நிலவுக்கு களங்கமில்லை பகுதி 1




Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                 யாரோ உலுக்கி எழுப்பின மாதிரி விழிப்பு வந்தது. காமினிக்கு.  எல்லோரும் அவளை மினி என்றுதான் அழைப்பார்கள். மலங்க மலங்க விழித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். பொழுது பொல பொலவென்று நன்கு விடிந்திருந்தது. அறையில் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது கேட்டது. அதிகாலையிலேயே அவர்கள் சண்டையை ஆரம்பித்திருந்தார்கள். என்ன காரணத்தினாலோ ஆரம்பத்திலிருந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சரிபட்டு வரவில்லை.

விவரம் தெரிந்த நாள் முதலாக அம்மா அப்பாவிடம் அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறாள்.அம்மா சுரீரென்று நெருப்பு பட்ட மாதிரி நிமிர்வாள். முகமும் கண்களும் தகதகக்கும். வார்த்தைகள் அழுகையினூடே சீறிக் கொண்டு வரும். மடேர்மடேரென்று அம்மா தலையில்  அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்து மின்மினியும் நிறைய வாட்டி அழுதிருக்கிறாள்.

அம்மா இருக்கும் நிலையில் அவளால் இவளுக்கு தலை வாரிவிட்டு டிபன் ரெடி பண்ணிக்குடுக்க முடியாது என்பது புரிந்தது. குளித்து முடித்துவிட்டு மினியே தலைவாரிக் கொண்டாள்.

சாப்பிடுவதற்காக சமையலறைக்கு வந்தாள். ஸிங்கில் பாத்திரங்கள் அப்படியே கிடந்தன. அமுதா சப்பாத்தியும் உருளைக்கிழங்கும் செய்திருந்தாள்.

கல்லூரிக்கு நேரமாகிவிட்டதால் சப்பாத்தி செய்து சாப்பிடுவதற்கு நேரமில்லாமல் ஒரு முட்டையை ஆஃப்பாயில் செய்து சாப்பிட்டு விட்டு  கிளம்பினாள் மினி. கல்லூரி வளாகம் பரபரப்பாக இருந்தது. அது கோஎஜுகேஷன் ஆர்ட்ஸ் கல்லூரி. மாணவ மாணவிகளின் நடையில் வேகம் தெரிந்தது. பஸ் ஸ்டாப்பில் இறங்கின மினி கல்லூரியை நோக்கி நடக்கத் தொடங்கினாள். மினி பச்சை நிற சல்வார் கம்மீஸ் அணிந்திருந்தாள். அவளுடன் சக மாணவி சுதா சேர்ந்து கொண்டாள். “என்னடி தலை வாராமலே வந்துட்டியா?” என்று சுதா கேட்டாள்.

மினிக்கு வருத்தமாகப் போனது. கையால் தலை முடியை சரி செய்து கொண்டாள்.

மணி  அடிக்கும் முன்பே வகுப்பிற்குள் போய்விட வேண்டும் என்று சுதா முன்னாடி வேகநடை போட்டாள். மினி அமைதியாக நடந்தாள். அவளை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது. மினி எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தாள். பைக்கில் அமர்ந்திருந்த ஜீவா அவளைப் பார்த்து “சாப்பிட்டியா மினி!” என்று கேட்டான். அடுத்த கணம் பைக்கை கிளப்பிக் கொண்டு கல்லூரிக்குள் போய்விட்டான் ஜீவா.

மினியின் மனதில் சினம் படர்ந்தது. மினி பி.ஏ. படிக்கிறாள். ஜீவா எம்.ஏ படிக்கிறான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  ஜீவா மினியின் பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறான். அவளுக்காக தினமும் கல்லூரி கேட்டின் அருகே காத்துக் கொண்டிருப்பான். அவளைப் பார்த்ததும் அவள் பின்னாடியே தொடர்ந்து செல்வான். எல்லாவற்றுக்கும் மேலாக இன்று அவளை உரசியபடி சென்றுவிட்டான். அவளுக்கு அவன் மீது கோபம் வந்தது.

கல்லூரி முடிவடைந்ததும் வீட்டிற்கு கிளம்பினாள் மினி. ஜீவா அவளைப் பின்தொடர்ந்து வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும்  மினி திரும்பிப் பார்த்தாள். ரோட்டின் எதிர்ப்புறம் ஜீவா நின்று கொண்டிருந்தான். வாசல் கதவை அறைந்து சாத்தினாள் மினி.

சமையலறையில் ஸிங்கில் காலையில் சேர்ந்திருந்ததை விட இப்போது பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. ஹாலில் சேரில் மலை போல காய்ந்த துணிகள் குவிந்து கிடந்தன. மினிக்கு புரிந்து போயிற்று.  வேலைக்காரம்மா வரவில்லை. இவள்தான் இப்போது அந்த வேலைகளை யெல்லாம் செய்ய வேண்டும். மினிக்கு எரிச்சலாய் வந்தது. முதலில் துணிமணிகளை ஒவ்வென்றாக மடித்து வைத்தாள். பின்பு பாத்திரங்களை துலக்குவதற்காக சமையலறைக்கு சென்றாள். பாத்திரங்களை துலக்க ஆரம்பித்தாள். சில விநாடிகளில் அமுதா புயல் போல வந்தாள். மினி மடித்து வைத்திருந்த இரண்டு கைக்குட்டைகளை எடுத்து வந்து மினியின் மீது வீசினாள்.

“என்னத்த மடிச்சுவெச்சிருக்கே. ஒரு கர்ச்சீப்பை கூட உனக்கு ஒழுங்கா மடிச்சு வைக்கத் தெரியாது?”

