நிலவுக்கு களங்கமில்லை பகுதி 3




Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                               ட்சுமியின் மனம் இன்னும் குமுறிக் கொண்டு இருந்தது. ஜீவாவையும் கவிதாவையும் இணைத்து ஜோடி சேர்த்துப் பார்த்து நிறைய கற்பனைகளை வளர்த்து வைத்திருந்தாள். ஜீவா வேறொரு பெண்ணைக் காதலிக்கிறான் என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் பேச்சை மீற மாட்டான் என்கிற தைரியத்தில் இத்தனை நாட்கள் இருந்தாள்.

என் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வேறொரு பெண்ணைக் காதலிப்பதற்கு எப்படி தைரியம் வந்தது.  லட்சுமி மீண்டும் அவனறைக்கு சென்றாள்.

கட்டிலில் சாய்ந்தபடி ஜீவா மினியின் புகைப்படத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான். லட்சுமி கோபமாய் அந்த போட்டோவை ஜீவாவின் கையில் இருந்து பிடுங்கினாள். ஜீவா திடுக்கிட்டுப் போய் எழுந்து உட்கார்ந்தான்.

“யாருடா இவ? அவளும் அவ மூஞ்சியும்! உனக்கு கவிதா என்றும் கவிதாவிற்கு நீயென்றும் சின்ன வயசிலேயே முடிச்சுப் போட்டுட்டோம். அப்புறம் எப்படிடா இவளைக் காதலிச்சே?”

“இன்னி தேதிக்கு கவிதாவின் மீது எனக்கு எந்த விதமான காதலும் வந்ததில்லை. மினிதான் என்னைக் கவர்ந்தாள். யார் மீது எப்போ ஈர்ப்பு வரும்னு நமக்கே தெரியாதும்மா. நாம ஆசைப் படறவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்...”

“மினியை கல்யாணம் பண்ணிக்க ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன். உனக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது என் தம்பி பொண்ணு கவிதாவோடதான்!” என்றவள், அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் மினியின் போட்டோவை சுக்கு நூறாக கிழித்துப் போட்டாள். ஜீவா துடித்துப் போனான்.

“அம்மா... ஏம்மா என் மினியோட போட்டோவைக் கிழிச்சுப் போட்டீங்க?”

“டேய் நான் உன் அம்மாடா. கோபமாக குரல் கொடுப்பது எதிர்த்துப் பேசறது இதெல்லாம் என்கிட்டே வெச்சுக்காதே. பிச்சுடுவேன் பிச்சி!” என்றாள் கடுமையாக. இந்த நாய் உனக்கு வேண்டாம். கவிதாவை இந்த வீட்டு மருமகளா கொண்டு வரும்வரை நான் ஓயமாட்டேன்!” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

அம்மாவும் மாமாவும் கவிதாவை அவன் தலையில் கட்டும்வரை ஓயமாட்டார்கள் என்பது தெரிந்தது. எவ்வளவுதான் போராடி பார்த்தாலும் மினியை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவனுக்கு நன்கு புரிந்தது. என்ன பண்ணுவது என யோசித்தான். தரையில் மினியின் போட்டோ நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன. ஜீவா மண்டியிட்டு அமர்ந்து கிழிந்த துண்டுகளை ஒன்று சேர்த்து கையில் எடுத்தான். மனம் வலித்தது. மினி உன்னை என் அம்மா ஏற்கத் தயாராயில்லை. என் அன்பே! கிழிந்த துண்டுகளுக்கு மென்மையாய் ஒரு முத்தம் பதித்துவிட்டு அவனுடைய ஷர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

கனத்த மனதுடன் சாப்பிட வந்தான். அவன் டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்ததுமே லட்சுமியும் துரைபாண்டியனும் அவனுக்கு ஆளுக்கொரு புறமாக அமர்ந்து கொண்டார்கள். லட்சுமிதான் ஆரம்பித்தாள்.

“டேய் ஜீவா, இன்னிக்கு நீ காலேஜிக்குப் போக வேண்டாம்!”

“ஏன்ம்மா?”

