குட்டிச்சுவர் சிந்தனைகள்



உண்மையில் எல்லோருக்குமே, அவரவர் பால்ய வயதில் முடி வெட்டிய சலூன்காரர்கள் கொஞ்சம் மனதுக்கு நெருக்கமானவர்களாய்த்தான் இருப்பார்கள். நாமே கூச்சப்படுமளவு நம்மைப் புகழும் திறமை வாய்ந்தவர்கள் சலூன் கடைக்காரர்கள். கூகுளில் தேடினாலும் க்ளூ கூட கிடைக்காத நம்ம அழகையும் மதிச்சு, ‘‘தம்பி! அரவிந்த்சாமி மாதிரி வெட்டி விடுறேன், உன் கிளாஸ் பொண்ணுங்க எல்லாம் உன் பின்னால வருவாங்க பாரு’னு, நமக்கு இருக்கும் நடைமுறைப் பிரச்னையை அறிந்து, பெத்த அப்பா கூட நம் மீது காட்டாத அக்கறையைக் காட்ட சலூன்காரரை விட்டால் ஆள் ஏது?

‘‘முடி வளர்ந்துடுச்சுடா, இந்த ஞாயித்துக்கிழமை வெட்டிடு’’னு அம்மா சொன்ன நிமிடத்திலிருந்தே, இந்த தடவை எந்த நடிகர் மாதிரி முடி வெட்டலாம், எந்த நடிகர் மாதிரி கிருதா வைக்கலாம்னு மனசு ‘கத்தி’ பட விஜய் மாதிரி, ப்ளூ பிரின்ட் விரிச்சு ப்ளான் போட ஆரம்பிச்சிடும்.  ‘வால்டர் வெற்றிவேல்’ படம் வந்தப்ப சத்யராஜ் மாதிரி கூட முடி வெட்டணும்னு நினைச்சிருக்கேன். வளர்ந்த பிறகுதான் தெரிஞ்சுது, பாவம் சத்யராஜே வருஷம் ஒரு தடவதான் முடி வெட்டிக்குவார்னு!
பள்ளிக்கூடம் படிக்கிறப்ப, ராக்கெட் சயின்ஸ்ல அப்துல் கலாமுக்கு டிப்ஸ் கொடுக்கிற ரேஞ்சுல அதிகமா யோசிச்சதெல்லாம் இந்த மூணு விஷயத்துக்குதான் -

தீபாவளிக்கு என்னென்ன பட்டாசு வாங்கி எப்படி எப்படி வெடிக்கிறது, முடி யாரு மாதிரி வெட்டுறது, அப்புறம் ரேங்க் கார்டுல அப்பா கையெழுத்த எப்படிப் போடுறது. ஒவ்வொரு முறை முடி வெட்ட உட்காரும்போதும், ‘கமல் மாதிரி வெட்டுங்க’, ‘அர்ஜுன் மாதிரி வெட்டுங்க’னு சொல்லிட்டு உட்காருவேன். ‘நீ சால்னா கேட்டா என்ன, சப்பாத்தி குருமா கேட்டா என்ன, எனக்கு சாம்பார் செய்யத்தான் தெரியும்’ என்கிற மாதிரி இருப்பார் சலூன்காரர். ஒன்பது கிலோமீட்டர் ஓடி வந்தவன் இளைப்பு வாங்குற டோன்ல, ஒரு சசிகுமார் ரக சிரிப்ப சிரிச்சுட்டு, பயங்கர பசில இருக்கிறவன் பார்சல் வாங்கிட்டு வந்த தேங்காய் சட்னி பொட்டலத்த பிரிக்கிறது போல கத்தரிக்கோலோட தலையில கதகளி ஆடுவாரு.

டி வில்லியர்ஸ் பேட் மாதிரி கத்தரிக்கோல் கண்ட திசையிலும் சுழல்றப்ப, ‘டேய் வடக்குப்பட்டி ராமசாமி, பணத்தை எடுத்து வைடா’ங்குற ரேஞ்சுல எவரெஸ்ட் சிகரத்தை விட ரெண்டடி உயரத்துல என் நம்பிக்கை கொடி கட்டிப் பறக்கும். என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியாது, எனக்குத் தெரிந்து சாய்வு நாற்காலியில் தூங்கியவர்களை விட, சலூனின் சுழலும் நாற்காலியில் தூங்கியவர்கள் அதிகம். ‘சலூன் கடை சேர்ல பத்து நிமிஷம் உட்கார்ந்திருப்பதும் ஒண்ணுதான், ஒன்பது பொங்கல மொத்தமா திங்கிறதும் ஒண்ணுதான்’ என ஒரு ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்ததாக முறுக்கு மடிச்சு கொடுத்த காகிதத்துல படிச்சிருக்கேன். சலூன் கடைக்காரர் விரல்களிலும், அம்மா சொல்லும் கதையிலும், கெமிஸ்ட்ரி வாத்தியார் வாயிலும் வாழ்கிறார் தூக்கத்தின் கடவுள்.

