பெற்றோரின் ஆளுமை திணிப்பு பிள்ளைகள் மனதைத் திசைத் திருப்பும்!



உளவியல் தொடர் 17

உடல்...மனம்...ஈகோ!


எப்போதும் ஈகோ, முதலில் தன்னைப் புரிந்துகொள்ள வைப்பதுடன், உடன் வாழும் மனிதர்களின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளச் செய்கிறது.
 - ஈகோ மொழி

ஈகோவை நிர்வாக ரீதியாக அணுகும்போது, அது உடல்-மனம் இரண்டுக்குமாக ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சரியானதை உள்ளுணர்வாகச் சுட்டிக்காட்டவே செய்கிறது.நாம் ஒவ்வொருவரும் சிறு குழந்தைகளாக இருந்தபோது, ஈகோ சுட்டிக்காட்டிய உள்ளுணர்வுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவே நடந்துகொண்டிருந்தோம்.

ஆம் யோசித்துப் பாருங்கள், குழந்தைப் பருவத்தில் எந்த ஒரு பொருளின் தேவையும் அவசியம் என்று புரிந்த பிறகு, அதனால் சந்தோஷம் என்று அறிந்த பிறகு அதை ‘அடையவேண்டும்’ என்பதை ஈகோ உள்ளுணர்வாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால் அதை அடைய விரும்பியபடியே இருந்தோம்.

சிறு குழந்தைகள் முன் தின்பண்டங்களையோ, விளையாட்டுப் பொருட்களையோ வைத்துவிட்டால், அதைப் பார்த்த சந்தோஷத்தில் அதை ருசிக்க/அனுபவிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஈகோ உடனடியாக தன்னிச்சையான உள்ளுணர்வாக சொல்லத் தொடங்கிவிடும்.

அதை கைப்பற்றுவதற்காகக் குழந்தைகள் அதை நோக்கி உடனடியாகத் திரும்புவார்கள். சூழ்நிலையைப் பற்றியோ, பெரியவர்களிடம் கேட்கவேண்டும் என்பது பற்றியோ வேறு எதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல், அது வேண்டும், அதுதான் சந்தோஷம் தரக்கூடியது என்ற எண்ணம் எழுந்தவுடன், அதை எடுக்க துடித்துக்கொண்டேயிருப்பார்கள். அது குழந்தைப் பருவத்தில் சந்தோஷத்தை அடைவதற்கான ஆரம்ப நிலை.

 முயற்சியின் முனைப்பால் அதை அடைந்ததும் குழந்தைகளின் முகம்,மனம் இரண்டும் பூரணமாக மலர்வதைப் பார்க்கலாம்.ஈகோவின் இந்த நிலையைத்தான் ‘ஆத்ம வித்யா’ என்று உபநிஷதங்கள் விவரிக்கின்றன. ஆத்ம வித்யா ஒவ்வொரு மனித மனதிலும் சுயமாக, ஒரு இயற்கையான அறிவின் சக்தியாக இருந்துகொண்டேயிருக்கிறது.

வெட்கம், கூச்சம், பயம், பரிகாசம், அச்சம், அவநம்பிக்கை என்று எந்தவித நெகட்டிவ் கட்டுப்பாடுகளைப்பற்றியும் கவலைப்படாமல், விரும்பியதை அடைய வேண்டும் என்ற ஆசையே பொங்கி வழிந்து கொண்டிருப்பது, மனதிற்கு ஒரு உந்துசக்தியாகவே இருக்கிறது.

விரும்பியதை அடைய முயலும்போது மனம் எந்தவிதமான தணிக்கைக்கும் உட்படாத நிலையிலேயே இருக்கும் (uncencored).  உணர்ச்சிகளை உண்மையாகவும், சுதந்திரமாகவும் வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.  அந்த முனைப்புதான் அந்த வயதிற்கான சந்தோஷத்தை அடையவைக்கிறது. அதன் காரணமாகவே அதை ஒவ்வொருவரும் ஒவ்வொருமுறையும் நிறைவேற்றிக்கொள்ள விரும்புகிறார்கள்.

