ஜீவா பைக்கை போர்டிகோவில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் போதே மட்டன் குழம்பின் வாசனை வீடு முழுவதும் பரவி அசத்தியது. அம்மாவின் சமையல் நன்றாக இருக்கும் என்பது ஜீவாவிற்கு தெரியும். ஆனால் இன்றோ மிகவும் அருமையான வகையில் மட்டன் குழம்பை செய்திருக்கிறாள் என்று நினைத்தான். உடையைக் கூட மாற்றாமல் ஆவலுடன் கிச்சனுக்கு சென்றான்.
லட்சுமி சமையலில் மும்முரமாய் இருந்தாள். ஜீவா அவளின் முதுகிற்கு பின்னாடி நின்றபடி அடுப்பை எட்டி பார்த்தான். ஒரு அடுப்பில் மட்டன் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. இன்னொரு அடுப்பில் நான்ஸ்டிக் கடாயில் சின்ன சின்ன துண்டுகளில் சிவப்பு நிறத்தில் சிக்கன் ஃப்ரை பண்ணிக் கொண்டிருந்தாள்.
“இன்னிக்கு என்னம்மா ஸ்பெஷல்... எதுக்கு இதெல்லாம் பண்றீங்க?”
“அடடே ஜீவா... வாடா... உங்க மாமா ஊரில் இருந்து வந்திருக்கார்!” என்றாள் லட்சுமி, வாய் நிறைய புன்னகையோடு.
“மாமாவா” என்றான் அலட்சியமாக
“என் தம்பின்னாலே உனக்கும் உங்கப்பாவுக்கும் அலட்சியம்தான்!”
ஜீவா கடாயிலிருந்து சூடாக ஒரு சிக்கன் பீஸை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டான்.
“என்ன பண்ணணும்னு சொல்றீங்க. உங்க தம்பியை எங்க தலை மேல தூக்கி வெச்சுகிட்டு ஆடச் சொல்றீங்களா?”
“அவர் வரும் போது நீ நல்லா பேசினா போதும். இந்தத் தடவை அவர் மட்டும் தனியா வரலை. கூட இன்னொருத் தரையும் அழைச்சிட்டு வந்திருக்கார்!” என்றாள் குறும்புடன் அவனைப் பார்த்து.
“யாருனு கேட்கமாட்டியா ஜீவா?”
“வேற யாரு அத்தையை கூட்டிட்டு வந்திருப் பார். லொட லொட பார்ட்டி. இரண்டுநாள் நம்ம வீட்டில் தங்கி கழுத்தை அறுக்கறதுக்கு நேரம் சரியா இருக்கும். சரிம்மா நான் போய் டிரெஸ் மாத்திட்டு வர்றேன்!” லட்சுமியிடம் சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான். அவன் அறைக்குள் நுழைந்ததும் வித்தியாசத்தை உணர்ந்தான். எல்லா பொருட்களும் இடம் மாறியிருந்தன. ஜீவாவிற்கு அவன் அறைக்கு யார் வந்தாலும் பிடிக்காது. இன்று யாரோ அவனறைக்கு வந்திருக்கிறார்கள். வந்ததும் மட்டுமில்லாமல் அவனுடைய பொருட்களை எல்லாம் இடம் மாற்றி அமைத்திருக்கிறார்கள். ஜீவாவிற்கு கோபம் வந்தது.
அப்பொழுது தான் அதை கவனித்தான். அவன் கட்டிலின் மீது நான்கைந்து மல்லிகை மொட்டுகள் உதிர்ந்து கிடந்தன. மெலிதான கொலுசொலி கேட்டது. சரேலென திரும்பிப் பார்த்தான்.
பீரோவின் பின்னாடி நீல நிற தாவணி லேசாக வெளியே தெரிந்து கொண்டிருந்தது. ஜீவா மெதுவாக நடந்து போய் பீரோவிற்கு பின்னாடி எட்டிப் பார்த்தான்.
கவிதா அவனுக்கு இன்னும் தெரியாது என்கிற நினைப்பில் பீரோவின் பின்னாடி பம்மியபடி இருந்தாள்.
“ஏய் வெளியே வா!” என்றான் ஜீவா
“மாட்டேன்” என்றாள் கிசுகிசுப்பாக. அவளது கையை பற்றி வெளியே இழுத்தான். கவிதா புன்னகையோடு நகத்தைக் கடித்தபடி வெளியே வந்தாள்.
“எதுக்கு இந்த திருட்டுத்தனம்? எதற்காக என் ரூமிற்கு வந்தே என்னுடைய ரூமிற்கு யார் வந்தாலும் பிடிக்காதுன்னு தெரியும்ல!”
