அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



சேலம் ப.சுந்தர்ராஜ்

மாலைக்கதிர் கறுப்பு காகிதம் ஒட்டிய ஜன்னல் கண்ணாடிகளில் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது. ரகுவும் ரவியும் ஆபீஸ் கேன்டீனில் அமர்ந்திருந்தார்கள். எதிரில் ஆனியன் தோசையில் ஆவி பறந்து கொண்டிருந்தது.

“சார்...principle, principal... இந்த ரெண்டு வார்த்தையும் உச்சரிப்பு ஒரே மாதிரி இருக்கு. பொருள் மட்டும் வித்தியாசப்படுது... ஏன்சார்?” என்று கேட்டான் ரவி.

“ரவி... ரெண்டு வார்த்தைக்கும் உச்சரிப்பு ஒரே மாதிரிதான். ஆனா, பொருள் மாறுபடும். இந்த மாதிரி வார்த்தைகளை ஹோமபோன் (homophone)ன்னு சொல்வோம். இந்த மாதிரி நிறைய ஹோமபோன் வார்த்தைகள் இருக்கு. aisle-isle (அய்ல்), bare-bear (ப்யர்), dear-deer (டியர்) draft-draught (ட்ராஃப்ட்) (council - counsel (கவுன்ஸ்ல்), loose-lose (லூஸ்) son-sun (சன்) stationary-stationery (ஸ்டேசன்ரி)...”

“சார்... இன்னொரு டவுட்.. ‘Stationery’-ன்னா பேனா, பென்சில் மாதிரி எழுது
பொருட்கள்...  ‘Stationary’-ன்னா என்ன சார்?”



“ரவி... அசையாமல் ஒரே இடத்தில் இருப்பதை stationary-ன்னு சொல்வோம். The car collided with a stationary vehicle- நின்று கொண்டிருந்த ஒரு வண்டியின் மீது கார் மோதியது... புரியுதா...?”

“புரியுது சார்...” என்றபடி சர்வரிடம் “இன்னும் ரெண்டு ஆனியன் தோசை” என்று ஆர்டர் செய்தான் ரவி.

சிரித்த ரகு, “ரவி... அது ‘அனியன்’ தோசை... ‘ஆனியன்’ தோசைன்னு சொல்லக்கூடாது... மைக்ரோவேவ் அவன் (Microwave oven) என்பதை மைக்ரோவேவ் ஓவன்னு சிலர் தப்பாச் சொல்வாங்க. அதே மாதிரி மிரக்ள் (miracle) என்பதை ‘மிராக்கிள்’ன்னும் பிழையா உச்சரிப்பாங்க
.
“சாரி சார்... சர்வர்... ஆனியன் வேணாம்பா... ரெண்டு அனியன் கொண்டா...” என்று ரவி சொல்ல இருவரும் சிரித்தார்கள்.