“போகக் கூடாதுன்னா போகக் கூடாது. உனக்கும் கவிதாவிற்கும் நிச்சயம் பண்ணப் போறோம்!”

“படிச்சு ஒரு டிகிரியை வாங்காமல் எப்படிம்மா ஒரு பொண்ணை...”

“அதபத்தி யெல்லாம் கவலைப் படாத மாப்ள. ஊர்ல நான் நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வெச்சிருக்கேன். நீ படிச்சுதான் என் பொண்ணைக் காப்பாத்தணும்னு அவசியமில்லை.”

“உன்னை வேற காலேஜில் சேர்க்கப் போறோம்!”

“இன்னும் மூணு மாசத்துல எக்ஸாம் வரப்போகுது. அதை எழுதிட்டா என்னோட எம்ஏ படிப்பு முடிஞ்சிடும். இப்போ போய் புதுசா வேற காலேஜில் சேர முடியாதும்மா!”

“சேரப் போற காலேஜில் போய் பரீட்சை எழுதிக்கோ. இனிமேல் நீ இப்போ படிச்சுகிட்டிருக்கிற காலேஜ் பக்கமே போகக்கூடாது!”

“சரிம்மா... நீங்க சொல்ற மாதிரி நான் இனிமேல் அந்த காலேஜ் பக்கமே போகலை. உங்க விருப்பப்படி நான் கவிதாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன்ம்மா. உங்க விருப்பத்துக்கு மாறாக வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களை கஷ்டப்படுத்த விரும்பலைம்மா.”

“நிஜமாகவாடா சொல்றே. எனக்கு இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு!”லட்சுமி பூரித்துப் போனாள்.

“இன்னிக்கு என்னோட பர்த்டேனு என்னோட ஃப்ரெண்ட்ஸுக் கெல்லாம் டிரீட் கொடுக்கறேன்னு சொல்லியிருந்தேன். என்னோட ஃப்ரெண்ட்ஸை மட்டும் பார்த்துட்டு சீக்கிரம் வந்துடறேன்ம்மா ப்ளீஸ்ம்மா!”

“நீ கவிதாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதே எனக்கு போதும்டா. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? உன்னுடைய ஃப்ரெண்ட்ஸை பார்த்துட்டு சீக்கிரமா  வந்து கவிதாவை எங்கேயாவது வெளியில கூட்டிட்டு போப்பா. இந்த சந்தோஷத்தை இப்பவே ஜாங்கிரி செஞ்சு கொண்டாடணும்!”

மலர்ந்த முகத்துடன் சமையலறைக்கு சென்றாள் லட்சுமி. துரைபாண்டியன் அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன மாமா, உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலையா? உங்க எல்லாருடைய விருப்பப்படி நான் கவிதாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன். நான் இப்போ வெளியே போறதுகூட உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நான் போகலை!”

“சே சே... நீயே இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசறே. இதுக்கு மேலேயும் உன்னை கட்டுப்படுத்தறது நியாயமில்லை. சீக்கிரமா வந்துடு மாப்ள”

“சரி மாமா!” என்று மெதுவாக நடைபோட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

அந்தப் பழங்கால மண்டபத்தை நெருக்கித் தள்ளியவாறு இரு பக்கங்களிலும் வளர்ந்த பிரம்மாண்டமான இரண்டு மரங்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றன. இரண்டுமே புராதன விருட்சங்கள். ஒன்று கோகர்ணத்து ஆலமரம், இன்னொன்று வெள்ளை வெளேரென்று அரசமரம். மண்டபத்துக்கு அப்பால் தெரிகின்றனவே கோயில் கதவுகள் இரண்டு... மரங்களை இழைத்து உருவாக்கிய அந்தக் கதவுகள் இரும்பு மதில் போன்று உறுதியானவை. அந்தக் காலத்தில் திடகாத்திரமான இளைஞர்களேயேன்றி மற்றவர்களால் அசைக்கக்கூட முடியாத கதவுகள். இப்போது வேகமாக ஒரு தள்ளு தள்ளினால்கூட வெலவெலத்து ஆடுகின்றன.