“வருங்கால பொண்டாட்டி வராம வேற யாரு வருவா”
“வருங்கால பொண்டாட்டியா... யாரு நீயா? இப்படி வேற ஒரு நினைப்பு இருக்கா? உனக்கு வாய் மட்டும் இன்னும் குறையவே இல்லை கவிதா! பாவம் உன்னை கட்டிக்கப் போறவன். பேசிப் பேசியே அவனை சாவடிச்சிடுவே!”
“உங்களை அப்படியெல்லாம் நான் சாகடிக்க மாட்டேன். உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க, நான் பேச்சைக் குறைச்சுக்கிறேன்!”
“எனக்காக ஒரு காரியம் பண்றீயா?”
“சொல்லுங்க மாமா!”
“அம்மா சமைச்சுகிட்டிருக்காங்க. கூட போய் ஹெல்ப் பண்ணு போ.!”
“சரிங்க மாமா.” என்று துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினாள்.
‘மாமாவா? நானா?’
யோசனையுடன் நளினமாகச் சென்றவளையே பார்த்தான். அழகாக தான் இருக்கிறாள். அசத்தலாக சிரிக்கிறாள். ஆனால் பளிச்சென மனதில் பதிய மறுக்கிறாளே.
கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் அவன் அறைக்கு வந்தாள் கவிதா.
“மாமா சாப்பிட வாங்க... எல்லோரும் உட்கார்ந்தாச்சு!”
“வர்றேன்” என்று எழுந்தவன் கவிதா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான்.
“என்ன” எனக் கேட்டான்.
“ரொம்ப நாளைக்கப்புறம் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். எப்படி இருக்கேனு கேட்க மாட்டீங்களா மாமா!”
“உனக்கென்ன, குத்துக்கல்லாட்டம் நல்லாதானே இருக்கே. பார்த்தாலே தெரியுது. இதை கேட்க வேற செய்யணுமா?”
“என் மேல ஆசையே கிடையாதா?”
“என் படிப்பு மேலதான் எனக்கு நிறைய ஆசை இருக்கு!”
கவிதா வாயைப் பொத்திக் கொண்டு களுக்கென சிரித்தாள்.
“ஏன்டி சிரிக்கறே?”
“நீங்க படிக்கிறீங்களா பிட் அடிச்சுதான் பாஸ் பண்றீங்களானு எங்க ஊர் வரைக்கும் தெரியும்!”
“உதைச்சேன்னா... இந்த கொழுப்பு தானே உன்கிட்டே இன்னும் குறையவே இல்லை!” என்று அவளது தலையில் லேசாக குட்டினான்.
ஆங் என்று சிணுங்கியபடி டைனிங் ஹாலுக்கு வந்தாள் கவிதா. ஜீவாவும் அவள் பின்னாடியே வந்து அமர்ந்தான். அவன் அமர்ந்ததும் மாமா துரைபாண்டி தொண்டையைக் குறும்பாக கனைத்தார்.
எதிரே அமர்ந்திருந்த மாமாவைப் பார்த்தான் ஜீவா. தங்க மோதிரம், பிரேஸ்லெட்டு சகிதமாக கம்பீரமாக இருந்தார் துரைபாண்டி. மாமாவுக்கு ஊரில் வியாபாரம். மளிகைக் கடை, ஜவுளிக் கடை தெருவிற்கு தெரு வெச்சிருக்கார். வியாபாரம் நன்றாக ஓடுகிறதோ என்று நினைத்துக் கொண்டான்.
“படிப்பு எப்ப மாப்ள முடியுது!”
ஜீவா காதில் விழாதது போல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மீண்டும் அவர் கேட்கவும்,ஜீவா அலட்டிக்காமல் பதில் சொன்னான் “இன்னும் ஒரு அஞ்சு மாசம் இருக்கு!”
“ஒரு நல்ல தேதியை குறிச்சு நிச்சயதார்த்தத்தை இப்போ முடிச்சிடலாம். நல்ல வேலை கிடைச்சத்துக்கப்புறம் கல்யாணத்தை வெச்சுக்கலாம்!”
“நிச்சயதார்த்தமா... யாருக்கு?”
“என்ன மாப்ள புரியாத மாதிரி கேட்கிற. உனக்கும் என் பொண்ணுக்கும் தான்!”
ஜீவா லேசாக அதிர்ந்தான். கவிதா அசட்டுதனமாக சிரித்தபடி தன்னையே சுற்றி சுற்றி வரும் காரணம் இப்போதுதான் புரிந்தது.
“உங்க பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துகோங்க!” என்றான் ஜீவா. இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஜீவாவா இப்படி பேசுவது. மாமாவை கண்டாலே பவ்யமாக ஒதுங்கி நின்று, அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் அவன், இன்று நேருக்கு நேராக அவரிடம் வெடுக்கென பேசுகிறானே. எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். அனைவரும் அதிர்ச்சியுடன் யோசனையில் இருக்க ஜீவா அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து போய் விட்டான்.