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், ஈகோ வெளிப்படுத்தும் உள்ளுணர்வுகளின் தூண்டுதல்களை விடாமல் நிறைவேற்றிக்கொண்டு வளரும் குழந்தைகள்தான் பெரியவர்களான பின் சுயநலக்காரர்களாக மாறுகிறார்கள்.ஒவ்வொரு குழந்தைகளும் வளர வளர அவர்களுக்குள் இருக்கும் ஈகோ உடல், மனம் என்று இரு பிரிவுகளாகப் பிரித்து வளர்கிறது.

மன வளர்ச்சி செங்குத்தான நிலையிலும், உடல் பக்கவாட்டு முறையிலும் வளர்ந்து நகர்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். செங்குத்தான வளர்ச்சி வாழ்க்கையின் அகத்தேடல் வழியாகக் கிடைக்கும் புரிதலையும், மதிப்பீட்டையும் கண்டடையச் செய்கிறது. உடலியல் சார்ந்த பக்கவாட்டு வளர்ச்சி… வெற்றி, பொருள், புகழ் போன்ற லௌகீகம் சார்ந்த சாதனைகளைக் கண்டடையச் செய்கிறது. இவை இரண்டுக்குமான மையப்புள்ளியில் இருக்கிறது ஈகோ.

ஒரு மனிதரின் திறமையால் விளையும் முன்னேற்றம் அந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது. அது மனிதருக்கு மனிதர் மாறுபட்டபோதும், ஈகோவின் பங்களிப்பு அந்தப் புள்ளியில் இரண்டு நிலைகளிலும் மாறிமாறி நகர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஈகோவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வளரும் குழந்தைகளின் செயல்கள் யாவும் குழந்தைப் பருவத்துடனேயே முடிந்துபோய்விடுகிறது. குழந்தைகள் சமூக நியாயங்களுக்குள் கட்டுப்பட்டு வளரவேண்டும் என்ற பெற்றோர்கள்/ பாதுகாப்பாளர்கள் காட்டும் அதீத அக்கறைதான் அதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

பொதுவாகவே பெற்றோர்கள் (இந்திய பெற்றோர்கள்) பிள்ளைகள் மீது ஆளுமை செலுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். தங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தங்கள் உடல்/மனதின் ஒரு நீடித்த பகுதி (Extended part) என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இதனாலேயே குழந்தைகள் மீது ஆளுமையைச் செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சமூக நீதிகளையும், ஒழுக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் சொல்லி வழிநடத்திக் காட்டும்போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பிள்ளைகள் கவனித்துக்கொண்டே வளர்வார்கள். அதுவே குழந்தைகளின் மனதில் ஈகோவின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமைகிறது.

பொய் சொல்லக்கூடாது என்று கண்டிப்புடன் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள், அவர்களே ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்வதைப் பார்க்கும்போது, குழந்தைகள் மனதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

‘என்னைப் பொய் சொல்லாதேன்னு சொல்லிட்டு இவரு சொல்றாரு?’ என்று தார்மீக ரீதியாக எழும் கேள்விக்கு, ‘பேசாம இரு அதிகப்பிரசங்கி’ என்று அடக்கு முறையால் அவர்கள் வாயை அடைத்து விடுகிறார்கள். பெற்றோர்களின் செயலைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவது, அவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.பாதுகாவலர் (Guardian) விஷயத்தில் இது இன்னும் சற்று அதிகமாகி, ‘சொன்னதைச் செய்…’ (Do what I say) என்ற சர்வாதிகார முறையிலேயே வளர்ப்பு முறைகள் அமைந்துவிடுகின்றன.

இப்படித் தங்களை அறியாமல் குழந்தைகள் மீது ஆளுமையை வன்முறையாகப் பிரயோகிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. அதாவது,  குழந்தைப் பருவத்தில் அனைவருக்குள்ளும் சம அளவில் இருக்கும் ஈகோ, ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனியாகப் பிரிந்து மாறுபட்ட குணம் கொண்டவர்களாக மாறிப்போகச் செய்கிறது.

அன்பு, கருணை, பாசம், நேசம், காதல், ஒழுக்கம்… என்று உணர்வுரீதியான கட்டமைப்புகள் யாவும் ‘கண்டிப்பு’ கலந்து பிரயோகிப்பதால், குழந்தைகளின் ஈகோநிலை மனிதருக்கு மனிதர் மாறுபட்டதாக மாறிவிடுகிறது.சிறியவர்கள் மீதான பெரியவர்கள் காட்டும் வளர்ப்பு முறையிலான வன்முறை குழந்தைகளின் ‘ஈகோ வளர்ச்சி’நிலையை அழுத்தப்பட்ட நிலையிலேயே (compressed state) வளரச்செய்கிறது.

