மழைக்காலம்... வாகனங்களைப் பராமரிப்பது எப்படி?



‘‘ரிப்பேருக்கு வந்த ஒரு டூ வீலர்ல ஏர் ஃபில்டரை கழட்டி பார்த்தா... குட்டி தண்ணிப் பாம்பு சுருண்டு கிடக்குது!’’‘‘ஸ்கூட்டரைக் கழட்டினா உள்ள தவளைக் குடும்பமே இருக்கு!’’ கடந்த வாரம் முழுக்க சென்னையின் மெக்கானிக் ஷெட்டுகளில் இப்படித்தான் பகீர் பேச்சுகள். மழை நீரில் ஆயிரக்கணக்கான மோட்டார் வாகனங்கள் மூச்சு பேச்சில்லாமல் போக, ஐ.சி.யூ பேஷன்ட்டுகள் போல அவை அழைத்துவரப்பட்டது இங்கேதான்.

மற்ற நாளெல்லாம் ஒரு கஸ்டமர் பார்ப்பதே கஷ்டம் என்றிருந்த மெக்கானிக்குகள் கூட ‘‘முடியல சார், வேற ஷெட் பார்த்துக்குங்க!’’ என விரட்டும்படி ஆகிவிட்டது நிலைமை. இந்த நிலைமையைத் தவிர்க்க... மழையிடமிருந்து நம் வாகனங்களைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்... நிபுணர்களிடம் கேட்டோம்!

டூ வீலர்என்.எஸ்.செல்வன், மேனேஜர், டிடார் மோட்டார்ஸ், சென்னை.

* மழைக் காலம் ஆரம்பிக்கும் முன்னாடியே வண்டியின் டயரையும், பிரேக்கையும் ஒரு முறை செக் அப் பண்ணிடறது நல்லது. மழையில் பிரேக் பிடிக்காமல் போறதும் டயர் வழுக்குறதும் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம்.  

* மழைக் காலத்துல வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தாதீங்க. ஈர மண்ல ஸ்டாண்ட் இறங்கி வண்டி கீழ விழந்திடும். அப்போ, இண்டிகேட்டர், ெஹட்லைட், சைடு பாடி பேனல் எல்லாம் சேதமாகி செலவு வச்சிடும். இந்த மாதிரியான கேஸ் நிறைய வருது.

* முடிஞ்ச வரை மழை நீர் படாத மாதிரி இடத்துலயோ அல்லது கவர் போட்டு மூடியோ வண்டியை நிறுத்துங்க. மழையில் நின்னா ஸ்பீடோ மீட்டர், எலக்ட்ரிக் ஸ்விட்ச்கள், லைட்டுகள்... ஏன், பெட்ரோல் டேங்க் வரை தண்ணி புகுந்து பிரச்னை தர வாய்ப்பிருக்கு.

* ஏர் ஃபில்டர், ஸ்பார்க் பிளக், கார்பரேட்டர் இந்த மூணு பகுதியிலும் மழை நீர் அடைச்சு வண்டி ஆஃப் ஆகும். இந்த கேஸ்கள் மழைக்காலத்துல ரொம்ப அதிகம். வண்டியில இருக்கிற டூல் கிட்டை வச்சு இந்த மூன்றையுமே கழட்ட முடியும். கழட்டி துடைச்சி மாட்டினாலே வண்டி ஸ்டார்ட் ஆகிடும். கார்பரேட்டரைப் பொறுத்தவரை கார்பரேட்டர் கப்புக்குக் கீழ ட்ரைன் ஸ்க்ரூ ஒண்ணு இருக்கும். அதைத் திருகினாலே இந்த கப் கழண்டு வந்திடும். அதுல இருக்குற ஈரத்தைத் துடைச்சிட்டு மாட்டினா வண்டி இயங்க சான்ஸ் இருக்கு.

