உயர்கல்வியில் கால்பதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சாதகமா? பாதகமா?



ப. திருமலை

கல்வி மட்டுமே சமூக மாற்றத்துக்கான கருவி. அதிலும், உயர்கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அற்புத ஒளி விளக்கு. தம் குடிமக்களுக்கு தரமான கல்வியை வழங்கவேண்டிய கடமை அரசுக்கு உண்டு. ஆனால் அதை தனியார் பக்கம் தள்ளிவிடவே அரசுகள் விரும்புகின்றன. உள்நாட்டு பெரு முதலாளிகளின் கையில் சிக்கி கல்வி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்
களுக்கும் தற்போது சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராகிறது மத்திய அரசு.    

‘சட்டரீதியான சேவை’ என்னும் அடிப்படை உரிமையாக இருந்த கல்வியை வணிகப் பொருளாக மாற்றத் தயாராகிவிட்டார்கள். 1995ல் உருகுவே நாட்டில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் அதற்கான முகாந்திரங்கள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக 2005ல் ‘வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி இந்தியாவுக்கு வந்து கல்வி நிறுவனங்களைத் தொடங்கலாம்’ என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பலத்த எதிர்ப்பின் காரணமாக அது திரும்பப் பெறப்பட்டது. பின்னர் 2010ல் வெளிநாட்டுக் கல்வி கற்பித்தல் மசோதா என்ற பெயரில் ஒரு மசோதாவை நிறைவேற்றி அதன்மூலம் கல்வியில் 100% அன்னிய நேரடி மூலதனம் கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால், ராஜ்யசபாவில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

இப்போது உலக வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசின் நோக்கம் நேரடியாகவே நிறைவேறும் சூழல் உருவாகியிருக்கிறது.  உலக வர்த்தக அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் GATS. வணிகம் மற்றும் சேவை பற்றிய பொது ஒப்பந்தம் இது. உலக வர்த்தக அமைப்பில் 146 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. ஆனாலும் இந்த அமைப்பின் செயல்திட்டங்களைத் தீர்மானிப்பதும், வழிநடத்துவதும் கார்ப்பரேட் கம்பெனிகள்தான். உலக வர்த்தக அமைப்பின் அனைத்துக் கமிட்டிகளிலும் உலக கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் உறுப்பினராக இருந்து இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். வணிக ரீதியான முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இவர்கள் விதைத்ததுதான், ‘கல்வியை வணிகப் பொருளாக்க வேண்டும்’ என்ற திட்டம்.

கல்வியை வழங்குவது அரசின் கடமை என்றிருந்த நிலையை மாற்றி, மாணவர்களை “நுகர்வோர்” என்றும், கல்வி நிறுவனங்களை “சர்வீஸ் புரொவைடர்’ என்றும், கல்வியை “வர்த்தகப் பொருள்” என்றும் அடையாளம் காட்டுகிறது GATS ஒப்பந்தம். பல நாடுகள் கையெழுத்து போட்டுவிட்ட நிலையில், இந்தியா கடும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் நைரோபியில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் கையெழுத்திட தீர்மானித்திருந்தது மத்திய அரசு. ஆனால் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பால் தற்காலிகமாக அது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டால், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் தொடங்கிவிடும். உயர்கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா தான் இருக்கிறது. அந்த சந்தையைக் கைப்பற்றுவதே வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் இலக்கு. உயர்கல்வியில் உலகளாவிய முதலீடு ரூ.49 லட்சம் கோடிகளைத் தாண்டி விட்டது. கல்வியை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா தான் முன்னிலை வகிக்கிறது.

உலகத்தின் ஒட்டுமொத்த லகானையும் தன் சுண்டுவிரலுக்குள் கொண்டுவரத் துடிக்கிற அமெரிக்கா, இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. இது இந்தியாவின் உயர்கல்விச் சூழலையே தகர்த்துவிடும் என்று ஒரு தரப்பு குமுறுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கும் என்கிறது மற்றொரு தரப்பு.

“இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்கள். வெளிநாட்டு நிறுனங்கள் இந்தியாவிலேயே கல்வியை வழங்கினால் இம்மாணவர்கள் பயன்பெறுவார்கள். பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியா வந்தால் இங்குள்ள நிறுவனங்கள் அவற்றோடு போட்டி யிட வேண்டும். அதனால் இந்தியாவின் கல்வித்தரம் உயரும். சர்வதேசத் தரத்தில் நம் மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும்” என்பது ஆதரவாளர்களின் வாதம்.

ஆனால், “இந்தியக் கல்வித் துறையில் ஏற்கெனவே தனியாரின் ஆதிக்கம் அதிகம். உயர்கல்வியின் விலை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏழை மாணவர்கள் தடுமாறி நிற்கிறார்கள். இந்தச் சூழலில் வெளிநாட்டு நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால், கல்விக் கட்டணம் பன்மடங்காக உயரும். உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும். இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகைகள், உள்ளூர் மொழிகள், மானியங்கள் எல்லாம் காணாமல் போய்விடும் என்று அஞ்சுகிறார்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள்.  



