அஜித்துக்கும் விஜய்க்கும் அந்த ஒற்றுமை!



விஜய், அஜித், சூர்யா, தனுஷ், மோகன்லால், ஜெயம் ரவி என டாப் ஹீரோக்களுக்கு பிடித்தமான ஃபைட் மாஸ்டர் டி.சில்வா. இயக்குநர்கள் சிவா, வெங்கட்பிரபு, கௌதம்மேனன் ஆகியோருக்கும் ஃபேவரிட். பெங்களூருவில் புனித் ராஜ்குமாரின் கன்னடப் பட ஷூட்டிங்கில் டிஷ்யூம் போட்டுக்கொண்டிருந்த சில்வாவைப் பிடித்தோம்.

‘‘பூர்வீகம் சென்னைதாங்க. வீட்ல வச்ச பேரு செல்வம். ‘செல்வா’னு கூப்பிடுவாங்க. பீட்டர் ஹெயின் மாஸ்டர்தான் என் குரு. அவரோட அசிஸ்டென்ட்டா 80 படங்கள் பண்ணிட்டு, தெலுங்குப் படங்கள் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஷங்கர் சாரோட ‘கல்லூரி’ மூலம் தமிழில் நான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது.

ஆனா, அப்போ ராஜமௌலி சாரோட ‘யமதொங்கா’வில் பிஸியானதால முடியாமப் போச்சு. அப்புறம், ‘யாரடி நீ மோகினி’, ‘சரோஜா’னு வரிசையா தமிழ்ப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பட டைட்டில்ல என் பெயரை ‘சில்வா’னு தவறுதலா போட்டுட்டாங்க. அந்தப் பேர் இன்னும் நல்லா ஃபாரீன் டச்ல இருந்தது. அதனால சில்வாவே நிலைச்சிடுச்சு!

ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் நல்லா பண்ணியிருக்கார்னு வெளியே தெரியறது சாதாரண விஷயமில்ல. ஃபைட்டுக்கு முக்கியத்துவம் உள்ள கதை, அதை சீன் பண்ணும் இயக்குநர், சரியா படம் பிடிக்கற ஒளிப்பதிவாளர், விறுவிறுப்பைக் கூட்டி அந்த ஃபைட்டை இன்னும் மெருகேத்துற எடிட்டர்னு எல்லாரோட பங்களிப்பும் சேரும்போதுதான் ஒரு நல்ல ஸ்டன்ட் மாஸ்டர் வெளியே தெரிய முடியும்.

எனக்குக் கிடைச்ச இயக்குநர்கள் எல்லாருமே நல்ல ஃப்ரீடம் கொடுத்து, வேலை வாங்கக்கூடியவர்கள்தான். லிங்குசாமி சார், சிவா சார் எல்லாம் ஃபைட் எப்படி இருக்கணும்னு சீன் பை சீனா எழுதிடுவாங்க. நாம அதை எக்ஸிக்யூட் பண்ணிக் குடுத்தா போதும்!’’

‘‘நீங்க வொர்க் பண்ணின ஹீரோக்கள் பத்தி..?’’‘‘மோகன்லால் சார் எவ்வளவு பெரிய ஹீரோ... ‘ஜில்லா’வில் வொர்க் பண்ணும்போது ‘நீ என்ன சொல்றியோ அப்படி பண்றேன்ப்பா’னு பணிவா சொன்னார். அப்பா கேரக்டர்னாலும், ஃபைட் சீன்கள்ல அவர் செம ஸ்பீடு காட்டினார். விஜய் சார் ‘திருமலை’, ‘ஆதி’ டைம்ல இருந்தே பழக்கம். ‘வேலாயுதம்’, ‘தலைவா’ பண்ணும்போது இன்னும் நெருங்கிட்டோம். ‘வேலாயுதம்’ல டிரெயின் மேல ஓடி வர்ற சீன்ல, ‘டூப் வைக்காதீங்க’னு சொல்லி அவரே பண்ணினார். நாம சீக்குவென்ஸ் சொல்லும்போது, எந்த பரபரப்பும் இல்லாம கவனிப்பார். ஆனா, ஷாட்ல கில்லி மாதிரி அசத்திடுவார். விஜய் சார், அஜித் சார் ரெண்டு பேருமே எப்பவும் டூப் போடுறதை விரும்ப மாட்டாங்க. ரிஸ்க் உள்ள ஷாட்டை கேட்டு வாங்குவாங்க.

