டி.என்.பி.எஸ்.சி. குரூப் IIA தேர்வு கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி!



எஸ்.வடிவேல் M.A., M.S.(IT)

ஜனவரி 24ம் தேதி தேர்வு. கொஞ்ச நாட்கள்தான் மிச்சமிருக்கின்றன. வெற்றி, கைக்கெட்டும் தூரத்தில். இருக்கும் ஒவ்வொரு நொடியையும்  திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். மொழிப் பாடத்துக்கு (ஆங்கிலம்/தமிழ்) 50%, பொது அறிவுப் பாடத்துக்கு 50% என நேரத்தைப் பிரித்துக்கொள்ளுங்கள். பதற்றமின்றி நிதானமாக தயாராகுங்கள்.  கடந்த இதழில், பகுதி-ஈ பிரிவில் வரும் பொதுஅறிவு பாடத்தில் Unit-IV வரையிலான பாடத்திட்டங்களையும், அவற்றில் இருந்து கேட்க வாய்ப்புள்ள கேள்விகளையும் பார்த்தோம். இந்த இதழில், UNIT-V முதல் UNIT-VIII வரை உள்ள பாடங்கள் பற்றி பார்க்கலாம்.

UNIT-V இந்திய அரசியல்

இந்திய அரசியலமைப்பு, அரசியல் அமைப்பின் முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பியல்புகள், மத்திய, மாநில ஆட்சிப் பகுதிகள்,  குடியுரிமை- உரிமைகளும் கடமைகளும், அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், மனித உரிமை சாசனம், இந்திய நாடாளுமன்றம்,  மாநில நிர்வாகம்,  மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அரசு, பஞ்சாயத்து ராஜ், தமிழகம் மற்றும் இந்தியாவின் நீதித்துறையின் அமைப்பு,  சட்டத்தின் ஆட்சி, தக்க சட்டமுறை தேர்தல்கள், அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII,  பொது வாழ்வில் ஊழல் - ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்,  மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், லோக் அதாலத் - முறை மன்ற நடுவர், இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர், தகவல் அறியும் உரிமை, பெண்கள் முன்னேற்றம், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகிய பாடங்களை உள்ளடக்கியது இப்பிரிவு.  இப்பிரிவில், 7 முதல் 10 கேள்விகள் வரை கேட்கப்படுகிறது. பாராளுமன்றம் - நீதிமன்றம் - உள்ளாட்சி - அடிப்படை உரிமைகள்/கடமைகள் மற்றும் அமைப்பு களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.

இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள்:

1. குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி வழங்கப்பட்ட அடிப்படை உரிமையின் ஷரத்து எது?
214
2. அடிப்படைக் கடமைகளை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றது?
ரஷ்யா
3. குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தினை யாரிடம் வழங்குவார்?
துணைக் குடியரசுத் தலைவரிடம்
4. உலகிலேயே நீண்ட அரசியலமைப்பு எது?
இந்திய அரசியலமைப்பு
5. உள்ளாட்சி தேர்தல்களை நடத்தும் தேர்தல் ஆணையம் எது?
மாநில தேர்தல் ஆணையம்
6. இந்தியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட ஆண்டு?
1921

UNIT-VI : இந்தியப் பொருளாதாரம்

இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள், ஐந்தாண்டு திட்டங்கள் - மாதிரிகள் - ஒரு மதிப்பீடு, நில சீர்த்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை, வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு, தொழில் வளர்ச்சி, கிராம நலம் சார்ந்த திட்டங்கள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், மக்கட்தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை, தமிழகத்தின் பொருளாதார போக்கு ஆகிய பாடங்களை உள்ளடக்கியது இப்பிரிவு.

இப்பிரிவில் 6 முதல் 8 கேள்விகள் வரை கேட்கப்படுகிறது. இவற்றில் முக்கிய நிகழ்வுகள், மத்திய/மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள், வங்கிகளின் சேவைகள் மற்றும் கட்டுப்பாடுகள், விவசாயத்துறையின் உற்பத்தி - நுகர்வு, தொழில்துறை - சேவைத்துறைகளின் முக்கிய நிகழ்வுகள், மக்கள்தொகை பரவல்கள் - திட்டங்கள் போன்றவற்றில் இருந்து அதிகமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள்:

1. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
M.S. சுவாமிநாதன்
2. ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுக்கும் அமைப்பு எது?
திட்டக்குழு
3. வங்கிகளின் வங்கி என்று அழைக்கப்படும் வங்கி எது?
RBI
4. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ெதாடங்கப்பட்டது?
1980
5. நேர்முக வரி எது?
வருமான வரி, வெகுமதி வரி, சொத்து வரி



UNIT-VII : இந்திய தேசிய இயக்கங்கள்

1857, பெருங்கலகம் மற்றும் முன் கிளர்ச்சிகள், இந்திய தேசிய காங்கிரஸ், தேசத்தலைவர்களின் எழுச்சி, காந்தி, நேரு, தாகூர், நேதாஜி, பல்வேறு போராட்ட முறைகள், ஜாதிப் பிரிவினைகள், விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பிறர், இந்தியா விடுதலை ெபற்றது முதல் அரசியல் கட்சிகளின் உதயம் மற்றும் இந்தியாவின் அரசியல் நிலைகள் ஆகிய பாடங்களை உள்ளடக்கியது இப்பிரிவு. இப்பிரிவில் 5 முதல் 7 கேள்விகள் கேட்கப்படுகிறது. இப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற 1885 முதல் 1947 வரையிலான இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை நன்கு படித்தால் போதும்.

இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள்:

1. சென்னை மகாஜன சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
1884
2. இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை யார்?
A.O. ஹீம்
3. சுதேசி இயக்கம் தொடங்கியபோது இந்திய வைசிராய் யார்?
கர்சன் பிரபு
4. ‘பஞ்சாபின் சிங்கம்’ என்று அழைக்கப்பட்டவர்?
லாலா லஜபதிராய்
5. ‘டெல்லி சலோ’ என்ற கோஷத்தினை முழங்கியவர்?
நேதாஜி
6. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை தொடங்கியவர்?
வ.உ.சி.
7. ‘இந்தியா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவர்?
பாரதியார்

UNIT-VIII : திறனறிவு மற்றும் புத்திக்கூர்மை தேர்வு

தகவல்களை விவரங்களாக மாற்றுதல், விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல், அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள், விவர பகுப்பாய்வு விளக்கம், சுருக்குதல், சதவிகிதம், மீப்பெரு பொது வகுத்தி (HCF), மீச்சிறு பொது மடங்கு (LCM), விகிதம் மற்றும் சரிவிகிதம், தனிவட்டி, கூட்டு வட்டி, பரப்பளவு, கன அளவு, நேரம் மற்றும் வேலை, தர்க்க அறிவு, புதிர்கள், பகடை, காணொளி, தர்க்க அறிவு, எண் கணித தர்க்க அறிவு, எண் தொடர்கள், தர்க்கம்/எண்கள்/எழுத்துக்கள்/வரைபடத் தொடர்கள் ஆகிய பாடங்களை உள்ளடக்கியது இப்பிரிவு. இதில் ஒவ்வொரு தலைப்பின் கீழும் நன்கு பயிற்சி பெற வேண்டும், இவற்றில் 25 கேள்விகள் வரை கேட்கப்படும். எனவே இப்பகுதியை மாணவர்கள் நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள்:

1. ஒரு எண்ணில் 6/5 பங்கில் 3/5 பங்கில் 1/4 பங்கானது 54 எனில் அந்த எண் யாது?
300
2. சுருக்குக : 3640÷14*16+340 =?
4500
3. ஒரு தந்தை தன்னுடைய சொத்தில் 20% மூத்த மகளுக்கும் மீதமுள்ளவற்றில் 40% இளைய மகளுக்கும், மீதம் தன்னிடம் உள்ள ரூ. 9,600ஐ தன் மனைவிக்கும் கொடுக்கிறார் எனில் அவருடைய மொத்த சொத்தின் மதிப்பு யாது?
20,000
4. ஒரு எண்ணிற்கும் அதன் 5-ல் 3 பங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் 120 எனில் அந்த எண்ணின் 30% எவ்வளவு?
90
5. இரு எண்களின் வித்தியாசம் 176, அவற்றின் விகிதம் 5:16 எனில் முதல் எண் என்ன?
80

தேர்வுக்கு முழு மனதோடும் நம்பிக்கையோடும் தயாராகுங்கள். கவனச்சிதறல் இல்லாமல் படித்து உள்வாங்குங்கள். சந்தேகங்கள் இருந்தால் அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். உங்களுக்கே அரசுப்பணி! வாழ்த்துகள்!       
                     
"வெற்றி, கைக்கெட்டும் தூரத்தில். இருக்கும் ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு பயன்படுத்துங்கள்."