அதுமட்டுமில்லாமல், இந்தியக் கல்வி நிறுவனங்களில் சொற்பமாக இருக்கும் தரமான ஆசிரியர்களையும் கூடுதல் ஊதியம் என்ற ஆசையைக் காட்டி அன்னிய கல்வி நிறுவனங்கள் இழுத்துக்கொள்ளும். அதனால் அரசுக் கல்வி நிறுவனங்கள் மேலும் தேய்ந்துபோகும் அபாயம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். கல்வியை வணிகப் பொருளாக்கி விட்டால், முற்றிலும் சந்தை விதிகளின் அடிப்படையில்தான் இயங்கும். அறம் சார்ந்த கல்வி காணாமல் போகும். கல்வி நிறுவனங்கள் லாப நஷ்ட கணக்குகளையே பார்க்கும். அவர்கள் நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தைத் தான் கட்டவேண்டியது வரும். மாநில அரசும் இதில் தலையிட முடியாத சூழல் ஏற்படும். இப்போதே பல பொறியியல் கல்லூரிகள் உள்ளூர் போட்டியையே சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வந்தால் உள்ளூர் கல்வி நிறுவனங்கள் காணாமல் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள், அவர்கள் நாட்டில் வழங்கும் அதே தரமான கல்வியைத்தான் இங்கு தருவார்கள் என்பதற்கான உத்திரவாதமும் இல்லை. அவர்கள் இங்கே உள்ள அமைப்புகளையும், ஆசிரியர்களையும் பயன்படுத்தி தங்கள் நாட்டு ‘லேபிலை’ மட்டும் ஒட்டி கல்வியை வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா, நாடுகளில் தரமான வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து அனுமதிக்கிறார்கள்.

அதேபோல இங்கும் தேர்வுமுறை இருந்தால் நல்லது என்கிறார்கள். இந்தியாவில் உள்ளூர் தொழில்களின் வளர்ச்சிக்குத் தேவையான கல்வித் திட்டம் உள்ளது. ஆனால், அன்னிய நிறுவனங்கள் அவர்களின் கல்வித் திட்டத்தின்படி பயிற்றுவித்து, நம் மாணவர்களை அவர்கள் நாட்டுக்கான தொழிலாளர்களாக தயாரித்து அழைத்துச் செல்லும் வாய்ப்பும் உள்ளது. புதிதாக வரும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இங்கு போதிய கட்டுமான வசதிகளைக் கொண்டிருக்காது.

உள்ளூர் சூழலை சார்ந்து, கலை, கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கல்வித் திட்டத்தை மாற்றி, உலகளாவிய, வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்களைக் கொண்டு வர முயற்சிப்பார்கள். இது அரசு கல்வி நிறுவனங்களுக்கும், பாரம்பரிய இந்திய கல்வி முறைக்கும் எதிரானதாகவே இருக்கும். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடனான பிரச்னைகளை உள்ளூர் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது என்கிறார்கள். அதற்காக அமைக்கப்படும் உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பாயத்துக்கே செல்ல வேண்டும்.

“பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களையும், உலக வர்த்தக நிறுவனங்களையும் இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது. இதற்குப் பதில் இந்தியாவில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்...” என்கிறார்கள் GATS ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள். அமெரிக்காவில் உயர் கல்விக்கு செலவிடும் நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17%. ஆனால் இந்தியாவில் 4.1% தான். அண்டை நாடான சீனாவில் 10%. எனவே உயர்கல்விக்கான நிதி உயர்த்தப்பட வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

‘கல்வி என்பது மனிதனை முழுமையான வனாக மாற்றும்’ என்றார் விவேகானந்தர் ஆனால், ‘கல்வி என்பது நல்ல சம்பளத்தைப் பெறுவதற்கான வழி’ என்ற நிலை இன்று உருவாகிவிட்டது. வகுப்பறைதான் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும். இந்திய கல்வி நிறுவனத்தின் வகுப்பறை தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். ஏதோ ஒரு நாட்டின் வகுப்பறை அதை தீர்மானிக்கக்கூடாது என்ற கல்வியாளர்களின் அச்சத்தை புறக்கணிக்க முடியாது!                 

"இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்கள். வெளிநாட்டு நிறுனங்கள் இந்தியாவிலேயே கல்வியை வழங்கினால் இம்மாணவர்கள் பயன்பெறுவார்கள்"

"இந்தியக் கல்வித்துறையில் ஏற்கெனவே தனியாரின் ஆதிக்கம் அதிகம். உயர்கல்வியின் விலை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏழை மாணவர்கள் தடுமாறி நிற்கிறார்கள்."