சூர்யா சார் எல்லாத்திலும் பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்ப்பார். ‘யாரடி நீ மோகினி’யில இருந்துதான் தனுஷ் சார் பழக்கம். அவரோட ‘3’, ‘வேங்கை’, ‘விஐபி’, ‘மாரி’, ‘தங்கமகன்’னு எல்லா படங்களுக்கும் வேலை செய்யறேன். ஃபைட்னா ரொம்ப இயல்பா, யதார்த்தமா இருக்கணும்னு விரும்புவார். கௌதம்மேனன் சாருக்கு என்மேல எப்பவும் ஒரு பிரியம் உண்டு. ‘என்னை அறிந்தால்’ல என்னை வில்லனாக்கி அழகு பார்த்தார். ‘வி.டி.வி’ இந்தியில பண்ணும்போது, நான் ஸ்டன்ட் கவனிச்சேன். இப்போ ‘அச்சம் என்பது மடமையடா’ வரை அவரோட நட்பு தொடருது!’’

‘‘என்ன சொல்றார் அஜித் சார்?’’‘‘ ‘மங்காத்தா’வில் இருந்துதான் அஜித் சார் அறிமுகம். அப்புறம் ‘வீரம்’, ‘வேதாளம்’.  ‘வீரம்’ல டிரெயின் ஃபைட் ரொம்பப் பேசப்பட்டதால, என்ன ரிஸ்க்னாலும் என் மேல நம்பிக்கை வச்சு பண்ணுவார். சீன் எடுக்கறப்ப அடி பட்டாலும், சிராய்ப்பு  ஆனாலும் அதை உடனே வெளிக்காட்டிக்க மாட்டார். மறுநாள் ஷூட்டிங்ல, ‘இடது  கையில என்ன சார்?’னு கேட்டா, ‘நேத்து வாங்கினது’னு சொல்லிச்  சிரிப்பார்.

 ‘வேதாளம்’ ஷூட்டிங் அப்போ, வில்லன் அடிச்ச அடி, அஜித் சார் கழுத்துல பட்டுடுச்சு. ‘முருகா’னு அலறியபடி கழுத்தைப் பிடிச்சிட்டு கீழே விழுந்துட்டார். எல்லாரும் பதறிட்டோம். ‘ஹாஸ்பிடல் வேணாம். எனக்கு ஒரு பதினைஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க...’னு அமைதியா அதே இடத்துல படுத்துக் கிடந்தார். அப்புறம் டாக்டர் வந்து ஒரு இன்ஜெக்‌ஷன் போட்டார். ‘இன்னொரு ஊசியும் போட்டுடுங்க. ஷாட்டை முடிச்சிடுவோம். என்னால ஷூட்டிங் பாதிக்கக் கூடாது’னு அன்னிக்கு கழுத்து வலியோட நடிச்சுக் கொடுத்தது மறக்க முடியாதது!’’

‘‘உங்களைப் பத்தி..?’’
‘‘அழகான - அளவான குடும்பம். மனைவி இல்லத்தரசி. மகன் கிரிஷன் அஞ்சாவது படிக்கிறார். மகள் அமிர்தவர்ஷினி, ரெண்டாவது படிக்கிறாங்க. இப்ப தமிழ் சினிமா ஸ்டன்ட் யூனியனுக்கு வெளி மாநிலங்கள்ல மட்டுமில்ல... வெளிநாடுகள்லயும் நல்ல மரியாதை இருக்கு. இங்க உள்ள ஆட்கள் 17 மொழிகள்ல வேலை செய்யிறாங்க. ஹாலிவுட் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்களுக்கும் நாம  வொர்க் கொடுக்கறோம்.

இங்கே நம்ம ஊர்கள்ல டான்ஸ் ஸ்கூல்ஸ் மாதிரி, வெளிநாடுகள்ல ஃபைட் அகாடமி நிறைய வச்சிருக்காங்க. எல்லா வித ஃபைட்களையும் கத்துக் குடுக்கற மாதிரி, இன்டர்நேஷனல் தரத்தோட ஒரு ஸ்டன்ட் அகாடமியை பெரிய அளவில் ஆரம்பிச்சு, நிறைய பேருக்கு இதை சொல்லிக் கொடுக்கணும்னு விரும்புறேன். காலமும் நேரமும் செட் ஆகுறப்ப அது நடக்கும்!’’

ஆக்‌ஷன் சீன் சொல்லும் ஸ்டன்ட் டி.சில்வா சீன் எடுக்கறப்ப அடி பட்டாலும், சிராய்ப்பு  ஆனாலும் அதை உடனே வெளிக்காட்டிக்க மாட்டார்.

- மை.பாரதிராஜா