இந்தியாவுக்குள்ளேயே கற்கலாம் வெளிநாட்டுக் கல்வி!



கடந்த இதழில் இங்கிலாந்து நாட்டின் டாப்-6 கல்வி நிறுவனங்களைப் பார்த்தோம். இப்போது டாப்-7. University of Warwick (www2.warwick.ac.uk). 1965ல் தொடங்கபட்ட கல்வி நிறுவனம் இது. 29 அகாடமிக் துறைகள் இங்கு உள்ளன. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இது டாப்-10 பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. லண்டனில் இருந்து 1 மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் காவென்டிரி (Coventry) நகரத்தில் இருக்கிறது.

25,245 மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். இதில் 25% வெளிநாட்டு மாணவர்கள். ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதற்காகவும், வேலைக்குத் தகுதிப்படுத்துவதற்காகவும் சுமார் 170 ஈவெண்ட்களை இந்தக் கல்வி நிறுவனம் நடத்துகிறது. இங்கு படிக்க ஓராண்டுக்கு 16.5 லட்சம் முதல் 22 லட்சம் வரை செலவாகலாம்.

டாப்-8 இடத்தில் இருப்பது Imperial College London (www.imperial.ac.uk). 1907ல் தொடங்கப்பட்ட கல்லூரி. ஏராளமான கண்டுபிடிப்புகள் இந்த கல்லூரி வளாகத்தில் நடந்திருக்கின்றன. பென்சிலினை கண்டுபிடித்தவர்கள் இந்தக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள்தான். பைபர் ஆப்டிக்ஸ் வயரை கண்டறிந்ததும் இவர்கள்தான். குளோபல் ஹெல்த், கிளைமேட் சேஞ்ச், எனர்ஜி, அட்ரஸ் செக்யூரிட்டி உள்ளிட்ட துறைகளில் பலநூறு பேர் இங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தம் 16,225 மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள்.

அதில் 30 சதவீதம் வெளிநாட்டு மாணவர்கள். 140 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். ஏராளமான நிறுவனங்கள் இங்கு படிக்கும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பவுண்ட்களை கொட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அறிவியல், எஞ்சினியரிங், மெடிக்கல் ரிசர்ச், டீச்சிங் படிப்புகளுக்கு இந்த கல்வி நிறுவனம் சிறப்பு வாய்ந்தது. இங்கு படிக்க ஆண்டுக்கு 27 லட்சம் முதல் 31 லட்சம் வரை செலவாகும்.

டாப்-9 இடத்தில் இருக்கும் கல்வி நிறுவனம் Exeter University (www.exeter.ac.uk). இது Devon என்ற இடத்தில் உள்ளது. 1855ல் ஸ்தாபிக்கப்பட்டது. 19,525 மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் 54 சதவீதம் பெண்கள். 21 சதவீதம் சர்வதேச மாணவர்கள். இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் இடையில் ஓராண்டு வெளிநாட்டில் போய் படிக்கலாம். அல்லது இன்டர்ன்ஷிப் செய்துவிட்டு திரும்பவும் படிப்பைத் தொடரலாம். ஆண்டுக்கு 16 லட்சம் செலவாகும். எனர்ஜி, ஜியாலஜி, மெட்டீரியல் அன்ட் மினரல் எஞ்சினியரிங், திரைப்படப் படிப்புகள், தியாலஜி, டிராமா, ஸ்போர்ட்ஸ் சயின்ஸ், விலங்கியல், சமூகவியல் படிப்புகளுக்கு இந்த கல்வி நிறுவனம் பெஸ்ட்.
 


டாப்-10 இடத்தில் இருப்பது Lancaster University. (www.lancaster.ac.uk), Lancaster என்ற நகரத்தில் இருக்கிறது. 1964ல் தொடங்கப்பட்டது. 13,080 மாணவர்கள் படிக்கிறார்கள். 23 சதவீதம் சர்வதேச மாணவர்கள். இங்கு படிக்க 13.5 லட்சம் முதல் 22.5 லட்சம் வரை செலவாகும். அரசியல், தத்துவம், வணிக மேலாண்மை, சமூகவியல், கணிதம், கணினி சார்ந்த படிப்புகளுக்கு இந்தக் கல்வி நிறுவனம் நல்ல சாய்ஸ்.

காலமும் சூழலும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில், வெளிநாட்டுப் படிப்பே கனவாக இருந்தது. பெரும் செல்வம் கொண்ட ஒருசில குடும்பத்துப் பிள்ளைகளுக்கே வாய்த்தது. இன்று, நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள் கூட வெளிநாட்டுக்குப் போய் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. நாளை, இதுவும் கடந்துபோகப் போகிறது.

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களே நம்மைத் தேடி வரப்போகின்றன. தற்போது உயர் கல்வியைப் பொறுத்தவரை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்யமுடியும். ஆனால் நேரடியாக அவர்கள் கல்வி நிறுவனம் நடத்தி பட்டம் வழங்க முடியாது. இந்த நிலை மாறப்போகிறது. உலக வர்த்தக அமைப்பு இதற்கென உலகளாவிய ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. விரைவில் அதில் இந்தியா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், 150 நாடுகளில் இருந்தும் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் வந்திறங்கும். இந்திய மாணவர்கள் இந்தியாவுக்குள்ளேயே வெளிநாட்டுக் கல்வியை பெறமுடியும். சரி... இங்கிலாந்தில் உள்ள படிப்புகளைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

"ஒரு காலத்தில், வெளிநாட்டுப் படிப்பே கனவாக இருந்தது. பெரும் செல்வம் கொண்ட ஒரு சில குடும்பத்துப் பிள்ளைகளுக்கே வாய்த்தது. இன்று, நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள் கூட வெளிநாட்டுக்குப் போய் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. நாளை, இதுவும் கடந்துபோகப் போகிறது. வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களே நம்மைத் தேடி வரப்போகின்றன."