சுய பரிசோதனை செய்ய வேண்டும்!



பிரிக்ஸ் நாடுகளின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றது பெருமிதமாக இருந்தது. தமிழக கல்வி நிறுவனங்களைக் குறை சொல்பவர்கள் இனியாவது யோசிக்க வேண்டும்.
- தமிழ்ச்செல்வி, திருநெல்வேலி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உளவியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாணவர்களுக்கு மருந்து தடவியது ‘தேர்வுக்கு தயாராவது எப்படி?’ கட்டுரை. உண்மையில் இந்த பேரிடரால் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் மிரண்டு போயுள்ளார்கள். நோட்டு புத்தகங்கள், ஆவணங்களை மீட்டுத் தருபவர்கள் பற்றிய கட்டுரையும் மிகவும் பயனுள்ளது.
- ஜேம்ஸ் பிரடெரிக், ஆவடி



ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் போல தமிழகத்திலும் ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றி நம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை காப்பாற்ற வேண்டும். ஒரு பக்கம், நமக்கு இயல்பாக சேர வேண்டிய உரிமைகளைப் பெறவே போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம், இருக்கும் உரிமைகளையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.
- எழில் வேந்தன், நாகப்பட்டினம்

‘பள்ளிகள் காவல் நிலையங்கள் அல்ல’ என்ற ‘ஆயிஷா’ நடராஜனின் கட்டுரை அதிர்வை உருவாக்கியது. நம் கல்விமுறையை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆசிரியர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- சங்கர நாராயணன், நாகர்கோவில்

புதிய கல்விக்கொள்கை மீது பெரும் எதிர்பார்ப்போடு இருந்த என்னைப் போன்ற ஆசிரியர்களை சிந்திக்க வைத்தது இரத்தின புகழேந்தியின் கட்டுரை. கல்வி என்பது தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பது. அதில் தங்கள் உள்நோக்கங்களை பிரயோகிப்பது ஆட்சிக்கும் நல்லதல்ல. கட்சிக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல.
- சாகுல்ஹமீது, பொன்னேரி.