2015 கல்வித்துறையில் கசப்பும் இனிப்பும்



இரத்தின புகழேந்தி

ஒவ்வோர் ஆண்டு நிறைவடையும் போதும் அந்தாண்டில் நடைபெற்ற பணிகளை மதிப்பிடுவது, அடுத்து வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளுக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், பள்ளிக் கல்வித்துறையில்  கடந்தாண்டு  செய்யப்பட்ட ஆக்கப்பூர்வமான பணிகளையும் நிறைவேற்றத் தவறிய பணிகளையும் பட்டியலிடலாம். கல்வித்துறைக்கு இதற்கு முன்பு எப்போதும் ஒதுக்கிடாத வகையில் நடப்பு ஐந்தாண்டுத் திட்டத்தில் 85,422 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம் தான். மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2015ல் மட்டும் 1,080 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கடும் உழைப்பால்,  13 விழுக்காடாக இருந்த மாணவர் இடைநிற்றல் விகிதம் 1.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளியின் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. தேர்வு முறையில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. விடைத்தாள்களில் விரும்பத் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படி ஆக்கப்பூர்வ பணிகளை வரிசைப்படுத்தலாம். அதே நேரம், பின்னடைவுகளும் ஏராளம் உண்டு. காலியாக உள்ள 71 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 52 ஆயிரம் பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. மீதி 19 ஆயிரம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன. இது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை உருவாக்கியுள்ளது.

ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குழப்பமான நடவடிக்கைகளாலும், தெளிவாக திட்டமிடாததாலும் நீதித்துறையின் தீர்ப்புக்குக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளில் கன்னிமாரா நூலகத்தில் மின் மயமாக்கப்பட்ட அரிய நூல்களை பதிவேற்றம் செய்து தரப்படும் என அறிவித்தார்கள். ஆசிரியர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்ற அந்த அறிவிப்பும் அறிவிப்பாகவே நின்றுபோனது. நடைமுறைக்கு வரவில்லை. பல கிராமப்புற மாணவர்கள் மடிக்கணினியைப் படம் பார்க்கவே பயன்படுத்துகின்றனர்.



பல பள்ளிகளில், விளையாட்டு, ஓவியம், கணினி பிரிவுகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வாரத்தில் மூன்றரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதும் என அறிவித்தனர். இது மிக மோசமான முன்னுதாரணமாக உள்ளது. இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆண்டு தோறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதுவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டட வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சாரண-சாரணியர் இயக்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு அவர்களே முகாம் கட்டணத் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனை அரசே ஏற்கலாம். கடந்த  3 ஆண்டுகளாக ஆளுநர் விருது பெறுவதற்கு தயாராக உள்ள மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. மாணவர்களின் கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

கடும் கனமழையால் பல மாவட்டங்களில் கல்விச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறை விடப்பட்டது. பாடங்கள் தேங்கின. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வகையில் 2015ன் இறுதி நாட்கள் துயரத்தோடு நகர்ந்தன. இந்தச் சூழல், ஆசிரியர்களுக்கு பெரும் பொறுப்பை உருவாக்கியிருக்கிறது. 2016, புதிய நம்பிக்கையைத் தருகிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. எல்லாம் மாறும். தீயவை அகலும். நல்லவை நாடி வரும்..!