“அவன் கிடக்கிறான். அவன்கிட்டே போய் அனுமதி கேட்டுகிட்டு, நாம எது செஞ்சாலும் அவனுடைய நல்லதுக்கு தானே செய்வோம். நானும் அவரும் நிச்சயதார்த்தத்துக்கு ஒரு நல்ல நாளைப் பார்க்கிறோம்!” என்றாள் லட்சுமி திடமாக!”
கவிதா துரைபாண்டியனிடம் வந்தாள்.
“என்னப்பா ஜீவா மாமாவிற்கு என் மேல ஆசை இல்லையா? எப்பவும் கடுகடுவென்று இருக்காரே.
“இதோ பாரும்மா, ஒரு கால்கட்டு போட்டாச்சுன்னா எல்லாம் சரியாயிடும். நீ நிம்மதியா இரு!” என்றார் துரைபாண்டியன்.
கழுத்து வரைக்கும் போர்வையை இழுத்து விட்டுக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஜீவா. மினியை பார்த்துவிட்டு இரவு வெகுநேரம் கழித்துதான் வீடு திரும்பினான்.
உறங்குவதற்காக படுக்கையில் விழுந்து கண்களை மூடியபோது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அதிகப்படியான களைப்பின் காரணமாகத்தான் அவன் இன்னும் எழாமல் படுக்கையிலேயே கிடந்தான்.
போர்வையை உதறிவிட்டு புரண்டு படுத்தான் ஜீவா. அவன் அறையின் கதவு மெல்ல திறந்தது. அடிமேல் அடி வைத்து பூனை மாதிரி அவனுடைய படுக்கையை நோக்கி நடந்தாள் கவிதா.
வெங்காய சருகு மாதிரி மெல்லிய துணியினால் ஆன நைட்டி அணிந்திருந்தாள். புசு புசுவென்ற கூந்தல் பின்னப்படாமல் தோள்களில் வழிந்தது. அந்த காலை நேரத்திலேயே முகத்திற்கு ரோஸ் பவுடர் பூசி, உதடுகளில் லிப்ஸ்டிக் தடவி, முகத்தை சுழிக்க வைக்கும் ஒப்பனையில் இருந்தாள் கவிதா.
‘உன்னை எனக்கு பிடிக்கலை கவிதா. நீயா எதையாவது நெனைச்சுகிட்டு என்னை தொந்தரவு பண்ணாதே ப்ளீஸ்...’ என்றுகூட அவளிடம் சொல்லி விட்டான் ஜீவா.
கவிதா அதையெல்லாம் லட்சியமே பண்ணவில்லை. ஜீவா விலக விலக, கவிதா அவனிடம் நெருங்கி நெருங்கி வந்தாள். லட்சுமி, கனக சபை, அப்பா, அம்மா, எப்பவும் தன் பக்கம் தான் நிற்பார்கள் என்பதை புரிந்து கொண்டு விட்டதாலோ என்னவோ ரொம்பவே துள்ள ஆரம்பித்திருந்தாள் கவிதா.
‘என் மனதை திருடிய திருடா! எப்படா என் கழுத்துல தாலி கட்டப்போறே? எப்படா என்னை உன்னோட மனைவியா ஆக்கிக்கப் போறே?”
ஜீவாவின் படுக்கையை நெருங்கி கண்ணிமைக்காமல் அவனையே பார்த்தாள் கவிதா.
அவளுடைய உதடுகள் இனிமையாய் உச்சரித்தது.
மெல்ல அவனுடைய முகத்திற்கு அருகாமையில் குனிந்தாள். கண்கள் மூடிக் கிடந்தவனின் கொழு கொழு வென்ற கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.அவளுடைய உதடுகளின் ஈரமும், மூச்சுக் காற்றின் வெப்பமும் கன்னத்தைத் தாக்க திடுக்கிட்டு விழித்தான் ஜீவா.
“ஹேப்பி பர்த்டே யூ மாமா” உதடுகள் விரியச் சிரித்தாள் கவிதா.
“ஏய்... நீ எதுக்காக இங்க வந்தே?”
ஜீவா எரிச்சலாய் பார்த்தான். அவள் முத்தங்கள் பதித்த தனது கன்னப் பகுதியை கையால் தேய்த்துக் கொண்டான்.
“இன்னிக்கு உங்களுக்கு பர்த்டேன்னு நேத்திக்கு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க! ஸோ உங்களுக்கு ஹேப்பி பர்த் டே சொல்லத்தான் வந்தேன்! யாருமே கொடுக்காத தித்திப்பான கிப்ட்டை தரணும்னு ஆசைப்பட்டேன்”
“வெட்கமாயில்லை?”
