TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்


தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் பல்வேறு தேர்வுகளையும் எதிர்கொள்ள இந்தப் பகுதியில் பல தகவல்களையும் பாடத்திட்டங்களையும் வழங்கிவருகிறோம் அந்த வகையில் புவியியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்படும் கேள்வி களுக்கான பாடத்திட்டங்களிலிருந்து தொடர்ந்து குறிப்புகளை இங்கே நாம் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வேளாண் தொழில் வகைகள் பற்றி இனி பார்ப்போம்.

வேளாண் தொழிலின் வகைகள் வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழி லில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப்பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (பயிர்கள்) உற்பத்தியைக்கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும்.

 வேளாண்மைத்  தொழில் தன்னிறைவு வேளாண்மை, மாற்றிட வேளாண்மை முறை, தீவிர வேளாண்மை முறை, வணிக வேளாண்மை முறை, கலப்பு வேளாண்மை முறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தன்னிறைவு வேளாண்மை இம்முறையில் விவசாயிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவையான அளவு பயிர்களை விளைவிப்பர். தன்னிறைவு வேளாண்மை இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. அவை எளிய தன்னிறைவு வேளாண்மை மற்றும் தீவிர தன்னிறைவு வேளாண்மை என்பதாகும். எளிய தன்னிறைவு வேளாண்மை முறை மலைவாழ் மக்களுள் சிறிய குழுமங்களால் மேற்கொள்ளப்படும் வேளாண் முறையாகும்.

மாற்றிட வேளாண்மை முறை

இடப்பெயர்வு வேளாண்மை எனப்படும். விவசாயிகள் ஒரு சிறிய பகுதி யில் உள்ள மரங்களை வெட்டிவிட்டு, அப்பகுதியில் தினை வகைகளையும், கிழங்கு வகைகளையும் வளர்ப்பர். சில வருடங்களுக்குப் பிறகு அந்நிலத்தை விட்டுவிட்டு காட்டில் மற்றொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து மேற்கூறிய முறையில் விவசாயம் செய்வர். பின்னர் இந்த நிலம் காடுகள் மீண்டும் வளர்வதற்கென்று தரிசாக விடப்படும், விவசாயிகள் புதிய நிலத்திற்கு இடம்பெயர்ந்து, பல ஆண்டுகளுக்குப் (10-20) பிறகு திரும்பி வருவார்கள்.

தீவிர வேளாண்மை முறை

 மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள பருவமழை பெறும் ஆசியப் பகுதிகளில் இம்முறை காணப்படுகிறது. நெற்பயிரே அதிகமாக இம்முறையில் விளைவிக்கப்படும் பயிராகும். விளைநிலம் சிறியதாக இருந்தாலும் அவற்றில் விவசாயிகள் தீவர வேளாண் சாகுபடி செய்வர். உரங்கள், அதிக மகசூல் தரும் உயர்ரக விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், குடும்பத்திலுள்ளவர்களையே பெரும்பாலும் வேளாண்மையில் ஈடு
படுத்தியும், விளைநிலத்தை ஒருபோதும் வெற்றாக விடாமலும் தீவிர முறையில் பயிர் விளைவிப்பர்.

வணிக வேளாண்மை முறை

பரந்த வேளாண்மை முறை - இவ்வகை வேளாண்மை பரந்த வேளாண்மை எனப்படுகிறது. இவ்வகையில் பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பயிரிடுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோதுமை இம்முறையில் அதிகம் பயிரிடப்படும் பயிராகும்.

கலப்பு வேளாண்மை முறை

ஒரு சிறந்த வேளாண்மை முறை -  கலப்புப்பண்ணை வேளாண் முறை ஒரு சிறந்த வேளாண்முறையாகும். ஏனெனில் இதில் பயிர் விளைவித்தல் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இரண்டும் நடைபெறுகிறது. இவ்வகை வேளாண்மை உலகில் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் இத்தகைய கலப்புப் பண்ணைமுறை ஒரு பொதுவான வேளாண்தொழிலாகும்.நினைவில் கொள்க

*பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு அல்லது மாற்றிட வேளாண்மை ரோக்கோ என அழைக்கப்படுகிறது. 98 சதவீத விவசாயிகள் ஆசியாவில் நெற்பயிர் விளைவிக்கும் பணியில் பங்கு பெறுகின்றனர்.
*கரும்பு- கரும்பு வளர சராசரியாக 240 செல்சியஸ் வெப்பம் ஆண்டு முழுவதும் தேவைப்படுகிறது. 130 செ.மீ. மழை தேவை
*தேயிலை - மலைச்சரிவுப் பகுதி 240 செல்சியஸ் வெப்பம். 150 செ.மீ. மழை தேவை
*கோதுமை - 210 செல்சியஸ் முதல் 260 செல்சியஸ் வரை வெப்பம் உள்ள தட்பவெப்ப நிலை. 50 முதல் 60 செ.மீ. வரை சராசரி மழை தேவை. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் கோதுமைப் பயிரிடுகின்றன.
*நெல் - சமமான நிலம்-240 செல்சியஸ் வெப்பம். 150 செ.மீ. மழை தேவை
*ஊறவைத்து மக்கச் செய்தல் - இது ஒரு நுண் உயிரியல் செய்முறை ஆகும். இம்முறையில் சணல் தாவரத்தின் மேற்பகுதியை மிருதுவாக்க 2-3 வாரங்கள் நீரில் ஊறவைத்து மக்கச் செய்த பின் இழைகள் பிரித்தெடுக்கப்படும்.அடுத்த இதழில் தொழிற்சாலை, தொழிற்சாலை வகைகள், வணிகம் போன்றவற்றைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.