வாய் கொள்ளாம குரைச்ச பிறகு கொஞ்சம் வர்க்கி கிடைச்ச நாய் மாதிரி, கத்தரிக்கோல் சைலன்ட்டான பிறகு தலையப் பார்த்தா, ‘பிரெண்ட்ஸ்’ பட க்ளைமேக்ஸ்ல விஜய் ஹேர் ஸ்டைல் மாதிரியே இருக்கும். அந்த ஹேர் ஸ்டைலை பத்து நாள் கழிச்சுப் பார்த்தா ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ சிவகுமார் மாதிரி வளர்ந்து நிற்கும்.
வீட்டை பிடிச்சிப் போனா வீட்டுல இருக்கிறவங்களும் பிடிச்சுப் போற மாதிரி, சலூன்காரர்கள் பிடித்துப் போக, அவர்களது சலூனும் முக்கிய காரணம். என் சலூன்காரர் ரொம்பவே ரசனையான மனுஷன்.

ஷேவிங் செய்ய வருபவர்கள் சக்கர நாற்காலியின் பின்னாடி தலை சாய்த்து, ஸ்லைட்டா விட்டத்தைப் பார்க்கும் இடத்தில கூட சில்க் ஸ்மிதா போட்டோ ஒட்டியிருப்பாரு. அதைப் பார்க்கும் ஷேவிங்காரரும் தலையை அங்க இங்க திருப்பி இம்சை தராமல், ஒத்துழைப்பு கொடுப்பாரு.
ஷேவிங் செய்யப்பட்ட செம்மறி ஆடுகள் போலவும், முடி வளர்த்த முயல்கள் போலவும் ப்ளோ-அப் போஸ்டர்களில் சிரிக்கும் அந்த பாணி பூரி விற்பவர்கள் போலிருக்கும் அண்ணன்கள்தான், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் எனப் பின்னாளில் தெரிய வந்தது.

நாம பார்க்கிறதை யாரும் பார்த்திடக் கூடாதென, பாகிஸ்தான் பார்டருக்குள் கால் வைக்கும் இந்திய ஜவான் போல பயத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும், சுவற்றில் ஒட்டியிருந்த ஒரு நடிகையின் போஸ்டரை, பத்து நொடிக்கு ஒரு முறை பார்த்துப் பார்த்து திரும்பிக்கொண்டிருந்த எனக்கு ‘‘தம்பி, அது குஷ்புப்பா’’ என எங்கள்  இருவரையும் அறிமுகப்படுத்தி, அந்த நாளை ‘வரலாற்றில் இன்று’ என என் சுயசரிதையில் குறிக்குமளவு உதவியவர் அவர்தான். சலூனில் ஒட்டியிருந்த ஒரு நடிகையின் போட்டோவை பார்த்துட்டு சுப்பு தாத்தா, ‘‘என்னடா அனுராதா இளைச்சுப் போயிடுச்சு’’ என்றதற்கு, ‘‘அப்புச்சி, அது டிஸ்கோ சாந்தி’’ என விளக்கமளித்தது,
‘பாட்ஷா’ படத்தில்  அடி பம்பை எடுத்து ரஜினி அடித்த காட்சிக்கு ஒப்பாக இன்னமும் என் நினைவில் பசுமை மாறாமல் இருக்கிறது.

அரசியல், சினிமா செய்திகள் போக எங்கள் ஏரியா கிசுகிசுக்கள் கூட அவரது சலூனில்தான் - கமல் படங்களில் நுழைக்கப்படும் யூகி சேது கேரக்டர்கள் போல - எங்கள் காதுகளுக்குள்ளும் நுழைந்தது. சொல்லப் போனால் பிற்காலத்தில் டபுள் மீனிங் டயலாக்குகளுக்கான விதை அங்கேதான் போடப்பட்டது. நிமிடத்திற்கு ஒரு முறை தலை சீவும் அண்ணன்கள் பலருக்கும் காதல் கடித போஸ்ட் ஆபீஸ் அதுதான். எனது வயதுப் பசங்கதான் போஸ்ட்மேன்கள்.

மகான் கவுண்டமணியால் எப்படி கூட நடிப்பவரைத் திட்டாமல் நடிக்க முடியாதோ, அதேபோல பால்ய வயதில் என்னால் எதையும் கொட்டாமல் இருக்க முடியாது. தண்ணீர், எண்ணெய், மோர், குழம்பு, கிருஷ்ணாயில், தேன், பால் என ஹோட்டல் மற்றும் மளிகை லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து திரவ நிலை பொருட்களிலும் எனக்கு கிரக நிலை சரியில்லாமல்தான் இருந்தது. எதையாவது கொட்டியது தெரிந்ததும், என் அம்மா, ‘அட எடுபட்ட...’ என ஆரம்பிக்கும்போதே, தியேட்டரில் போட்ட வேகத்தில் தூக்கப்பட்ட ‘நையாண்டி’ படம் போல வீட்டிலிருந்து வெளியே தெறித்திருப்பேன்.