“வெட்கமாத்தான் இருக்கு! அழகான பொண்ணு ஒருத்தி வலிய வந்து கிஸ் பண்ணியிருக்கேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம திட்டறீங்களே. அதை நெனைச்சா வெட்கமாத்தான் இருக்கு.”
“ச்சே என்ன பொண்ணு நீ?
“வெட்கத்தை விட்டு சொல்லட்டுமா? எனக்கு எப்பவும் உங்களோட நெனைப்பு தான்”
கண்களில் காதல் வழிந்தது. ப்ளீஸ் மாமா என்னை புரிஞ்சிக்கங்க! நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால நெனைச்சுகூட பார்க்க முடியலை!”
“கவிதா இப்ப வெளில போகப் போறியா இல்லையா?”
“போயிடுறேன்... அதுக்கு முந்தி நான் கொடுத்ததை திருப்பிக் கொடுங்க”
“என்ன கொடுத்தே?”
“உங்களோட ரெண்டு கன்னத்துலயும் கிஸ் பண்ணினேன் இல்லே. அதெல்லாம் எனக்கு திரும்பவும் வேணும்.”
கொஞ்சலாய் சிணுங்கினாள் கவிதா.
ஆத்திரத்தை அடக்கியபடி,
“கிட்ட வா தர்றேன்” என்றான் முறைப்பாய். அதைக் கேட்டதும் உற்சாகமானாள் கவிதா. வேக வேகமாய் அருகில் வந்து தலையை சாய்த்து, கன்னத்தைக் காட்டினாள்.
‘பளார்’ அடுத்த வினாடி ஓங்கி ஒரு அறைவிட்டான் ஜீவா.
“மா.... மாமா...” நிலைகுலைந்து போனாள் கவிதா.
“கெட் அவுட்” எச்சரிக்கை செய்பவனைப் போல தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தினான்.
கவிதாவின் கன்னங்கள் சிறுத்து, சிவந்து போனது. பொங்கி வெடித்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே ஓடினாள்.
‘இனிமேயாச்சும் என்கிட்டே வராம இருக்கட்டும்’ முணுமுணுத்தபடியே படுக்கையை விட்டு எழுந்தான்.
லட்சுமி அவன் அறைக்கு புயல் போல வந்தாள். அவள் பின்னாடியே துரைபாண்டியனும் வந்தார்.
“கவிதாவை ஏன்டா அறைஞ்சே?”
“கொஞ்சங்கூட நாகரிகமில்லாமல் நடந்துகிட்டா. அதான் அறையற மாதிரி ஆகிப்போச்சு”
“கட்டிக்கப் போறவன் கிட்ட அப்படி நடந்துக்கிறதுல என்னடா தப்பு?”
“ஐய்யோ அம்மா... என்னால கவிதாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது திரும்பத் திரும்ப அதையே சொல்லி சொல்லி கடுப்பேத்தாதீங்க.”
“கவிதாவை ஏன்டா கல்யாணம் பண்ணிக்க முடியாது?”
“நான் ஏன் கவிதாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிற விஷயம் இப்போ உங்களுக்கு தெரிஞ்சாசணும்... சொல்றேன் கேட்டுக்கோங்க. எங்க காலேஜில் படிக்கிற மினிங்கிற பெண்ணை நான் காதலிக்கிறேன். எனக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது என் மினிக்கூடதான் நடக்கும்!”
இதைக் கேட்ட லட்சுமியும் துரைபாண்டியனும் அதிர்ந்து போனார்கள்.
“என் முன்னாடியும் உன் அம்மா முன்னாடியும் வேற பெண்ணை காதலிக்கறேன்னு எவ்வளவு தைரியம் இருந்தா சொல்லுவே? நீ காதலிக்கிற பெண்ணை கண்டுபிடிச்சு கண்டம்துண்டமாக வெட்டிப் போட்டால் தான்டா என் மனசு ஆறும்!”
“நீங்க வெட்டுற வரைக்கும் என் கை ஒண்ணும் மாங்கா பறிச்சுகிட்டிருக்காது!”
“நான் சும்மாதான் குடும்பதோடு என் அக்கா வீட்டுக்கு வந்தேன். எப்ப நீவேற பெண்ணை காதலிக்கறேனு சொன்னியோ, என் பொண்ணு கவிதா கழுத்துல உன்னை தாலி கட்டவெச்சுட்டு தான்டா இந்த ஊரைவிட்டே போவேன். இது என் குலதெய்வத்தின் மேல சத்தியம்டா!”
கோபக் கனலுடன் அவ்வளவு உறுதியாகச் சொன்ன துரைபாண்டியனை கண்டு ஜீவா ஒரு கணம் அரண்டுதான் போனான்.