அழுத்தப்பட்ட நிலையில் வளரும் ஈகோ, எந்த உணர்ச்சியையும் சுதந்திரமாய் வெளிப்படுத்த முடியாமல் செய்வதோடு, தனி மனிதர் ஒவ்வொருவருடைய ஆளுமைத்திறனின் கட்டமைப்பையும் (Personality Development) மாற்றி அமைக்கிறது. ஈகோவின் மீது ஏற்படுத்தப்படும் அழுத்தங்களோடு வளரும் குழந்தைகளிடம் உருவாகிவரும் ஆளுமைத்திறன் 4 ஈகோநிலைகளாகப் பிரிந்து வடிவமெடுக்கிறது. அவற்றைப்பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

குரு சிஷ்யன் கதை

விலங்காய் இரு!

சிஷ்யன் பரபரப்பாக இருப்பதைக் கண்டு “என்ன காரணம்” என்று கேட்டார் குரு.   உடனே சிஷ்யன், “என்னவென்று தெரியவில்லை குருவே, மனம் முழுக்க ஒரே பதற்றமாக இருக்கிறது” என்றான்.சிஷ்யனைப் பார்த்த குரு, “பதற்றமாக இருந்தால் விலங்காய் மாறிவிடு” என்றார்.

குரு என்ன சொல்கிறார் என்று புரியாமல் சிஷ்யன் பார்க்க, “என்னுடன் வா” என்று கூறி அடர்ந்த காட்டுக்குள் நடந்தார் குரு. சிறிது தூரம் சென்றதும் அங்கே இரண்டு காளை மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அதைச் சிஷ்யனுக்கு சுட்டிக்காட்டினார். சிஷ்யன் ஆர்வமாகப் பார்த்தான். சிறிது நேரத்தில் ஒரு காளை மாடு பின்வாங்கி ஓடியது.

சிஷ்யனைப் பார்த்து, “என்ன ஆனது பார்த்தாயா?” என்றார் குரு. “சண்டையிட்ட இரண்டு விலங்கில் ஒன்று பின்வாங்கிச் சென்றுவிட்டது” என்றான் சிஷ்யன். குரு சிரித்தபடி, “வாழ்க்கையின் மீதான ருசிதான் விலங்குகளை அப்படிப் பின்வாங்கச் செய்கின்றன. அதுதான் மிருகங்களுக்கே உரித்தான சிறப்பு…” என்றவர், “ஆம், தன் பலத்தைவிட எதிராளியின் பலம் அதிகம் என்பதை உணரும் எவரும், வீணாகச் சண்டையிட்டுக் காயப்பட்டுக்கொள்வதில்லை.

மிருகங்கள் கூட ஒரு சூழலில் சட்டென்று பின்வாங்கி ஓடிவிடுகின்றன. பின்வாங்குவது கோழைத்தனமல்ல. அது ஒரு வழிமுறை… அவ்வளவே. அதேபோல் சண்டையிடும்போது எந்த ஒரு மிருகமும் பதற்றமடைவதே இல்லை…” என்றார்.“பிறகு மனிதர்கள் மட்டும் ஏன் போராட்டமான நேரத்தில் பதற்றம் அடைகிறார்கள்?“ என்றான் சிஷ்யன்.

“வெற்றி பெறமுடியுமோ முடியாதோ என்ற இருதலை எண்ணத்தாலும், உள்ளுக்குள் எழும் பயத்தை ஏற்றுக்கொள்ள முடியாததாலும்தான் மனதுக்குள் பதற்றம் ஏற்படுகிறது. எந்தச் சூழலையும் இயல்பாய் ஏற்றுக் கொள்ளப் பழகினால் போதும் பயம் ஏற்படாது. அதனால் பதற்றமும் எட்டிப்பார்க்காது. பயமும் பதற்றமும் இல்லாதபோதுதான் வாழ்க்கையின் இனிமையை முழுமையாக உணரமுடியும். எனவே, பதற்றமான தருணத்தில் இயல்பானவற்றை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் விலங்காய் இரு...” என்றார் குரு.  குருவின் விளக்கம் புரிந்து சிஷ்யன் தெளிவு பெற்றவனாகத் தலையசைத்தான்.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு