பணிவிடை
நகரின் மத்தியில் இருந்த பிரபல உணவகம் அது.‘‘அங்க ஃபில்டர் காபி ரொம்ப டேஸ்ட்டா இருக்காம். அதுவுமில்லாம கல்லாவுல இருந்து டேபிள் க்ளீன் பண்ணுறது வரை எல்லாமே பெண்கள்தானாம்! போய்ப் பாத்துட்டுத்தான் வருவோமே!’’ என்றவனை, ‘‘ம்... சைட் அடிச்சுக்கிட்டே காபி குடிக்க முடிவு பண்ணிட்டீங்க!’’ என்றாள் என் மனைவி.
ஹோட்டலுக்குள் நுழைந்தோம். சிவப்பாக லட்சணமாக இருந்த இளம் பெண் ஒருத்தி புடவைக்கு மேல் ஷர்ட் அணிந்து கொஞ்சமும் ஆபாசம் இல்லாத தோற்றத்தில் ஓடியாடி, எல்லோரும் கேட்டதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். காபியுடன், பூரியும் சாப்பிட்டு முடித்து, தட்டில் பத்து ரூபாய் டிப்ஸும் வைத்தேன்.ஆனால் அதை அவள் வாங்க மறுத்தது ஆச்சரியமாக இருந்தது.
‘‘சார், குடும்ப சுமையை சமாளிக்கத்தான் ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கறேன். பெண்களான எங்களுக்கு இது வேலையா தெரியலை. ஒரு சேவை பண்ணுற திருப்திதான் கிடைக்குது. வீட்ல மாமனார், மாமியார், குழந்தைங்க, உறவுக்காரங்களை வரவேற்று அவங்களுக்குத் திருப்தியா பணிவிடை பண்றதுக்கு எந்தப் பொண்ணுமே ‘டிப்ஸ்’ வாங்கறதில்லையே சார்!’’ என்றாள் அந்தப் பெண்.இதைக் கேட்டதும் எனக்கு பெண்கள் மீதான மரியாதை இன்னும் அதிகமானது. அப்போது மனைவி என்னிடம் சொன்னது... ‘‘இவளுக்கெல்லாம் கொழுப்பு அதிகம்!’’
பிரகாஷ்
|