நீங்கள் கமர்சியல் பைலட் ஆகவேண்டுமா?



 நுழைவுத்தேர்வு

நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க!

இந்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் (Ministry of Civil Aviation) தன்னாட்சி அமைப்பாக உத்திரப்பிரதேசம் மாநிலம், ரேபரேலியில் நிறுவப்பட்டுள்ளது Indira Gandhi Rashtriya Uran Academy எனும் கல்வி நிறுவனம். இது 1985 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. இதில் 18 மாதக் கால அளவிலான வணிக விமான ஒட்டி உரிமத்துக்கான (Commercial Pilot License) பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் படிப்பு என்றால் என்ன?
IGRUA - யால் நடத்தப்படும் 18 மாதப் படிப்பான விமான ஓட்டிகளுக்கான கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் (Commercial Pilot Licence - CPL) மல்டி எஞ்சின் எண்டார்ஸ்மென்ட், மல்டி எஞ்சின் ஏர்கிராஃப்டில் இன்ஸ்ட்ருமென்ட் ரேட்டிங் (CPL with IR) பெறுவதற்கான பயிற்சி தொடங்கவுள்ளது.

விமான ஓட்டி (Pilot) பயிற்சி படிப்பிற்கு IGRUA - யில் பொதுப் பிரிவினருக்கு 75 இடங்கள், எஸ்.சி.க்கு 23 இடங்கள், எஸ்.டி-க்கு 11 இடங்கள், பிற பிற்படுத்தப்பட்ட வருக்கு 41 இடங்கள் என மொத்தம் 150 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க, பொதுப் பிரிவினர் +2வில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்கள் கொண்ட பாடப்பிரிவை  எடுத்திருந்து, கணிதம், இயற்பியலில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இப்பாடங்களில் குறைந்தது 50 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மேலும் மாணவர்கள் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் படிப்புடன், கான்பூர் சத்ரபதி சிவாஜி மஹராஜ் பல்கலைக்கழகத்தின் B.Sc (Aviation) பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யும் முறை: கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் படிப்பிற்குத் தகுதியான மாணவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, வைவா, இண்டர்வியூ மற்றும் பைலட் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம், கணிதம், இயற்பியல், அன்றாடச் செய்திகள், பொது அறிவு, ரீசனிங் ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து +2 அளவில் ‘‘சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான (ஆப்ஜக்டிவ் டைப்)  வினாக்கள் இடம்பெறும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது. நிர்ணயிக்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண் எஸ்.சி., எஸ்.டி. பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 5 மதிப்பெண் குறைத்து நிர்ணயிக்கப்படும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வைவா, இண்டர்வியூ மற்றும் பைலட் ஆப்டிடியூட் டெஸ்டிற்கு அனுப்பப்படுவார்கள். இவ்வாறு தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவச் சோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.பயிற்சிக் கட்டணம்: தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 4 தவணைகளாக ரூ.32.5 இலட்சம் பயிற்சிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இது தவிர, சீருடை, நூல்கள், நேவிகேஷன் கம்ப்யூட்டர், ஹெட்போன், உரிமம், தேர்வுக் கட்டணம் இவற்றிற்கு ரூ.1.50 இலட்சம் செலுத்த வேண்டும்.

ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியே தங்கும் இடவசதியும் உண்டு. இவற்றிற்கு மாதக் கட்டணம் ஏறத்தாழ ரூ.10,000 செலுத்த வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.igrua.gov.in என்ற இணையம் வழியே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.6000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் SBI செலான் வழியாகச் செலுத்தலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 22.4.2017  மேலும் முழுமையான விவரங்களைப் பெற மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தைப் பார்க்கவும்.