பத்துக்குப் பத்தடி அறை அது. ஒரு ஓரத்தில் சின்ன மேடைகள், ஒற்றை அடுப்பு. எண்ணி நாலு பாத்திரங்கள். ஒரு தட்டு ஒரு தம்ளர், குடம், மறுபக்கம் அலமாரி ஓரத்தில் ஒரு ஸ்டூல், கறை படிந்த சுவர், சிமெண்ட் பெயர்ந்த தரை. மினிக்கு அந்த வீட்டைப் பார்க்கையில் அருவருப்பாக இருந்தது. அந்த வீட்டில் இருந்து எழுந்த ஒரு விதமான வாடை அவளது வயிற்றைக் குமட்டியது.
“ஜீவா எனக்கு இந்த வீடே பிடிக்கலை!”
“ஏய் சாதாரணமா சொல்லிட்டே. இந்த சின்ன வீட்டைப் பிடிப்பதற்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இந்த வீட்டோட வாடகை ஐந்நூறு ரூபாய். பத்து மாச அட்வான்ஸ் வேறு. என் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை விற்றதால்தான் இந்த செலவை எல்லாம் சமாளிக்க முடிஞ்சது!”
அவனுடைய வாழ்க்கை நலத்திற்கு சிரத்தை காட்ட வேண்டியது அவளுடைய கடமை என்பதை உணர்ந்தாள்.
“உன் அருகில் இருப்பதென்றால் இந்த சின்ன வீடும் எனக்கு சொர்க்கம் தான் ஜீவா!” என்று அவன் தோள் மீது மென்மையாக சாய்ந்து கொண்டாள். ஜீவா அவளது தலையை மிருதுவாக வருடி விட்டான்.
“கையில் இருக்கிற பணம் காலியாவதற்கு முன்னால் ஒரு வேலையை தேடிக்கணும் மினி!”
“உனக்கிருக்கிற புத்திசாலித்தனத்துக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்ப்பா!”
“இன்னும் பாய் தலயணையெல்லாம் வாங்க வேண்டியதிருக்கு. நான்போய் வாங்கிட்டு வந்துடறேன். சமைச்சு வை. பசிக்க ஆரம்பிச்சிடுச்சு!” சொல்லிக் கொண்டே விறுவிறுவென வெளியே வந்து பைக்கில் ஏறி ஸ்டார்ட் பண்ணினான்.
“ஐயோ ஜீவா... எனக்கு சமைக்கத் தெரியாது!”
“தெரிஞ்சதை சமைச்சு வை!”
பைக்கின் சத்தத்துடனே அவன் சொன்னது கேட்டது. பைக்கின் வேகத்தை அதிகரித்து கிளம்பிப் போய்விட்டான்.
மினி மண்ணெய் ஸ்டவின் முன்பு ஆர்வமாக வந்து நின்றாள். ஸ்டவ்வை எப்படி பற்ற வைப்பது என்பது தெரியவில்லை. பாதி தீப் பெட்டியை வீணாக்கி ஒரு வழியாக ஸ்டவ்வைப் பற்ற வைத்துவிட்டாள். எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது ஒரு அகலமான பாத்திரத்தை தூக்கி வைத்தாள். பாத்திரம் நிறைய தண்ணீர் ஊற்றினாள். ஜீவா வாங்கி வைத்திருந்த அரைகிலோ அரிசியையும் அதில் கொட்டினாள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து பொங்கி வழியத் தொடங்கியது.
மினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்பு கரண்டியை எடுத்து மெதுவாகக் கிளறினாள். கிளறின கொஞ்ச நேரத்திலேயே அடுப்பிலிருந்து சாதத்தை இறக்கிவிட்டாள். அடுத்து என்ன செய்வதென்று யோசித்தவாறு அடுத்த பாத்திரத்தை தூக்கி அடுப்பில் வைத்தாள். இப்போ குழம்பு வைக்கணும் என்று மனதுக்குள் சொல்லியவாறு இரண்டு கத்திரிக்காய் வெட்டி பாத்திரத்தில் போட்டாள். ‘இது எப்படி குழம்பாக மாறும்’ என்று கத்திரிக்காயை வெறித்துப் பார்த்தாள். அதற்குள் பாத்திரம் பிடித்து போய் பாத்திரத்திற்கு மேலே தபதபவென புகைய ஆரம்பித்தது. மினிக்கு படபடப்பு தொற்றி கொண்டது.
வேகமாக கரண்டியை எடுத்து கத்திரிக்காயை கிண்டினாள். பாத்திரம் முழுவதும் பிடித்துப் போய் தீய்ந்த நாற்றம் அடிக்கத் தொடங்கியது. படிக்காமல் பரீட்சையில் உட்கார்ந்திருப்பதை போல் சமைப்பது மலைப்பாக இருந்தது. அழுகை முட்டியது. தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அப்புறம் தான் மினிக்கு புரிந்தது. கொஞ்சம் தண்ணீரை ஊற்றினாள். தண்ணீயை ஊற்றிய பின்பு தான் புகையெல்லாம் அடங்கியது. மினி பாத்திரத்தை எட்டிப் பார்த்தாள். கறுப்பு நிற தண்ணீரில் அவள் போட்ட கத்தரிக்காய் துண்டுகள் தீய்ந்து போன நிலையில் மிதந்து கொண்டிருந்தன. குழம்பைக் கரண்டியால் கிளறினாள். தீய்ந்து போன வாடை தான் வந்தது.
