இந்திய ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை!



18,252 பேருக்கு வாய்ப்பு

உலகிலேயே அதிகப் பணியாளர்களைக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமை இந்திய ரயில்வேக்கு உண்டு. பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய ரயில்வேயில் பணியாற்றுவது என்பது பெரும்பாலானவர்களுக்கு நீண்ட நாள் கனவு. சமீப காலமாக அந்தக் கனவு நமக்கு கையருகே வந்திருக்கிறது. காரணம், இந்தி ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வெழுதக் கூடிய வசதி. இந்த நல்ல தருணத்தில்தான் இந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18,252 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ‘ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016’ வெளியிட்டுள்ளது. ஆக, நிச்சயமாக இது ஒரு பொன்னான வாய்ப்பு எனலாம்.

இந்தியாவில் ரயில்வே துறையில் உள்ள பணிகளுக்கான ஆள் தேர்வுக்கென சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும் 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் இயங்கிவருகின்றன. இவை அனைத்தும் ரயில்வே பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தி வந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியைப் பெற்றிராத மாநிலமொழி மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவும் அனுமதி கிடைத்தது. இந்தச் சூழலில் தற்போது  Goods Guard, Clerk, Typist, Station Master என, தொழில்நுட்பம் அல்லாத 18,252 ரயில்வே பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்களின் விவரம்: கமர்ஷியல் அப்பரண்டீஸ் பிரிவில் 703 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200), டிராபிக் அப்ரண்டீஸ் பிரிவில் 1645 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200), என்கொயரி கம் ரிசர்வேஷன் கிளார்க் பிரிவில் 127 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800), கூட்ஸ் கார்ட் பிரிவில் 7591 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800), ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 1205 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,800), சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 869 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800), உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பிரிவில் 5942 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800), டிராபிஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 166 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800), சீனியர் டைம் கீப்பர் பிரிவில் 4 பணியிடங்களும் (சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000) காலியாகவுள்ளன.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். அனைத்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்க்கவும்)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு வாரியங்கள்: அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டீகர், சென்னை, கோரக்பூர், கவுஹாதி, ஜம்மு - நகர், கொல்கத்தா, மால்டா, மும்பை, முசாஃபர்பூர், பாட்னா, ராஞ்சி, செகந்தராபாத், சிலிகுரி, திருவனந்தபுரம். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2016

தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்கள்!

இந்திய ரயில்வேயின் 21 தேர்வு வாரியங்களுள் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist, Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் ஒதுக்கியுள்ளது. அதன் விவரம் வருமாறு... Commercial Apprentice - 105, Traffic Apprentice - 127, Goods Guard - 182, Junior Accounts Assistant-Cum- Typist - 93, Senior Clerk-Cum-Typist - 76, Asst Station Master - 393.