நல்ல விஷயம் 4



வளாகம்

அறியவேண்டிய மனிதர் உ.வே. சாமிநாதய்யர்


உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதைத்தான் சுருக்கமாக உ.வே.சா. என்று அழைத்தனர். தமிழுக்குப் புத்துயிரளித்த தமிழ்தாத்தா உ.வே.சா. தஞ்சை மாவட்டம், பாபநாசத்துக்கு அருகே உள்ள ‘உத்தமதானபுரம்’ எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 19 ஆம் தேதி மகனாய்ப் பிறந்தார்.

தமிழ் மற்றும் இசைக்கல்வியைத் தம் சொந்த ஊரிலேயே இருந்த ஆசிரியர்களிடம் கற்றார். தன் 17வது வயதில் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் வித்வானான திருச்சி மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டுகள் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார். பின்பு குமபகோணத்தில் இருந்த கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட 90 பழமையான நூல்களைப் பதிப்பித்ததோடு 3,000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்து பதிப்பித்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவற்றைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை… சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். கலைமகள் துதி, திருலோகமாலை உள்ளிட்டவை உ.வே.சா இயற்றிய நூல்களில் சில.

உ.வே.சா ஆற்றிய சொற்சுவை உரையே பின்னாளில் ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலானது. உ.வே.சா. தன் கைப்பட எழுதிய ‘என் சரித்திரம்’ 1950ஆம் ஆண்டில் நூலானது. 1942 ஆம் ஆண்டு, ஏப்ரல் 28 ஆம் தேதி இயற்கை எய்திய உ.வே.சா தமிழ் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர். இவர் குறித்து மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/உ._வே._சாமிநாதையர்

படிக்கவேண்டிய புத்தகம் உச்சம் தொட - சுப்ரதோ பாக்ச்சி (தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்)

வெற்றியை யாருக்குத்தான் பிடிக்காது? அதை நாடி ஓடுபவர்களுக்கு ஏராளமான ஸ்டார்ட் அப்கள் சுனாமியாகப் பெருகியுள்ள காலமிது. பிஸினஸ் திட்டம், அதன் நோக்கம், அதீத வளர்ச்சி, பணியாளர்கள் நிர்வாகம், தவறுகள், கையகப்படுத்தல் உள்ளிட்ட பலதரப்பட்ட நுணுக்கங்களை நறுக்கென்று சுருக்கமாகப் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தம் நிறுவனமான மைண்ட்ரீ மூலமும் ஆசிரியர் விளக்கியுள்ளது சிறப்பு.

இந்நூல் தொழில்முனைவோருக்கு நிச்சயம் புதிய நம்பிக்கை ஊற்றாக அமையும். தொழிலில் ஏற்படும் ஏ டூ இசட் சிக்கல்களைத் தீர்க்க சுப்ரதோ பாக்ச்சியின் ‘உச்சம் தொட’ நூல் ஒன்றே போதும். தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உன்னத வழிகாட்டி இந்நூல்.
(வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளி கேஷன்ஸ், 10/2, போலீஸ் குவார்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை-17. தொடர்புக்கு: 72000 50073)

பார்க்க வேண்டிய இடம் முதுமலை வனவிலங்கு காப்பகம்

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி டூ மைசூர் சாலையில் அமைந்துள்ள முதுமலை வனவிலங்கு காப்பகம், 1940ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வனவிலங்கு காப்பகம். 60 ச.கி.மீ பரப்பளவில் தொடங்கப்பட்ட இக்காப்பகம் இன்று 321 ச.கி.மீ அளவில் விரிவடைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான முதுமலைக் காப்பகத்தில் அமைந்துள்ள தேசிய வனப்பூங்கா 103 ச.கி.மீ பரப்பில் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது.

யானை, புலி, சிறுத்தை, மயில், பறக்கும் அணில், காட்டுப்பன்றி, காட்டு எருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழும் இக்காப்பகத்தின் ஊடாக மோயாறு வனத்தை வளமூட்டி பயணிப்பது பெரும் வசீகரம். தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பிலுள்ள முதுமலை வனவிலங்கு காப்பகம் கோடை சுற்றுலாவுக்கு குடும்பத்தோடு செல்ல சூப்பர் சாய்ஸ். மேலும் அறிந்துகொள்ள https://ta.wikipedia.org/wiki/முதுமலை_தேசியப்_பூங்கா

வாசிக்க வேண்டிய வலைத்தளம்
www.eluthu.com

பாரதியின் அழகிய கண்கள் டிசைனில் தொடங்கி எழுத்து தளம் கவிதை, கதை கட்டுரை எனப் படைப்பிலக்கியத்திற்கான பொக்கிஷப் பெட்டகத்தின் வாசல். பிரபல கவிஞர்களின் அறிமுகத்தோடு கவிதைகள் தொகுக்கப்பட்டிருப்பது அருமை.

பொன்மொழிகள், ஓவியம், நகைச்சுவை என வாசகர்களிடம் போட்டி நடத்தி படைப்புகளைத் தொகுத்திருப்பது செந்தமிழின் வளர்ச்சிக்கு அற்புத முயற்சி. படைப்புகள் கடந்து தமிழைக் கற்றுத்தரும் ‘தமிழைப் படி’ என்ற பகுதி அபார யுத்தி. உங்கள் படைப்பாற்றலுக்கு ஊக்கம் அளித்து, திறமைக்குப் புடம்போடும் தங்கத் தமிழ் தளமிது.