மினி கழுவி வைத்திருந்த பாத்திரங்களை மீண்டு சிங்கில் டமடம வென்றுபோட்டாள்.

“கறையா இருக்கு... ஒழுங்கா கழுவி வை!”

மினி அந்த பாத்திரங்களை கழுவாமல் அலமாரியில் கவிழ்த்து வைத்தாள். அமுதா கோபமாக அவளைச் சுவரோடு தள்ளினாள். மினியின் தலையை சுவற்றில் வைத்து ணங் என இடித்தாள். மினிக்கு கிர்ரென்று ஒரு நொடி தலை சுற்றியது.

“சொல்லிகிட்டே இருக்கேன்... திமிரா. பாத்திரங்களையெல்லாம் ஒழுங்கா கழுவி வை!” நெருப்புப் பீய்ச்சும் குரலில் குரைத்தாள் அமுதா. மினிக்கு அழுகை அழுகையாய் வந்தது.

மூச்சிரைத்தது. அழுகை வெடித்து விம்மத் தொடங்கினாள். கண்கள் நீரில் மிதந்தன. பாத்திரங்களை யெல்லாம் மீண்டும் துலக்கத் தொடங்கினாள். அம்மாவின் மீது வெறுப்பு வந்தது. இவள் மீதா காலையில் பரிதாபப்பட்டோம் என்று நினைத்தாள்.

மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய சிறந்த உணர்ச்சிகளுள் தலைசிறந்தது காதல். வாழ்க்கையில் சிறிது காலமாவது அதை அனுபவித்தவர்கள் இனிய சுபாவமும் தாராள மனமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த உணர்ச்சியை பார்த்திபனிமிடருந்து அனுபவித்து அறியாததினாலேயே அசூயையும் துவேஷம் பொங்கும் உள்ளமும் உண்டானது. அமுதாவிற்கு சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாதபடி நித்திய தரித்திரம்.

உள்ளேயிருந்து வரும் விம்மல் விசும்பல்களில் இந்தக் குறைகள் எல்லாம் வெளிப்படுவது போல் தோன்றின. எத்தனையோ காலமாக மனதிற்குள் நீராவிச் சுருள்களைப் போல அடக்கி வைத்திருந்த குறைகள் குமுறல்கள் அமுதாவை ஹிஸ்டிரியா நோயாளியைப் போல் கத்த வைக்கிறது என்பது மினிக்கு இந்த பத்தொன்பது வயதில் புரிய வாய்ப்பில்லை. வேலைகளை முடித்துவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் மினி. ஈரக் கைகளை சுடிதாரில் துடைத்துக் கொண்டாள். வாசற்படியில் அமர்ந்தாள். காற்று அவள் முகத்தில் பட்டு இதமாகத் தழுவிச் சென்றது. ரோட்டில் போய்க் கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்த வண்ணம் இருந்தாள்.

அவள் பார்வை ரோட்டின் எதிர்ப்புறம் இருந்த வேப்பமரத்தின் மீது விழுந்தது. மெர்க்குரி விளக்கு வெளிச்சத்தில் பைக்கின் மீது இளைஞனாய் கம்பீரமானவனாய் அமர்ந்திருந்தான் ஜீவா. குறுகுறுவென்று பார்வையுடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். மினி கண்களில் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

“வரட்டா” என்று மினியைப் பார்த்து தலையை ஆட்டிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். மின¤ விலுக்கென்று எழுந்தாள். அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றின் வழியாக தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். சாலையின் திருப்பத்தில் ஜீவா அவளை திரும்பிப் பார்த்தான். கையசைத்தான்.

மினி அவனைப் பார்த்து உற்சாகத்துடன் புன்னகைத்தாள். அவளும் அவனைப் பார்த்துக் கையசைத்தாள்.

அன்று இரவு மினியின் உடம்பில் ஒரு சூடு பரவிற்று. இத்தனை நாட்களாக அவனை ஒரு பொருட்டாக லட்சியம் பண்ணாமல் இருந்தாள். இப்போது மனசுக்குள் பொங்கி வந்த பூரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. வீட்டில் தொடரும் அம்மா அப்பாவின் சண்டையால் மினியின் மனசு தடம் புரண்டது. தன்னிடம் அன்பாகப் பேசும் ஒருவரை மனசு பற்றிக்கொண்டு விட்டது. கண்களிலும் முகத்திலும் பளிச்சென்று அந்த பூரிப்பு எட்டிப் பார்த்தது. உதட்டில் புன்சிரிப்பாக ஓடிற்று.

ஜீவாவோடு பழகப் பழக அவனது மென்மையான குணம், நிதானமான பேச்சு  அன்பான சுபாவம் எல்லாம் புரியப்புரிய கொஞ்சம் கொஞ்சமாக காதல் மொட்டு விட்டு இதழ் விரியத் தொடங்கி இருக்கிறது. உள்ளுக்குள் மிகக் குளிரிச்சியாய் இதமாய் இனிமையானதாய் காதல் பரவிக்கொண்டு வருவதை உணர்ந்தாள்.

ஜீவாவும் மினியும் யார் கண்ணிலும் படாமல்  சந்தித்து வந்தார்கள். முதல் சில தடவைகள் திருட்டுத்தனமாய் சந்திக்கும் போது பயம் உடல் முழுதும் உதறலெடுக்கும். பழகப்பழக பயத்தின் அளவுகோல் குறைந்து மனதிற்கு அந்த திருட்டுத்தனமான சந்திப்பு பிடித்துத்தான் போனது.