 கதவுகளைத் திறந்ததும் படிக்கட்டுகள் தெரிகின்றன. காவியும் வெள்ளையுமான வர்ணம் தீட்டிய படிக்கட்டுகள். இருபுறமும் வரிசையாக அமைந்த கல்தூண்கள் மீது இணை இணையாகச் செதுக்கிய தாமரைச் சிற்பங்கள். படிக்கட்டின் மேலே இரு பக்கமும் துவாரபாலகர்கள். ஜெயவிஜயர்கள் கம்பீரமாக நிற்கிறார்கள். இந்தக் கோயிலில் ஓர் அதிசயம் என்னவென்றால் எல்லாமே கங்கையும் யமுனையும் போன்று இணைந்தபடி இரட்டையாகவே அமைந்துள்ளன. கருவறையிலுள்ள லட்சுமி நாராயண விக்கிரகங்களும் இணையாகவே காட்சியளிக்கின்றன. நான்கு தலைமுறைகளாக தூப தீப ஆரத்திகளால் ஆராதிக்கப்பெற்று வரும் விக்கிரகங்கள். ஆனால் அங்கு சந்தியாகால பூஜையின்போது ஒரே ஒரு தாளம் ஒலிக்கிறது, ஒரே ஒரு சங்கு ஊதப்படுகிறது.

தன்னந்தனியாக ஒரு அர்ச்சகர் அமர்ந்து மந்திரங்களை ஓதி ஆராதனை செய்கிறார். மணியடிப்பதும் அவர்தான். அங்கே தூணில் மறைவில் மினி ஜீவாவிற்காக காத்துக் கொண்டிருந்தாள். வானில் பறந்த பறவையை அண்ணாந்துப் பார்த்தாள். பகலவன் மறையும் வேளையில் மங்கிய ஒளியில் குளித்தெழுந்த நீலவானம் ஆதியந்த மின்றி பரவி நிற்கும் அந்த ஏகாந்த வேளையில் குழுவிலிருந்து பிரிந்து தன்னந்தனியான பறவையொன்று  வான் பாதையைக் கிழித்தவாறு தனியாகவே பறக்கிறது. மேலே வானம் கீழே பூமி இவையிரண்டுமே அதற்குத் துணை புரிவதற்குப் பதிலாக அதன் உள்ளத்திலே மேலும் மேலும் தனிமையை அல்லவா நிரப்புகின்றன.

ஜீவா சற்று தாமதமாக அங்கு வந்தான்.

“ஏண்டா லேட்? உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருந்தேன் தெரியுமா? இன்னிக்கு உன்னோட பர்த் டேங்கிறதாலதான் சும்மா விடறேன், இல்லைன்னா திட்டித் தீர்த்திருப்பேன்!”

“ஸாரிடா” என்று, மினியின் கன்னத்தை மென்மையாகத் தட்டினான்.

“உனக்கு என்னுடைய பர்த்டே கிஃப்ட்” ஜீவா அவளைத் திரும்பிப் பார்த்தான். மினியின் கையில் ஒரு வளையல் மின்னியது.

“ஒயிட் மெட்டல் சிங்கிள் பேங்கள். இது எப்பவும் உன்னுடைய கையில் இருக்கணும். எந்த ஒரு சூழ்நிலையிலும் கழட்டக்கூடாது!”

ஜீவாவின் வலது கரத்தில் சிங்கிள் பேங்கிளைப் போட்டுவிட்டாள் மினி. மினி பேங்கிளை போடும் போதுதான் மினியின் இடது கரத்தைக் கவனித்தான். அவள் இடது மணிகட்டில் டாட்டு குத்தியிருந்தாள்.  அது ஒரு டிசைன் போல அழகாகத் தெரிந்தது.

“என்னது மினி இது?”

“இதுவா, டாட்டூ. உன் பெயரை கையில் டாட்டுவாக வரைந்திருகேன் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் கண்டுபிடிச்சிட முடியாது!”

ஜீவா டாட்டூவை உற்று நோக்கினான். மூன்றாவது முறைதான் ஜீவா என்ற எழுத்தை படித்துப் பார்க்க முடிந்தது. ஜீவா மௌனமாக இருந்தான்.

