செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

10ம் வகுப்பு ‘தமிழ்’, ‘ஆங்கில’ பாடத்தில் சென்டம் கட்! சமீபத்தில் நடந்துமுடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல் 1ல் தொடங்கியது. முதல் நாளில், விடைத்தாள்களை முதன்மை விடை திருத்துனர்கள் திருத்தி, விடைக் குறிப்புகளை ஆய்வு செய்தனர். ஏப்ரல் 2 முதல், உதவித் திருத்துநர்கள் மூலம் திருத்தம் நடந்துவருகிறது. முந்தைய ஆண்டுகளில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர எழுதச் சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும் தெரிந்தது.

எனவே, மொழிப் பாடத்தில், ’சென்டம்’மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘சென்டம்’ வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 100 மதிப்பெண் வழங்குவதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது. அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்புப் பக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கு, 100 என்று எழுதும் வகையில், மூன்று கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, ’சென்டம்’மதிப்பெண் இருக்காது, எனத் தேர்வுத்துறை வட்டாரத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

எஞ்சினியரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் எஞ்சினியரிங் கல்லூரிகள், சுயநிதி எஞ்சினியரிங் கல்லூரிகள் என மொத்தம் 554 உள்ளன. அரசுக் கல்லூரிகளில் உள்ள 100 % இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் 65 %  இடங்களை அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும்.

ஆனால், சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 % இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 % இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வருடம் எஞ்சினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு மூலம் எஞ்சினியரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணா பல்கலைக்கழக  அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்தவித மாற்றமும் இல்லை.

கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். +2 தேர்வு முடிவு தேதி வெளியான பிறகு, அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டு முதுநிலை சட்டப் படிப்பு!

டெல்லியில் செயல்படும், தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆண்டு முதுநிலைச் சட்டப் படிப்பான எல்.எல்.எம். (புரொபஷனல்) வழங்கப்
படுகிறது. இப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: மாணவர்கள், இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களைச் சரிபார்த்து ‘மெரிட்’அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.6.2017
மேலும் விவரங்களுக்கு: http://nludelhi.ac.in

கால்நடை மருத்துவப் படிப்புக்கு  நீட் தேர்வு கிடையாதா?

தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறை குறித்த அறிவிப்பை துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர்  வெளியிட்டுள்ளார். அதில், ‘கால்நடை மருத்துவம் மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர 380 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல கலந்தாய்வு மூலம் நடைபெறும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பி பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப முறை முழுக்க முழுக்க ஆன்லைன் கிடையாது. இந்த படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது. வழக்கம் போல பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டீ’ டேஸ்டிங் சர்டிபிகேட் படிப்பு!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட் எனும் கல்வி நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் புரொபஷனல் சர்டிபிகேட் புரொக்ராம் ஆன் டீ டேஸ்டிங் அண்ட் மார்க்கெட்டிங் (பி.சி.பி., - டி.டி.எம்.) சான்றிதழ் படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலை அல்லது கல்லூரியில், இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழியில் சரளமாகப் பேச மற்றும் எழுதும் திறன் பெற்றிருப்பது அவசியம். தோட்டக்கலை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களின் சிபாரிசில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சேர்க்கை முறை: நேர்முகத்தேர்வு, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் மற்றும் சென்சரி டெஸ்ட் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.5.2017
மேலும் விவரங்களுக்கு: www.iipmb.edu.in