* சிலர் வண்டியின் சைலன்ஸர்ல நீர் போயிருச்சேனு பயப்படுவாங்க. ஆனா, பெரும்பாலான வண்டி சைலன்ஸர்கள்ல நீர் வெளியேற சின்ன ஓட்டை வச்சிருப்பாங்க. அது வழியா நீர் வெளியேறிடும். தண்ணி இல்லாத இடத்துல கொஞ்ச நேரம் நாம வண்டியை நிறுத்தினாலே போதும்.

* பொதுவா, எஞ்சின் மூழ்குற அளவு தண்ணீர்ல போகும்போது வண்டி ஆஃப் ஆகிடுச்சுன்னா, அங்கேயே ஸ்டார்ட் பண்ண முயற்சிக்கக் கூடாது. இதனால இன்னும் அதிக தண்ணீர் எஞ்சினுக்குள்ள போக வாய்ப்பு இருக்கு. உருட்டிக்கிட்டே வண்டியை நீர் இல்லாத பகுதிக்கு கொண்டு வந்து ஸ்டார்ட் பண்ணணும். கார்சின்னராஜா, மாருதி சர்வீஸ் மாஸ்டர், சென்னை

* இந்த மழைக்கு மட்டும் 45 வண்டிகளை சரி பண்ணியிருக்கோம். பெரும்பாலானவங்க ‘கியர் ஷிஃப்ட்டிங் ப்ராபளம்’னு வந்தாங்க. அதாவது, வண்டியின் கிளட்ச் ஜாம் ஆகிடும். அதனால, கியர் விழாது. ஆரம்பத்தில் ஃபர்ஸ்ட் கியர் போட்டு லேசா மூவ் பண்ணிப் பார்த்தால் இந்த பிரச்னை சரியாக வாய்ப்பிருக்கு. இந்த முதலுதவியை மக்களே செய்து பார்க்கலாம்.

* மழைக்காலத்துல வர்ற கார் பிரச்னைகளை நாங்க ஏ, பி, சினு மூணு வகையா பிரிக்கிறோம். ‘ஏ’ வகை, எஞ்சின், சீட், சென்சார் சிஸ்டம் வரை மழையால பாதிக்கப்பட்டுருச்சுனு வர்ற கேஸ்! இதுல வாடிக்கையாளரால வண்டியை எடுக்கவே முடியாது.

ஒவ்வொரு கம்பெனி வண்டிக்கும் ஒரு தனிப்பட்ட ஹெல்ப் லைன் நம்பர் இருக்கும் (மாருதிக்கு 1800 102 1800). அதுக்கு டயல் பண்ணினா, அந்த சுற்று வட்டாரத்துல இருக்கிற டீலர், 35 நிமிஷத்துல மெக்கானிக்கை அனுப்பிடுவார். அங்கேயே சரி பண்ண முடிஞ்சா செய்திடுவோம். இல்லன்னா, சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வருவோம். ரொம்ப சேதம்னா, இன்சூரன்ஸ் க்ளெயிம் பண்ணி பணம் கூட வாங்கிடலாம்.

* அடுத்து ‘பி’ வகையில சீட் லெவல் வரை தண்ணி வந்துடும். இதுல, வண்டி பெரும்பாலும் ஸ்டார்ட் ஆகிடும். கஸ்டமரே வண்டியை கடைக்கு எடுத்துட்டு வந்துடலாம்.

* அப்புறம், சி லெவல்ல கார்ப்பெட் வரை நீர் புகுந்திருக்கும். இதிலும் கார்ப்பெட்டை கழட்டிட்டு வண்டியை கடைக்கு எடுத்துட்டு வரலாம்.
 
* பொதுவா, ஃபோர் வீலரை எப்படி சரி பண்ணணும்னு நிறைய பேருக்குத் தெரியாது. அதனால, கூடுமானவரை ஹெல்ப் லைனுக்கு கூப்பிடுறது நல்லது. ஹெல்ப் லைன் நம்பரே தெரியாதுனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அதைத் தெரிஞ்சு வச்சிருக்கிறதுதான் முக்கியமான டிப்ஸ்!

- பேராச்சி கண்ணன்