவருக்கு மெக்கானிக்கல் படித்தால் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள், அது என்னமாதிரியான இண்டஸ்ட்ரி என்பதுகூடத் தெரியாது. யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக அதைத் தேர்வு செய்கிறார்.

வருங்காலங்களில் பொறியியல் படிப்பு களில் வேலைவாய்ப்புகள் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்றவைச் சார்ந்த படிப்புகள் படித்தால் அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவில் பொறியியல் படிப்பில் 40க்கும் மேலான பாடப்பிரிவுகள் உள்ளன. இது ஒரு தவறான முறை. பொறியியலைப் பொறுத்தவரைக்கும் மேஜர் கோர்சஸ் மட்டுமே அண்டர் கிராஜுவேஷன் லெவலில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் போன்ற மேஜர் கோர்சஸ் மட்டுமே இருக்க வேண்டும். செகண்டரி பாடப்பிரிவுகளான ஆட்டோமொபைல், புரொடக்‌ஷன் எஞ்சினியரிங், பயோமெடிக்கல், மெக்கட்ரானிக்ஸ் எடுக்கிறார்கள் என்றால் GATE எக்ஸாம் எழுதும்போது அவர்களுக்குத் துறை சார்ந்த பாடப்பிரிவுகள் கிடையாது.

இதனால் அவர்களுக்கு அரசு சார்ந்த பப்ளிக் செக்டார் கம்பெனிகளில் வேலை கிடைப்பது அரிதாகிவிடும். உலக நாடுகளில் இதுபோன்று செகண்டரி எஞ்சினியரிங் கோர்சஸ் கிடையாது. வெளிநாடுகளில் பெட்ரோலியம் என்றால் கெமிக்கல் படிக்க வேண்டும். பேசிக் கோர்சஸ் சிவில், மெக்கானிக்கல், எலட்ரானிக்கல், கம்ப்யூட்டர் இதுபோன்ற கோர்சஸ் மட்டுமே இருக்கின்றன.  தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட எஞ்சினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவ்வளவு கல்லூரிகள் தேவையே இல்லை. 300 கல்லூரிகள் இருந்தாலே போதும். தரம் குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை வேறு கல்லூரிகளாக மாற்றுவதற்கு அரசு வாய்ப்புத் தரவேண்டும்.

எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு மேல் சிறந்த நம்பிக்கை வரவேண்டும் என்றால், அண்ணா பல்கலைக்கழகம் இண்டஸ்ட்ரிகளின் தேவைக்குத் தகுந்த மாதிரியான பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். நன்கு தரம்வாய்ந்த பொறியியல் கல்லூரிகளுக்குக் குறைந்தபட்சம் 100 சிறந்த கல்லூரிகளுக்குச் சுய அங்கீகாரம் மற்றும் அட்டானமஸ் ஸ்டேட்டஸ் வழங்க வேண்டும். தேர்வுமுறையிலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அடுத்தது ஆல் இண்டியா கவுன்சில் ஆஃப் டெக்னிக்கல் எஜுகேஷன் அங்கீகாரம் கொடுக்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

1. வரும்காலங்களில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கல்லூரியும் அவர்களுடைய வருமானத்தில் 20 சதவீதம் புது டெக்னாலஜிக்காக முதலீடு செய்ய வேண்டும்.
2. ஓர் ஆசிரியர் பிஎச்.டி படித்துள்ளார் என்றால் அது 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தகுதியானதாக இருக்க வேண்டும். புதிதாக ஆராய்ச்சி செய்து புதிய ஆய்வு பேப்பரை தாக்கல் செய்து மீண்டும் முனைவர் பட்டத்தை ரினியூவல் பண்ண வேண்டும். இதுபோன்ற கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்தால்தான் நம்முடைய பொறியியல் கல்லூரிகளின் தரமும் உயரும், மாணவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்புக்கு உரிய கல்வியும் கிடைக்கும்” என்கிறார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி.

எஞ்சினியரிங் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை மிக மோசமாகக் குறைந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கல்வியின் தரம், வேலைவாய்ப்பு இன்மை, கல்லூரிகளின் கட்டமைப்பு எனப் பல குறைகள் சொல்லப்படும் சூழ்நிலையில் இவற்றையெல்லாம் களைய ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- தோ.திருத்துவராஜ்