அம்மா வைக்கும் குழம்பு சுவையாக இருக்குமே.
‘காய்கறி நறுக்கிக் குடுத்துட்டு போடீ’ என்பாளே ‘அந்த குழம்பில் கொஞ்சம் உப்பு, காரம் சரியா இருக்கான்னு பார்த்துச் சொல்லுடி’ என்று கேட்பாளே...
என்னால முடியாது என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு டி.வியே கதியென்று கிடப்பேனே அதற்கெல்லாம் கிடைத்த தண்டனையா?
மனம் தொடர்ந்து அம்மாவின் நினைவால் தவித்தது. என்ன தான் அடித்தாலும் உதைத்தாலும் எல்லாவற்றையும் மறந்து உள்ளம் தாயை தான் ஏக்கத்துடன் தேடுகிறது என்பதை உணர்ந்தாள். எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய்க்கு ஈடாகாது என்பதைப் புரிந்து கொண்டாள். அம்மாவை விட்டு விலகியிருக்கும்போது தான் அவளுடைய அருமை பெருமைகள் புரியத் தொடங்குகின்றன.
மினிக்கு கொஞ்ச நேரம் படுத்தால் தேவலாம் என்று தோன்றியது. அடுப்பை அணைத்துவிட்டு சுடிதாரை உதறிவிட்டுக் கொண்டாள். எங்கு படுப்பது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். இருக்கிற ஒரு அறையின் மூலையை சமையல் செய்வதற்கு உபயோகப்படுத்தியாச்சு. இன்னொரு மூலையில் தான் படுத்து கொள்ள வேண்டும். கையை தலைக்கு கொடுத்து படுத்துக் கொண்டாள். தூக்கம் வர மறுத்தது. ஜீவாவிற்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று ஆசையாக சமைக்க ஆரம்பித்து சமையல் சரியாக வராமல் போனதால் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது.
லேசாக கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு எழுந்துபோய் கதவை திறந்தாள். ஜீவா களைப்பாக உள்ளே வந்தான். அவன் நெற்றியில் படிந்திருந்த வியர்வையை அவளது துப்பட்டாவால் ஒற்றி எடுத்தாள் மினி.
“களைப்பாக இருக்கிறதா?”
“நீ என் அருகில் இருக்கும்போது இந்த களைப்பெல்லாம் எனக்கு எம்மாத்திரம். பசிக்குதுடா சாப்பிடலாமா?”
மினி தர்மசங்கடமாய் அவனைப் பார்த்தாள். பின்பு சாப்பிட எடுத்து வைத்தாள். ஜீவா உடைகளைக் களைந்துவிட்டு ஆர்வமாக சாப்பிட உட்கார்ந்தான் “என்ன குழம்பு? என்ன பொரியலடா?”
மினி அமைதியாய் அவன் தட்டில் சாதம் போட்டாள். ஜீவா சாதத்தை கையால் கிளறினான்.
“என்னடா சாதம் சரியா வேகாத மாதிரி இருக்கு” கொஞ்சம் சாதத்தை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தான்.
“சாதம் சரியாக வேகலைடா. உப்பு வேற இல்லை”
சாதத்திற்கு உப்பு போட வேண்டும் என்கிற விஷயத்தை அப்பொழுது தான் தெரிந்து கொண்டாள் மினி.
“சரி பரவாயில்லை குழம்பை ஊத்து!” என்றான். மினி குழம்பு சட்டியை தயக்கமாய் அவனருகில் நகர்த்தி வைத்தாள். ஜீவா குழம்பை கிண்டிப் பார்த்தான்.
“என்ன குழம்பு மினி இது? கறுப்பு கலரில் ஒரு குழம்பை என் வாழ்நாளில் முதன்முறையாக இப்போ தான் பார்க்கிறேன்!”
மினி விசும்பத் தொடங்கினாள் “ஏன்டா அழறே?”
“எனக்கு சமைக்க வரலை ஜீவா ரொம்ப கஷ்டமாயிருக்கு!”
“அதுக்கு போய் ஏன் அழறே? எடுத்தவுடனே சமையல் வந்திடாது. செய்ய செய்யதான் வரும். என் பக்கமும் தப்பிருக்கிறது. சமைப்பது எப்படி?ங்கிற புத்தகத்தை உனக்கு வாங்கிக் கொடுத்திருக்கணும்னு தோணலை. நாளைக்கு வாங்கிட்டு வர்றேன். இந்த சாதத்தை வெளியே நாய் ஏதாவது இருந்தால் கொட்டிரு!”
“ஸாரி ஜீவா... பசியோட வந்த உன்னை பட்டினி போட்டுட்டேன் மனசுக்கு வேதனையாயிருக்கு!”
“இதுல கவலைப் படறதுக்கு என்னடா இருக்கு. வெளியே ஹோட்டல் போய் சாப்பிட்டுட்டு வரலாம்..”
மகிழ்ச்சியுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மினி.