“ஏன் ஜீவா ஒரு மாதிரியா இருக்கே? இன்னிக்கு ஏன் இவ்வளவு லேட்?”

“வீட்டில் பிரச்சினை மினி. எங்க மாமா பொண்ணு கவிதாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அம்மாவும் மாமாவும் கட்டாயப்படுத்தறாங்க, வேறு வழி இல்லாம நானும் சரினு சொல்லிட்டு வந்துட்டேன்!”

மினி திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தாள்.

“சரினு சொன்னதால்தான் வீட்டை விட்டு வெளியே வரமுடிஞ்சது. திரும்பிப் போனா என் அம்மாவும் மாமாவும் கவிதாவை என் தலையில் கட்டிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க. அதனால நான் வீட்டுக்கு திரும்ப போகப் போறதில்லை!”

“அப்புறம்?”

“நீயும் உன் வீட்டை விட்டு வந்துடு மினி!”

“ஜீ... ஜீவா...”

“வேறு வழியில்லை மினி. பிரச்சினை முத்திப்போச்சு. நாம இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறிதான் ஆகணும்.”

“அய்யோ! நான் மாட்டேன்ப்பா. பெற்றோரை எதிர்த்துக் கொண்டு அப்படி என்ன நமக்கு இப்போ கல்யாணத்திற்கு அவசரம்!”

“புரியாமல் பேசாதே மினி. என்னால இப்போ வீட்டிற்கு திரும்பிப் போக முடியாது. போனால் கவிதாவை எனக்கு நிச்சயம் பண்ணி வெச்சிடுவாங்க. நாம இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை!”

“வீட்டை விட்டு வருதற்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் ஜீவா. என்னுடைய பெற்றோரின் சம்மதம் கிடைக்கும் வரை நான் காத்துகிட்டிருப்பேன். அதுபோல் உன்னுடைய அம்மா அப்பாவிற்கு புரிய வைத்து அவங்களுடைய சம்மதத்தை வாங்கு!”

“இதுதான் உன் பதிலா?”

“இதுதான் என் முடிவு!” டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். நீயும் உன் வீட்டுக்கு கிளம்பிப் போ!”

மினி பாதி தூரம் சென்றுவிட்டாள் “நில்லு!” என்றான் ஜீவா. மினி நின்று அவனை திரும்பிப் பார்த்தாள்.

“விடியலுக்கு முன்பு உனக்காக இந்தக் கோயில் வாசலில் காத்துக் கொண்டிருப்பேன், நீ வரலைன்னா என்னுடைய உயிரற்ற உடலைதான் இந்த இடத்தில் பார்ப்பாய்!”

மினி அவன் கூறியதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் நடக்கலானாள்.

வேலைப் பளு காரணமாக மனஅமைதி இழந்த பார்த்திபன் அமுதாவிடம் அடிக்கடி எரிந்து விழுந்து கொண்டேயிருந்தான். சிறு விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் இருவரும் வீடு இடிந்து விழும்படி உரத்த குரலில் சண்டை போட்டுக் கொண்டனர்.

சமையலறை தரையைக் கூட்டாமல் மினி இரவு சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டாள். அவளுடைய தட்டை எடுத்து வைத்துக் கொண்டு சாதத்தைப் போட்டு அதில் சாம்பாரை ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள்.

“உட்கார்ந்து வேளா வேளைக்குச் சாப்பிட மட்டும்தான் தெரியும் அவளுக்கு. என்னைக் கண்டால் கொஞ்சம்கூட மரியாதை கிடையாது. எல்லாம் நீங்க குடுக்கிற செல்லம். என் பேச்சுக்கு மரியாதை தராதவளுக்கு நான் ஏன் சோறு ஆக்கிப் போடணும்!”

அமுதா கோபத்துடன் பல்லை நறநறவென்று கடித்தாள். தொட்டுக் கொண்டு நின்றால் தான் மின்சார அதிர்ச்சிக்கு ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் பாயும் சக்தி உண்டு. ஆனால் அமுதாவின் கோபத்திற்கோ அதைவிட மகத்தானதொரு தனி மகிமை இருந்தது. அவள் இரைந்து ஒருமுறை கத்த வேண்டியதுதான், அவளிடம் ஆரோகணித்திருக்கும் கோபம் அருகிலிருக்கும் கணவர் மீது பாய்ந்து தொத்திக் கொண்டுவிடும்.

