நிலவுக்கு களங்கமில்லை பகுதி 12




Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                   ட்டுச்சேலை சரசரக்க லேசான வளையல்கள் சத்தத்துடன் மினியின் வீட்டுக் கதவைத் தட்டினாள் தீபா. அது தானாக திறந்து கொண்டது.

மென்மையாக ‘மினி’ என்று அழைத்தாள். ஜீவாவையும் காணோம் எங்கே போயிருப்பார்கள் என யோசித்தாள்.

“யாரைம்மா தேடறே?” என்று பக்கத்து வீட்டுக்காரம்மா வந்து கேட்டாள்.

“மினி எங்கே?” என்று கேட்டாள் தீபா.

“அந்த தம்பிக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு...” இதைக்கேட்ட தீபா அதிர்ந்து போனாள்.

“ஜீவாவிற்கு ஆக்ஸிடெண்ட்டா?”

“ஆமாம்மா. அந்த தம்பியை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு அந்த பொண்ணு பக்கத்து தெருவிற்குள் போச்சும்மா!”

தீபாவிற்கு மூளையில் சட்டென்று முள் தைத்தது. வேக வேகமாக அந்த தெருவிற்கு ஓடினாள். தெருவின் கடைசியில் அசோக மரங்களும் போகன்வில்லா மரங்களுக்குள்ளும் பதுங்கி இருந்த பங்களாவிற்குள் நுழைந்தாள்.

ஆஸ்பத்திரி கேஸ் கவுண்டரில் மொத்த பணத்தையும் கட்டினாள் மினி.

“உங்க ஜீவா கண் முழிச்சிட்டார். நல்லா பேசறார். நீங்க போய்ப் பார்க்கலாம்!” என்றார் டாக்டர்.

‘என் ஜீவா பிழைத்துவிட்டானா. நன்றி கடவுளே’ என்று பெரிதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். துப்பட்டாவால் முகத்தை அழுத்தி துடைத்தபடி ஜீவா இருந்த வார்டை நோக்கி சென்றாள். வார்டை நெருங்க நெருங்க ஏதோ ஒரு உணர்ச்சி அவனிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. மேலும் அவனுடைய கட்டிலை சுற்றி பலவிதமான பேச்சுக் குரல்கள் கேட்டன.

ஜீவாவைப் பார்ப்பதற்காக யார் வந்திருப்பார்கள். தொங்கிக் கொண்டிருந்த பச்சைநிற திரைசீலைக்கு பின்னாடி நின்று கொண்டு யாரென்று பார்த்தாள். ஜீவாவின் அப்பா அம்மா மற்றும் மாமா துரைபாண்டியன் ஜீவாவை சூழ்ந்து கொண்டிருந்தார்கள். ஜீவாவின் முகம் சுத்தமாக மினிக்கு தெரியவில்லை. ஜீவா முதுகிற்கு தலையணை கொடுத்து சாய்ந்திருந்தான். அடிபட்ட இடங்கள் ரணமாய் வலித்துக் கொண்டிருந்தன. லட்சுமி சொன்ன விஷயத்தைக் கேட்டு வலியின் கொடுமை இன்னும் அதிகமானது.

“துரத்தி துரத்திக் காதலித்து அவகூட வீட்டை விட்டு ஓடிப் போனியே... அவ பொண்ணே இல்லை ஓடுகாலி... உங்க பையனுக்கு இப்படி ஆயிடுச்சுனு சொல்லி நேராக என்கிட்டே வந்து பண உதவி கேட்டிருக்கணும். அதை விட்டுட்டு உடம்பை வித்துப் பணத்தை சம்பாதிச்சு உன்னைக் காப்பாற்றியிருக்கா. கேட்கவே காது கூசுது. நாக்கை பிடுங்கிக்கலாம் போலிருக்கு!”
ஜீவாவின் நெஞ்சில் இடி இறங்கியது. கருவிழி எந்தவித அசைவுமில்லாமல் அப்படியே நிலைத்து நின்றது.

“நம்மளை இதுவரை அந்த பொண்ணு பார்த்தது கிடையாது. நம்ப வீடும் எங்கிருக்கிறது என்பதும் தெரியாது. இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அந்த சின்ன பொண்ணு தவறுதலான முடிவு எடுத்திடுச்சு லட்சுமி!”

ஜீவாவின் அப்பா மினிக்கு பரிந்து பேசினார். கனத்துப் போயிருந்த மினியின் மனதை மயிலிறகால் வருடிவிட்டதைப் போல் இருந்தது.

