மத்தவங்களுக்கு உதவுறது பெருமை இல்லை...அது மனுஷனோட கடமை!



‘‘இன்னைக்கு வரைக்கும் ஆண்டவன் எனக்கு ஒரு குறையும் வைக்கலே. மூணு வேளை சாப்பாடு இருக்கு. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைச்சிருக்கு. உதவிக்கு நல்ல நண்பர்கள் இருக்காங்க. மத்தவங்களுக்கு நம்மால என்ன பயன் என யோசித்தேன்! நாலு பேரை பசியாத்த முடிஞ்சா அதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவுமில்லை. அந்த எண்ணத்துல ஆரம்பிச்சதுதான் இந்த ஒரு ரூபாய் சாப்பாடு. ஏதோ நாலு பேரை சந்தோஷப்படுத்துறோம்னு இல்லாம, யாருக்கு உதவி தேவையோ அவங்களைத் தேடிப் போய் உதவணும். அதுதான் உண்மையான சேவை..!’’

- கனிவாகப் பேசுகிறார் வெங்கட்ராமன். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகில்  ஏ.எம்.வி ெமஸ் என்ற பெயரில் ஒரு உணவகத்தை நடத்துகிற வெங்கட்ராமன், நோயாளிகளோடு வருகிற 60 பேருக்கு தினமும் 1 ரூபாய்க்கு சாப்பாடு வழங்குகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு 20 சதவீத தள்ளுபடி விலையில் உணவு தருகிறார். திருமண உதவி, கல்வி உதவி என இவரது மெஸ்சில் சத்தமில்லாமல் நடக்கின்றன பல நல்ல விஷயங்கள். வெங்கட்ராமனிடம் இது பற்றிய பெருமிதம் இல்லை. மிகவும் அடக்கமாகப் பேசுகிறார்.

‘‘ரயில்வேயில் வேலை பார்த்த அப்பா, ஓய்வுக்குப் பிறகு ஆரம்பிச்ச மெஸ் இது. அண்ணன், அப்பாவைப் போல ரயில்வேக்கு போயிட்டார். நான் இதையே முழுநேரத் தொழிலா மாத்திக்கிட்டேன். தொழில்ல நேர்மையும், சேவையும் இருக்கணும்னு அப்பா சொல்வார். ‘மத்தவங்களுக்கு உதவுறது பெருமைப்படத்தக்க விஷயமில்லை. அது எல்லா மனிதனுக்குமான கடமை’ங்கிறது அப்பாவோட கொள்கை. உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு முடிந்த சமயங்கள்ல, முடிந்த அளவுக்கு உதவிகள் செய்யிறதுண்டு. தொழில்லயும் அதை அங்கமாக்க ஆசைப்பட்டேன்.

மருத்துவமனைக்கு நிறைய மாற்றுத் திறனாளிகள் சாப்பிட வருவாங்க. அவங்ககிட்ட சாப்பாட்டுக்கு போதிய பணம் இருக்காது. ‘சாப்பாடு எவ்வளவு?’னு கேட்டுட்டு, கையில இருக்கிறதை எண்ணிப் பாத்துட்டு திரும்பிப் போயிடுவாங்க. ‘பரவாயில்லை! இருக்கறதைக் கொடுங்க’ன்னு சொன்னாகூட  தயங்கித் தயங்கி நிப்பாங்க. தன்மானம் தடுக்குதுன்னு புரிஞ்சுது. அவங்க தயக்கத்தைப் போக்குறதுக்காக ‘மாற்றுத்திறனாளிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி’ன்னு போர்டு வச்சேன். பத்து வருஷமா அது நடைமுறையில இருக்கு.

ஒருநாள் இரவு எட்டரை மணி இருக்கும். ஒரு வயதான அம்மா வந்தாங்க. அவங்க உறவினரை ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க. வழக்கமா இட்லி வாங்குறவங்க. அன்னைக்கு இட்லி முடிஞ்சிடுச்சு. ‘தோசை வாங்கிட்டுப் போங்கம்மா’ன்னு சொன்னேன். இல்லப்பா... 3 ரூவாய்க்கு இட்லின்னா 6 தருவே. தோசை ரெண்டுதானே தருவே... நாங்க மூணு பேரு சாப்பிடணுமே...’ன்னு சொல்லிட்டு திரும்பிப் போயிட்டாங்க.

எனக்கு பகீர்னு இருந்துச்சு. கையில 6 தோசைகளைக் கட்டிக்கிட்டு மருத்துவமனைக்குப் போய் அந்த அம்மா கையில கொடுத்தேன். அங்கிருந்த நர்ஸ்கிட்ட பேசும்போதுதான் அந்த மக்களோட துயரமான வாழ்க்கை எனக்கு புரிஞ்சுச்சு. ‘சிகிச்சைக்கு வர்றவங்களுக்கு நாங்க சாப்பிடக் கொடுத்துடுவோம். அவங்களைப் பார்த்துக்கறதுக்காக வர்றவங்கன்னு நிறைய பேர் டீயும் பன்னும் சாப்பிட்டே பசியாத்திக்குவாங்க’ன்னு நர்ஸ் சொன்னாங்க.

நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி இவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். அப்போதைக்கு தினமும் 10 பேருக்கு மதிய சாப்பாடு மட்டும் கொடுக்கலாம்னு யோசிச்சேன். எதையும் இலவசமா கொடுத்தா மதிப்பிருக்காது. முறைப்படுத்தவும் முடியாது. அதனால 1 ரூபாய் விலை வச்சேன்.

தினமும் 10 டோக்கன். காலையில மருத்துவமனைக்குப் போயிடுவேன். ரொம்பவும் சிரமப்படுற மனிதர்களா பார்த்து கொடுத்திட்டு வந்திடுவேன். மதியம் பார்சல் கட்டி தயாரா வச்சிருப்பேன். டோக்கனைக் கொடுத்துட்டு சாப்பாட்டை வாங்கிக்குவாங்க. சும்மாதானே கொடுக்கிறோம்ங்கிறதுக்காக அளவையோ தரத்தையோ குறைக்கிறதில்லை. மத்தவங்களுக்கு என்னவோ அதுதான் அவங்களுக்கும்!

நாளாக நாளாக படிப்படியா இதை விரிவுபடுத்தினேன். இப்போ தினமும் 60 டோக்கன். காலையில 15 டோக்கன். மதியம் 30 டோக்கன். இரவு 15 டோக்கன். சாதாரணமா தொடங்கினது, இப்போ ஒரு இயக்கமாவே வளர்ந்து நிக்குது. நிறைய பேர் உதவி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. ‘இன்னைக்கு எனக்கு பிறந்த நாள், 10 பேருக்கு சாப்பாடு போட்டுடுங்க’ன்னு சொல்லி முகம் தெரியாதவங்கள்லாம் பணம் அனுப்புறாங்க.

மருத்துவமனையில நார்மல் டெலிவரி ஆனா பணம் கொடுத்து, ‘நாலு பேருக்கு சோறு போடுங்க’ன்னு சொல்றாங்க. நிறைய நல்ல உள்ளங்களை இந்த திட்டம் ஒன்றிணைச்சிருக்கு. இப்போ சாப்பாடு மட்டுமில்லாம போர்வையும் வாங்கிக் கொடுக்கிறேன். நல்ல உடை இல்லாத பெண்கள் இருந்தா, அவங்களுக்கு புடவையும் கொடுக்கிறேன். யாரெல்லாம் உதவுறாங்களோ அவங்க பெயரை போர்டுல எழுதி உணவக முகப்புல வச்சிடுவேன்.

இந்த உலகத்துல எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பிணைப்பு இருக்கு. மனிதன் மட்டும்தான் அந்தப் பிணைப்பை அறுத்துக்கிட்டு எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடுறான். மற்ற உயிரினங்கள் எல்லாம் தங்கள் தர்மத்தை மீறாமத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கு. தங்கள் தேவைக்கும் கூடுதலா ஒரு துளியைக் கூட மத்த உயிரினங்கள் சுமக்கிறதில்லை. ஆனா மனுஷன், தலைமுறை தலைமுறைக்கும் சேத்து வைக்கப் போராடுறான்.

அதுதான் ஏற்றத்தாழ்வுக்கு அடித்தளமா இருக்கு. நான் பிறக்கும்போது எதையும் கொண்டு வரலே. எதையும் கொண்டு போகப் போறதும் இல்லை. எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிச்சுட்டேன். இன்னொரு பெண் பி.டெக் படிக்கிறா. பிள்ளைகளுக்குன்னு பெரிசா எந்த செலவும் நான் செய்யலே. எங்கிருந்தோ உதவிகள் கிடைச்சுச்சு. யார் யாரோ கை கொடுத்தாங்க. அதுதான் நம் கண்ணறியாத பந்தம்.

இன்னைக்கு வரைக்கும் எனக்கோ, குடும்பத்தில உள்ளவங்களுக்கோ உடம்புக்குப் பிரச்னைன்னு மருத்துவமனைக்குப் போனதில்லை. எல்லாம் நல்லபடியா இருக்கு. ஆண்டவன் கருணையால சீக்கிரமே அறுபதுங்கிற எண்ணிக்கையை நூறா மாத்திடுவேன்!’’ வெங்கட்ராமனின் இதயத்திலிருந்து வரும் ஈர வார்த்தைகள் நம்மை நெகிழச் செய்கின்றன! (அவரைத் தொடர்புகொள்ள: 96290 94020).

தங்கள் தேவைக்கும் கூடுதலா ஒரு துளியைக்  கூட மத்த உயிரினங்கள் சுமக்கிறதில்லை. ஆனா மனுஷன், தலைமுறை தலைமுறைக்கும்  சேத்து வைக்கப்
போராடுறான்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ராஜா