“உங்கம்மா சொல்லுவதைக் கேட்டு நடக்க என்ன கொள்ளை வந்தது? உப்புப் போட்டு தானே சாப்பிடறே... உறைக்கலை!”

என்று அதட்டி விட்டு தமது மீசையைத் தடவிக் கொண்டான் கோபத்துடன் பார்த்திபன். மீண்டும் அவர் தம் கோபத்துடன் எங்கே அவளை அடிக்க கையை ஓங்கி விடுவாரோ என்ற அச்சத்தில் அதிர்ச்சியடைந்து போன மினியால் சாம்பார் சாதத்தை விழுங்கக்கூட முடியவில்லை. ஜன்னலிலிருந்து குளிர்ந்த காற்று விர்என உள்ளே வீசியது. அவளது உடல் பயத்திலும் குளிரிலும் குலுங்கியது. எந்நேரமும் பொறி பறக்கும் விழிகளுடன் வெறித்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் அப்பாவையும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

சிரமத்துடன் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள். ஒவ்வொரு நாளும் அம்மாவும் அப்பாவும் தன் மீது கோபப்பட்டு சதா திட்டிக் கொண்டே இருப்பதால் ஜீவாவின் காதல் அவளுக்கு மயிலிறகால் மனதை வருடுவது      இதமாக இருந்தது. இந்த நொடி ஜீவாவின் நினைவு அவள் உள்ளம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. தனக்காக உயிரைக் கொடுக்கவும் ஒரு ஜீவன் இருக்கிறதே என்று நினைக்கையில் பேரானந்தமாக இருந்தது. அவனுடைய பரிசுத்தமான அன்பை உணர்ந் தாள். நான் போக வில்லை யென்றால் ஜீவாவின் கதி... மினியின் இருதயம் அவனை நினைத்துப் படபடவென்று துடித்தது. குப்பென வியர்வைத் துளிகள் அரும்பின. அவனை நினைத்து உள்ளம் உருகியது. வீட்டை விட்டு வெளியேறுவதா வேண்டாமா என்று முதலில் சிறிது தயங்கிய மினி தாயும் தந்தையும் போட்டுக் கொண்ட சண்டையைக் கண்டு வெறுப்படைந்து மனம் வெதும்பி ஜீவாவின் மீது பொங்கி வளர்ந்து வந்த பாசம் காரணமாக யாருக்கும் தெரியாது புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.

ஓட்டமும் நடையுமாக இருளில் பதுங்கியபடி விரைந்து நடந்தாள். வானத்திலே மின்னிய நட்சத்திரங்கள் மீது வேகமாக கருமேகம் வந்து சூழ்ந்து கொள்ளவே, எங்கும் கண்ணை மறைக்கும் இருள் பரவிக் கிடந்தது. வரப்போகும் பெருமழைக்கு அடிகோலுவது போல் வானம் லேசாக இடித்து மின்னத் துவங்கியது. சில்லென்று வீசிய குளிர்காற்று மினியின் பயத்தை இரட்டிப்பாக்குவது போல் அவளது மேனியை நடுங்கச் செய்தது.

கோவிலை அடைந்ததும் ஜீவாவை அங்கே பார்த்தபிறகு தான் அவளுக்கு துணிச்சல் வந்தது. ஜீவா அவளைக் கண்டதும் உற்சாகத்துடன் புன்னகைத்தான். இருவரும் ஒருவரின் ஒருவர் கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார்கள். ஒரு கணம் என்ன செய்வது எங்கே போவது என்று ஒன்றும் விளங்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருள் பரவிக் கிடந்தது. இருவரின் உள்ளத்தில் கவலையும் திகிலும் நிரம்பி இருந்தன. நிசப்தத்தை கிழித்துக் கொண்டு எழுந்த உறுமலுடன் பைக் சோவெனப் பொழியத் துவங்கிய மழையில் கிழக்கே நோக்கிப் பறந்தது.