“அந்த நாய் செஞ்ச காரியத்தை நியாயப்படுத்தி பேசாதீங்க. டேய் ஜீவா எல்லாவற்றையும் தலைமுழுகிட்டு எங்க கூட வாடா. சொக்கத் தங்கம் மாதிரி கவிதா உனக்காகக் காத்துகிட்டிருக்கா. அவ கழுத்துல தாலியைக் கட்டிப் புது வாழ்க்கையைத் தொடங்கு!”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மினி திடுக்கிட்டுப் போனாள். என் ஜீவாவை என்கிட்டேயிருந்து பிரிக்கப் போறீங்களா? என் ஜீவாவை ஒருகாலும் என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது. ஜீவா என்னுடைய உயிர்... என்னோட செல்லம்... அவன் இல்லாமல் ஒரு நொடி கூட என்னால் இருக்க முடியாது. என் ஜீவா என்னைப் பரிதவிக்க விட்டுட்டு போக மாட்டான்... தயவுசெஞ்சு என்னிடமிருந்து அவனை பிரிச்சுடாதீங்க..’ மினியின் மனது கதறித் தவித்தது. ஜீவா லட்சுமியை நிமிர்ந்து பார்த்தான்.

“அம்மா எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் கூட தன் மானத்தோடு வாழ்பவள் தான் புனிதமான பெண்!”

ஜீவாவின் வார்த்தையை கேட்ட மினி சுக்கு நூறாய் நொறுங்கிப் போனாள். அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஈட்டியாய் குத்தியது.

அப்போ நான் தவறான பெண்ணா? உனக்கு ஏற்றவள் இல்லையா. உனக்குப் பிடிக்காமல் போன உன் மினி இனி ஒருபோதும் உன் வாழ்க்கையில் இடையூறாக வரவே மாட்டாள். கடைசியாக உன் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போய்விடுகிறேன் என் செல்லமே...

ஸ்கீரினை மெல்ல விலக்கினாள். ஜீவாவின் முகத்தை மினியால் பார்க்க முடியவில்லை. லட்சுமியின் முதுகுப்புறம் தான் பெரிதாகத் தெரிந்தது. எப்படியாவது அவனுடைய முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்று துடித்தாள்.

ஜீவாவின் மென்மையான உதடு, கம்பீரமான மீசை, காதல் வழியும் பார்வை எதையுமே அவளால் பார்க்க முடியவில்லை. கனத்துப் போன நெஞ்சோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
டாக்டர் அவனை மீண்டும் பரிசோதித்துவிட்டு ‘உங்க மகன் இப்போ நல்லா குணமாயிட்டார். இன்னும் ஒரு வாரத்தில் டிஸ் சார்ஜ் பண்ணிடுவோம்? என்று சொல்லி விட்டுப் போனார். லட்சுமிக்கு சந்தோஷம் தாளவில்லை.

“ஜீவா நீ நல்லபடியா வீட்டிற்கு வந்தால் அதுவே போதும்டா” என்று அவனுடைய நெற்றியில் முத்தமிட்டாள். ராத்திரி அனைவரும் தூங்கிய பின்பு ஜீவா தலையணையில் தலையை சாய்த்து கண்களை மூடினான். மினியின் புன்னகை பூத்த முகம் ஒரு மின்னல் வெட்டுபோல் தோன்றி மறைந்தது. மினியை பற்றி லட்சுமி சொன்ன விஷயம் மீண்டும் மீண்டும் அவனுடைய மைண்ட்டை டிஸ்டர்ப் பண்ணியது. ஜீவாவின் நெஞ்சு வெடித்து விடும் போல் அடித்துக் கொண்டது. ஒரு பயங்கரமான உணர்ச்சி அவனுள் எழுந்தது. கோபத்துடன் விருட்டென்று எழுந்தான். அவளை நாக்கைப் பிடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்கணும் என்று உள்ளம் துடித்தது.

அரை இருளில் இருந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான். அவனுடைய வீடு நோக்கி நடந்தான். நடக்க நடக்க உடம்பில் இருந்த காயங்களின் வலி அதிகரித்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டான். அப்போது தீபா அவன் வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்.

ஜீவாவின் கண்களில் மின்னிய கோபத்தைப் பார்த்து மினியின் மீது அவன் கடுங்கோபத்தில் இருக்கிறான் என்பதை ஊகித்துக் கொண்டாள்.

“ஜீவா ஒரு நிமிஷம் நான் சொல்வதைக் கேளு”

“ச்சீ! உன்கிட்டே எனக்கென்ன பேச்சு. எங்கே அந்த எச்சில் நாய்!”

“ஜீவா ஸ்டாப் இட். அவசரப் பட்டு வார்த்தை விடாதே. மினி அந்த தெருவிற்குள் போனது உண்மைதான். ஆனா அங்கே என்ன நடந்ததென்றால்...

வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கலையரசி அங்கே வந்த தீபாவை பார்த்து வியப்புடன் கேட்டாள்.

“இந்த இடத்தை விட்டுப் போக மனசுவரலையா”

“ச்சீ வாயைக் கழுவு மினியை எதற்காக புடிச்சி வெச்சிருக்கே?”

“அவளாகத் தான் இங்கே வந்தாள்”

“எங்கே அவள்?”

“அதோ அந்த அறையில்!”

நெஞ்சம் திக் திக் என அடித்துக் கொள்ள அந்த அறையை நோக்கிப் போனாள் தீபா. உள்ளே மயங்கிய நிலையில் இருந்த மினியின் கன்னத்தை நாகராஜன் தட்டிக்கொண்டிருந்தான்.

“ஏய் அவள் மீது கை வைக்காதே. கையை எடுடா!” தீபா அவனைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினாள். கலையரசியும் உள்ளே வந்தாள். தீபாவின் கண்கள் சட்டென பனித்தன.

கலையரசியையும் நாகராஜனையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“தயவு செஞ்சு இந்த சின்ன பெண்ணை விட்டுடுங்க. என்னை தேடிதான் இங்கே வந்திருப்பா. வேற எந்த ஒரு நோக்கத்திலும் நிச்சயமாக வந்திருக்க மாட்டாள்!”

தீபாவின் கண்ணீர் கலையரசியின் நாகராஜனின் மனதையும் தொட்டது.

தீபா சொன்னதை கேட்ட ஜீவா உடலை அவன் போர்த்தியிருந்த மெல்லிய காஷ்மீர் கம்பளம் பல ஊசிகள் குத்துவதைப் போல உறுத்தியது. “மினிக்கு தேவையான பணத்தை நானும் என் கணவரும் தான் கொடுத்து உதவினோம். உன்னுடைய மினி பவித்தரமானவள். நம்பு!”

ஜீவா தீபாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்.

“ஸாரி உங்களையும் நான் கேவலமாக நினைச்சுட்டேன். யாரையும் அவர்களின் நிலைமையை உணராமல் தப்பா எடை போடக்கூடாது என்பதைப் புரிஞ்சுகிட்டேன். என் மினி எங்கே?”

“என் ஜீவா என்னை தவறாக நினைச்சுட்டான்... என்னைவிட்டு பிரிஞ்சு போயிட்டான்...என்று  பச்சை தண்ணீ கூட குடிக்காம அழுதுகிட்டே இருந்தா.... உன்னை நம்பி வந்தவளை உன் அம்மா பேச்சைகேட்டு எந்த ஒரு நிலையிலும் சந்தேகப்படாதே!”

ஜீவா உள்ளே சென்றான். தீபாவும் அவனைத் தொடர்ந்தாள். மினி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

“மினி” ஆசையா அழைத்தவாறு அவளருகில் அமர்ந்தான் ஜீவா. அவளது கன்னத்தை மிருதுவாக வருடினான்.

“என் மேல் கோபமா? என்னை மன்னிச்சிடுடா... நான் என்றைக்கும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்!”

ஜீவாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மினி வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவள் மடிமீது ஜீவாவின் புகைப்படம் இருந்தது.

“பேசு மினி... என்னை நாலு அடி அடிக்கிறதுன்னாகூட அடிச்சுக்கோடா. ஆனா பேசாமல் மட்டும் இருக்காதேடா. என்னால் தாங்க முடியாது!”

மினி எந்தவிதமான உணர்வையும் வெளிக்காட்டாமல் உட்கார்ந்திருந்தாள். தீபா கனிவாகக் கூறினாள்.

“மினிம்மா, ஜீவா உன்னை ஏற்றுக் கொண்டான். உன்னை விட்டுப் போகமாட்டான்!

தொடர்ந்து அவளிடமிருந்து எந்தவிதமான அசைவுமில்லை. ஜீவா தீபாவைப் பயமாக நிமிர்ந்து பார்த்தாள்.

“மி... மினி!” அவளது தோள்பட்டையை பற்றி உலுக்கினான் ஜீவா. அடுத்த கணம் மினியின் உடல் ஜீவாவின் மடிமீது சரிந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஜீவா பெரிதும் அதிர்ந்து போனான்.

“மினி...” ஜீவாவின் அழுகுரல் பெரிதாக வெடித்தது.

“செல்லமே என்னை விட்டுட்டு போயிட்டியாடா... என்னைத் தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டியா... நிலவிற்கு வேண்டுமானால் களங்கம் ஏற்படலாம்... உன்னுடைய புனிதமான காதல் என்றும் பரிசுத்தமானது அன்பே!”

மினியின் இதழில் அழுத்தமாக முத்தம் பதித்தான் ஜீவா.
(முற்றும்)