கொட்டித் தீர்த்த மழை... கோட்டை விட்ட அரசு..!
1.10.2015 முதல் 18.11.2015 வரை தமிழகத்தில் 394.3 மி.மீ மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. வழக்கமாக பெய்வதை விட சுமார் 32% அதிகம். நிலம் முழுதும் நீர்க்காடாகி விட்டது. வீடுகள் மிதந்தன. சாலைகள் துண்டாயின.
வாகனங்கள் மூழ்கின. 180க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பொருட்சேதம். ‘பேய் மழை’, ‘கொடூர மழை’ என்றெல்லாம் திட்டித் தீர்த்துவிட்டன ஊடகங்கள்.குடிநீருக்காக மக்கள் அல்லாடிக் கிடந்த நேரத்தில் அமுதமென சுரந்த மழை, சாக்கடையோடு கலந்து கழிவாக உருமாறி விட்டது. இன்னும் ஒரே மாதம்... குடி நீருக்காக வழக்கம் போல் தமிழகம் பரிதவிக்க ஆரம்பித்துவிடும்!
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமானது. இந்த சீஸனில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழைதான் அடுத்த ஆண்டுக்கான நீராதாரம். வழக்கமாக ஆகஸ்ட் மாதத்திலேயே பருவமழையை எதிர்நோக்கிய ஆலோசனைகளும் திட்டமிடல்களும் நடப்பதுண்டு. நீர்நிலைகள், ஓடைகள் தூர்வாரப்படுவதும் உண்டு.
கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் மழைநீர்க் கால்வாய்கள் மற்றும் நீர்த் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளது தற்போதைய அரசு. ஆனால், எல்லாமே தற்போது பெய்த மழையில் பல்லிளித்து நிற்கின்றன. வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிய பிறகு, அவசர அவசரமாக பொக்லைன் கொண்டு வந்து மதகுகளின் அடைப்பை நீக்குகிறார்கள் அதிகாரிகள்.
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, முழங்கால் அளவு தண்ணீரில் நின்று போஸ் கொடுத்துவிட்டு, ‘அம்மாவின் நல்லாட்சியில்’ என்று ஆரம்பித்து பேட்டி கொடுப்பதோடு அமைச்சர்களின் பணி முடிந்து விட்டது. பிரசார வாகனத்தில் வந்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று தொடங்கி ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார் முதல்வர்.
‘‘தண்ணீர்ப் பஞ்சம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பெய்த அற்புதமான மழையை சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் வீணடித்திருக்கிறோம். அறிவியல் புரிதல் இல்லாமல் எல்லாவற்றையும் அரசியல் நோக்கோடு பார்க்கும் அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்...’’ என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆய்வாளருமான அருண் கிருஷ்ணமூர்த்தி.
‘‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்தன. இப்போது 240 ஏரிகளே மிஞ்சியிருக்கின்றன. நீர்நிலைகளுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின்சாரம் தந்து, தண்ணீர் இணைப்பு தந்து ஆக்கிரமிப்புகளை ஊக்கப்படுத்தியிருக்கிறது அரசு. ஏன், அரசே ஏரி குடியிருப்புத் திட்டங்களையும் உருவாக்குகிறது.
ஆறுகள், வடிகால்கள், மழைநீர் நிர்வாகம் தொடர்பாக அரசிடம் எந்தவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை. இப்போது பெய்திருக்கும் மழையை வரலாறு காணாத மழை என்கிறார்கள். 1985, 96, 2005 என பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இப்படியான பெருமழை பெய்யத்தான் செய்கிறது. நாம்தான் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம். 2005ல் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு அரசு விழித்திருக்க வேண்டும். நீர் நிலைகளை மேம்படுத்தி, பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
இங்கு அரசுத் துறைகளுக்குள் ஒருங்கிணைப்பே இல்லை. பொதுப்பணித்துறை ஒரு புறம், மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ஒருபுறம், ஊரக வளர்ச்சித்துறை ஒருபுறம் என அவரவர் விருப்பத்துக்கு செயல்படுகிறார்கள். திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், இந்த அரிய நீரை முழுமையாக சேகரித்து தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கியிருக்க முடியும். பாதிப்புகளையும் குறைத்திருக்கலாம். இப்போதாவது நிபுணத்துவம் பொருந்தியவர்களைக் கொண்டு செயல்திட்டங்களை உருவாக்கினால், இனிவரும் பாதிப்புகளைத் தடுப்பதோடு நீர் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்தலாம்...’’ என்கிறார் அருண்.
தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் மழைநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் அக்கால்வாய்கள் இறுதியில் ஒரு நீர்நிலையில் நிறைவுற வேண்டும். ஆனால் பெரும்பாலானவை ஏதோஒரு இடத்தில் முட்டுச்சந்தைப் போல முடிந்து விடுகிறது. மேலும் வீடுகளின் கழிவுநீர் இணைப்புகளும் நேரடியாக மழைநீர்க் கால்வாய்களில் இணைக்கப்படுவதால், மழைநீரும் சாக்கடையாகி, தெருக்களையும் சாக்கடைக் குட்டையாக மாற்றுகிறது. ‘‘மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டு வந்ததை சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுகிறது இந்த அரசு. உண்மையில் அது மழைநீர் சேகரிப்புக்கான முதல் படி, அவ்வளவுதான்.
மழைநீரைக் குழாயில் பிடித்து மணலில் விட்டுவிடுவதாலேயே நீர் பூமிக்குள் இறங்கிவிடாது. இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் உண்டு. சென்னையில் கூவம், அடையாறு, கொசஸ்தலை என மூன்று நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளைப் பற்றிய உண்மையான கணக்கீடுகள் ஏதும் அதிகாரிகளிடம் இல்லை. இந்த நதிகளை முறையாகப் பயன்படுத்தவும் இல்லை. அதேபோல மழைநீர் வடிகால்களும் திட்டமிட்டுக் கட்டப்படவில்லை. குறிப்பிட்ட தூரத்துக்கு ஓரிடத்தில் ஒரு தேக்கத்தை உருவாக்கி தண்ணீரைத் தேக்கி, நதிகளின் கொள்ளளவைக் கணக்கிட்டு அவற்றில் விட வேண்டும்.
சிங்கப்பூரில் கடந்த வாரம் இங்கு பெய்ததைப் போலவே கடும் மழை பெய்தது. ஆனால், எந்த இடத்திலும் வெள்ளம் கிடையாது. நீர் நிர்வாகம் அங்குள்ள அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆங்காங்கே தண்ணீரைச் சேகரித்து தேவைக்கு மேலானவற்றை திட்டமிட்டு வெளியேற்றுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே அப்படியான ஏற்பாடுகள் இல்லை. வழிகாட்ட வேண்டிய அமைப்புகளும் தொலைநோக்கற்று செயல்படுகின்றன.
சி.எம்.டி.ஏ. என்கிற அமைப்பை முற்றிலுமாக மறு சீரமைப்பு செய்ய வேண்டும். தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு அந்த அமைப்பே முக்கியக் காரணம். தொழில்நுட்ப அறிவே அங்கு பெரும்பாலான அதிகாரிகளுக்கு இல்லை. அத்தனை விதிமுறைகளும் விலை போய்விடுகின்றன. சென்னையில் எந்த தலையீடும் இல்லாமல் ஒரு கணக்கெடுப்பைச் செய்தோமானால் பெரும்பாலான கட்டிடங்கள் விதிகளை மீறியிருப்பதைக் கண்டறிய முடியும். அந்த விதிமீறல்கள்தான் இப்படியொரு நிலையை உருவாக்கியிருக்கின்றன...’’ என்கிறார் நகர்ப்புற திட்டமிடல் நிபுணர் மார்க் செல்வராஜ்.
சூழலியலாளரும் பொறியாளருமான சுந்தர்ராஜனின் குற்றச்சாட்டும் அதுவாகவே இருக்கிறது. ‘‘புவி வெப்பமயமாதல் காரணமாக பருவநிலை வெகுவாக மாறிவிட்டது. இனி வரும்காலங்களில் பருவக்காற்று காரணமாக மழை பெய்யப்போவதில்லை. புயல், வெப்பச் சலனம், காற்றழுத்தத் தாழ்வுநிலையால் மட்டுமே மழை பெய்யும். வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகும். அதேபோல், 2 மாதம் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாளில் பெய்துவிடும். இது அறிவியல்பூர்வமான செய்தி. தற்போது இங்கு பெய்த மழையும், அண்மையில் உத்தராஞ்சல், மகாராஷ்டிராவில் பெய்த மழையும் இதற்கு உதாரணம்.
