சிங்கையில் ஒரு குருஷேத்திரம் விமர்சனம்






   சிங்கப்பூர் சொர்க்க பூமி என்றே எல்லோரும் நம்பினாலும், அங்கும் ஏழை மக்கள் உள்ளனர், அவர்கள் வாழ்வு பல்வேறு சிக்கல்களுடன் உள்ளது என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.

ஒரு பெண், போதைக் கடத்தில் குற்றத்துக்காக மரணதண்டனை அடைய நேரும் உருக்கமான காட்சிகளுடன் படம் துவங்குகிறது. அவளுடைய அப்பாவிக் கணவன் மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்று கலங்கிப் புலம்பும்போது, நெகிழாத நெஞ்சங்களே அரங்கில் இல்லை எனலாம். அந்த இரு பிள்ளைகளில் ஒருவன், மூளை வளர்ச்சி குன்றியவன் வேறு.

அந்தப் பெண்ணின் சகோதரன் அப்பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பைத் தானே ஏற்பதாகக் கூறும்போது, அவன் நல்லவன் போலத் தோன்றுகிறான். ஆனால், போகப்போக அவன் சொரூபம்  தெரிகிறது. சகோதரியைப் போதைக் கடத்தலில் மாட்டிவிட்டவனே அவன்தான். அவள் கணவன் சாவுக்கும் அவனே காரணம். அப்பிள்ளைகளையும் கடத்தல் தொழிலுக்கே பழக்கி வளர்க்கிறான்.

மாமாவின் உண்மை முகம் தெரிந்த பின் அந்த மூத்தபிள்ளை பொங்கியெழுந்து, கடத்தல் சாம்ராஜ்யத்தையே எப்படி நிர்மூலம் செய்கிறான் என்பதே கதை.

ஆங்கிலப் படங்களுக்கு இணையான, த்ரில்லராக அமைந்துள்ள இப்படத்தில் விஷ்ணு, சிவகுமார், மதியழகன், பிரகாஷ் அரசு, விக்னேஷ்வரி உள்ளிட்ட அத்தனைக் கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் டி.டி.தவமணியைப் பாராட்டலாம்.