அப்பா வீடு வரும் வரை எனக்கு அடைக்கலம் தந்ததெல்லாம் சலூன்தான். குடுமி எடுத்த தேங்காயை பந்து போல வைத்துக்கொண்டு நானும் எனது சித்தப்பா மகனும், ‘கிழக்கு செவக்கையில, நான் கீரை அறுக்கையில’ என உருட்டி விளையாடுவதைப் பார்த்த என் அம்மா, ‘‘அடேய் பசியெடுத்த பெருச்சாளிகளா,  முண்ட தேங்காய உருட்டுனா துக்கம் வந்து சேரும்டா’’ எனச் சொல்லி முடித்த 12வது நிமிஷம், டி.கல்லுப்பட்டி பாட்டி டிக்கெட் வாங்கிடுச்சு என்றது டிரிங் டிரிங். சச்சின் போல, 100 அடிக்கும்னு நம்மாளுங்க நினைச்சிருந்தாங்க போல. பாட்டி சேவாக் மாதிரி 99ல அவுட்டானதுக்கு நான் உருட்டுன தேங்காய்தான் காரணம்னு நாங்களே முடிவு பண்ணிக்கிட்டு, அம்மா அடிப்பாங்கனு தெறிச்சு ஓடி தஞ்சம் அடைந்த இடம் சலூன்தான். சாயந்திரம் சலூனுக்குள்ள போன நாங்க, கிட்டத்தட்ட நாப்பத்தாறு ஷேவிங் பார்த்துட்டுதான் வீடு வந்தோம்.

‘நல்ல முறுகலா, எக்ஸ்ட்ரா எண்ணெயோட, அடியில கருகாம பொன்னிறம் வர்றப்ப எடுத்திடுங்க’னு ரோஸ்ட் ஆர்டர் பண்ணினா, ‘தம்பிக்கு ஒரு ஊத்தப்பம்’னு நினைச்சுக்கிட்டு அவரு முடிவெட்டுனது கூட கவலையளிக்காது. கரும்பு வெட்டுன பிறகு தீ வச்சு எரிச்ச காடாட்டம் முடியோட உட்கார்ந்திருக்கிற என்கிட்டே, ‘‘இந்தா தம்பி! சீவிப் பாரு’’னு கடைசியா சீப்பை நீட்டுவாரு பாருங்க, அப்ப எனக்கு அவரைப் பார்த்தா ‘சண்டமாருதம்’ பட ஃபர்ஸ்ட் காப்பிய புரொடியூசருக்கு காமிச்ச ஏ.வெங்கடேஷ் போல தோணும்.

மொட்டையடித்து மூணு நாள் ஆனா மாதிரி, ‘ரெட்’ அஜித் கெட்டப்ல போகும் என்னைப் பார்த்து அம்மா கேட்கும், ‘‘ஏன்டா இன்னமும் கொஞ்சம் குறைச்சு முடி வெட்டியிருக்கக் கூடாது?’’ தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட வரும் வடிவேலுவிடம், ‘என்னண்ணே தக்காளி சட்னி

யா?’ன்னு கேட்கும்போது வடிவேலு எவ்வளவு கடுப்பாகி இருப்பாரென புரிந்துகொள்ள வைக்கும் சூழ்நிலை அது. நான் ஆசைப்பட்ட மாதிரி முடி வெட்டுவது என்பது சிம்பு படம் ரிலீசாவது போன்ற அரிதான விஷயமாகிவிட்டாலும்,   அவர் மீது கோபமோ காழ்ப்புணர்ச்சியோ ஏற்படவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் அப்போதைய என் வயதாகக் கூட இருக்கலாம். ஒரு பெண்ணை அஞ்சு பேரு ஒண்ணா சேர்ந்து லவ் பண்றளவு பொறாமை இல்லாத வயசுல்ல
அது.       

சலூன் கடைக்காரர் விரல்களிலும், அம்மா சொல்லும் கதையிலும், கெமிஸ்ட்ரி வாத்தியார் வாயிலும் வாழ்கிறார் தூக்கத்தின் கடவுள்.ஷேவிங்குக்கு தலை சாய்த்து, ஸ்லைட்டா விட்டத்தைப் பார்க்கும்  இடத்தில கூட சில்க் ஸ்மிதா போட்டோ
ஒட்டியிருப்பாரு.          

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்