இந்த பருவ மாற்றம் பற்றி மத்திய அரசோ, மாநில அரசோ சிறு ஆய்வைக் கூட செய்யவில்லை. நம் வானிலை ஆராய்ச்சி மையங்களும் 40 ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன. ‘24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும். வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்...’
என்பதைத் தவிர வேறெதுவும் இருக்காது. இதுவா கணிப்பு? அமெரிக்கா போன்ற நாடுகளில், ‘இத்தனை மணியில் இருந்து இத்தனை மணி வரை, இந்தந்த இடங்களில் இத்தனை மில்லி மீட்டர் மழை பெய்யும்’ என்று மிக நுணுக்கமாக கணிக்கிறார்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் அப்டேட் செய்கிறார்கள். வானிலையை கண்காணிப்பதற்காக பல செயற்கைக்கோள்களை அனுப்பியதாகச் சொல்லும் இந்தியா இன்னும் பழங்காலத்து முறையிலேயே கணித்துக் கொண்டிருக்கிறது.
புழல், செம்பரம்பாக்கம் உள்பட தமிழகத்தின் பல ஏரிகளில் 40% மண்ணே நிரம்பியிருக்கிறது. தூர்வாரி பல ஆண்டுகள் ஆகின்றன.பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் என அரசுக் கட்டிடங்கள் எல்லாம் நீர்நிலைகளில்தான் கட்டப்படுகின்றன. குளங்களை அழித்து பூங்கா அமைக்கிறார்கள். அதனால்தான் நகரத்தைக் கடலாக்குகிறது மழை. இப்போதைய நிலையை படிப்பினையாகக் கொள்ளாவிட்டால் எதிர்காலம் இன்னும் சிக்கலானதாக மாறும். நீர்நிலைகளை எல்லாம் ஆழப்படுத்த வேண்டும். ஓடைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பூங்காக்கள் அனைத்திலும் குளங்கள் அமைக்க வேண்டும். மழைநீர்க் கால்வாய்களில் கான்க்ரீட்டுகளை அகற்றிவிட்டு, 100 அடிக்கு ஓரிடத்தில் சிறு சிறு சுவர்களை அமைத்து அவற்றை அந்தக் குளங்களில் இணைக்க வேண்டும். இதுவரையில் செலவிடப்பட்ட தொகை என்னவானது என்று தணிக்கை செய்து, தவறு செய்த அதிகாரிகளை நிர்வாகத்தில் இருந்து களைய வேண்டும்...’’ என்கிறார் சுந்தர்ராஜன். செவ்வாய்க்கே ராக்கெட் விடுமளவுக்கு திறன் வாய்ந்த விஞ்ஞானிகள் நிறைந்த தேசம் இது. ஆனால் மழையைக் கையாளவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தீர்வு காண முடியவில்லை என்பது எவ்வளவு மோசமான தலைக்குனிவு!
தமிழ்நாட்டில், 39,000 நீர்நிலைகளும் அவற்றோடு தொடர்புடைய 2 லட்சம் ஓடைகளும் இருந்துள்ளன. இப்போது வெறும் 15,000 நீர்நிலைகளே மிஞ்சியிருக்கின்றன. பெரும்பாலான ஓடைகளை அழித்துவிட்டார்கள். இருக்கிற நீர்நிலைகளையும் தூர்வாரிப் பராமரிப்பதில்லை.
எதிர்கால எஞ்சினியர்களும் அவர்களுக்கு வழிகாட்டும் அத்தனை நிபுணர்கள் நிரம்பிய அண்ணா பல்கலைக்கழகமும், ஐ.ஐ.டியும் பல எஞ்சினியரிங் கல்லூரிகளும்கூட வெள்ளத்தில்தான் மூழ்கிக் கிடக்கின்றன. தங்கள் வளாகங்களில் நீர் மேலாண்மையைத் திட்டமிட முடியாத இவர்களை நம்பித்தான் தமிழகம் இருக்கிறது!
- வெ.நீலகண்டன்
|