வெள்ளம் தடுக்கும் சுரங்கக் கோயில்



‘இனி பருவமழை என்பதே கிடையாது. காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் என ஏதாவது காரணங்களால் மழை பெய்தால்தான் உண்டு. கடலூரிலும், காஞ்சிபுரத்திலும் பெய்தது போல, பருவநிலை மாற்றங்களால் திடீரென சில மணி நேரங்களில் ஒரே இடத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும்.

கிராமங்கள் சமாளித்து விடலாம். ஆனால் சென்னை போன்ற நகரங்கள் இதைத் தாங்காது’ என எச்சரிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். இதேபோன்ற பிரச்னைகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான், புதுமையான முறையில் இதற்குத் தீர்வு கண்டிருக்கிறது.

நம் சென்னையின் மடிப்பாக்கம், முடிச்சூர் போல ஜப்பானின் புறநகர்ப் பகுதி சாய்டாமா. இங்கிருக்கும் இந்தக் கட்டிடத்தை ‘சுரங்கக் கோயில்’ என வழி
படுகிறார்கள் ஜப்பான் மக்கள். டோக்கியோவின் புறநகர்ப் பகுதிகள் பலவும் மக்கள் நெரிசலில் தவிக்கின்றன. என்னதான் வடிகால் வசதிகள் பக்காவாக இருந்தாலும், திடீரென ஒரு சூறாவளியோடு மழை வந்து தாக்கும்போது, எல்லா குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது.

இப்படி தொடர்ச்சியாக ஐந்து வெள்ள பாதிப்புகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான் அரசு, இதற்குத் தீர்வாக தரைக்கு அடியில் ஒரு மெகா தண்ணீர்த் தொட்டி கட்ட முடிவெடுத்தது. சாய்டாமா பகுதியில் ஒரு கால்பந்து மைதானம் மற்றும் பூங்காவுக்குக் கீழே இது இருக்கிறது. தொட்டி என்றால் ஏதோ நம் வீட்டு மொட்டை மாடியில் வைப்பது போன்றதல்ல இது! ஒரு பெரிய ஏரிக்கு சமமானது.

தரைக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்க நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து மைதான சைஸில் 5 டேங்குகள். 83 அடி உயரம், 255 அடி அகலம், 580 அடி நீளம். ஐந்தையும் கால்வாய்கள் இணைக்கின்றன. இந்தக் கால்வாய்கள் சுரங்கத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீள்கின்றன. திடீரென மழை கொட்டும்போது டோக்கியோ புறநகர்ப் பகுதிகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர், கால்வாய்கள் வழியாக இங்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு நொடியில் 200 டன் வெள்ள நீரை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது.

ஒரு தொட்டி நிரம்பியதும் அடுத்த தொட்டிக்கு தண்ணீர் போகும். இப்படியே ஐந்து தொட்டிகளும் மொத்தமாக நிரம்பிவிட்டால், உபரி நீரை வெளியேற்ற ஜெட் விமானத்தை இயக்கும் திறன்கொண்ட நான்கு எஞ்சின்கள் உள்ளன. இவை உபரி நீரை வெளியேற்றி எடோ நதியில் விடும். அந்த நதி தாழ்வான பகுதியில் ஓடி கடலில் கலப்பது என்பதால், அதன்பின் பிரச்னை இருக்காது.

‘உலகின் மிகப்பெரிய சுரங்க வெள்ள நீர் வடிகால் அமைப்பு’ எனப் பெயர் பெற்றிருக்கிறது இது.  ஒருநாள் முழுக்க பேய்மழை கொட்டித் தீர்த்தாலும், டோக்கியோ புறநகரின் வெள்ள நீர் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது. சுமார் 19 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் இதை வடிவமைத்து உருவாக்க 18 ஆண்டுகள் ஆனது.

சேமிக்கும் மழைநீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தவும் இதில் வசதி இருக்கிறது. எனவே ‘மழைநீர் வீணாகக் கடலில் கலந்தது’ என்பது போன்ற செய்திகளை ஜப்பான் செய்தித்தாள்களில் படிக்க முடியாது. நீர் இல்லாமல் சும்மா இருக்கும் காலங்களில் இது ஒரு சுற்றுலாத் தளம் ஆகிவிடுகிறது. அதோடு, சினிமா ஷூட்டிங்கும் ஆர்வமாக நடத்துகிறார்கள்.

சென்னையின் மழைநீரில் மக்களையும் வீடுகளையும் மிதக்கவிட்டு வேடிக்கை பார்த்து, அதன்பிறகு கோடையில் அவர்களை காலி குடங்களோடு வீதியில் அலையவிடும் அரசு, கொஞ்சம் ஜப்பானைத் திரும்பிப் பார்க்க வேண்டும். சேமிக்கும் மழைநீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகத்துக்குப்  பயன்படுத்தவும் இதில் வசதி இருக்கிறது. எனவே ‘மழைநீர் வீணாகக் கடலில்  கலந்தது’ என்பது போன்ற செய்தி களை ஜப்பான் செய்தித் தாள்களில் படிக்க  முடியாது.

- அகஸ்டஸ்