ஆல்ரைட் அஜித்!
கால் மூட்டு வலி ஆபரேஷனுக்குப் பின், எப்படி இருக்கிறார் அஜித்? அவருக்கு என்னாச்சு? ‘தல’யின் நெருங்கிய வட்டங்களில் விசாரிக்கப் புகுந்தால், வியக்கிறார்கள் ஒவ்வொருவரும். அதிலிருந்து நாம் எடுத்த நியூஸ் ஜூஸ்...
‘ஆரம்பம்’ ஷூட்டிங்கில் விறுவிறுப்பான கார் சேஸிங். ஓடிக்கொண்டிருக்கும் ஒரு காரிலிருந்து மற்றொரு காருக்கு அஜித் தாவிக் குதிக்க வேண்டும். சீனை விளக்கிவிட்டு ‘‘நீங்க ரிஸ்க் எடுக்க வேண்டாம். டூப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என அஜித்திடம் சொல்கிறார் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான லீ விட்டேகர். ‘‘எனக்கு பதிலா டூப் வச்சு எடுத்தீங்கன்னா...
இதை நான்தான் பண்ணியிருப்பேன்னு என் ரசிகன் நம்பிடுவான். காசு கொடுத்து படம் பார்க்கும் அவனை ஏமாத்தக்கூடாது. இது சாதாரண சேஸிங்தான். டோன்ட் வொர்ரி, நானே பண்ணிடுறேன்’’ என அஜித் சொல்ல... வாயடைத்துப் போயிருக்கிறார் அந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர். அந்த சேஸிங்கில் எதிர்பாராதவிதமாக கால் முட்டியில் அடிபட, துடிதுடித்துப் போய்விட்டார் அஜித்.
சின்னதொரு ஆபரேஷன் பண்ணினால் சரியாகிவிடும் என மருத்துவர்கள் சொன்னார்கள். இருப்பினும் கோவை எலும்பு முறிவு நிபுணர் டேவிட் ராஜனிடம் வெறுமனே வலிநிவாரண ட்ரீட்மென்ட் மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாகிவிட்டார் அஜித். ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’ வரை ஆபரேஷனை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ‘வேதாளம்’ சண்டைக் காட்சிகளில் எல்லாம் ரிஸ்க் எடுத்தாலும், பெரிதாக பிரச்னை இல்லை.
ஆனால், ‘ஆலுமா டோலுமா’ டான்ஸின்போது, ஏற்கனவே அடிபட்ட அதே கால் மூட்டுப் பகுதியில் அடிபட்டுவிட, வலியால் சுருண்டு விட்டார் மனிதர். ‘‘ ‘வேதாளம்’ ரிலீஸுக்குப் பிறகு ஆபரேஷன் பண்ணிக்கறேன்’’ எனக் குடும்பத்தினருக்கு ப்ராமிஸ் கொடுத்திருந்தார். சொன்ன மாதிரியே செய்துகொண்டார். ‘ஆபரேஷன் நல்லபடியா நடக்கணும் கடவுளே’ என முன்பாகவே திருப்பதியில் மனமுருக வேண்டிக்கொண்டார்.
பிரபல மருத்துவமனையில் சேர்ந்தால் ரசிகர்கள் தொல்லை அதிகம் இருக்கும் என்பதால், கோவை டாக்டர் டேவிட் ராஜனின் ஆலோசனைப்படி, குமரன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். மூன்று மணி நேரத்தில் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது. மருத்துவமனையில் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘‘தெரிஞ்சா கூட்டம் வந்துடும்... வீட்ல இருந்து பார்த்துக்கறேன்’’ என மறுநாளே வீடு திரும்பி விட்டார்.
‘‘என்னாச்சு?’’ எனப் பதறி விசாரித்தவர்களிடம் எல்லாம், ‘‘மூன்று வாரங்கள்ல எல்லாம் பர்ஃபெக்ட் ஆகிடும். ஸோ, யாரும் நேர்ல வந்து பார்க்க வேண்டாம்’’ என வேண்டுகோள் வைத்துவிட்டார். இப்போது வீட்டில் நல்ல ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்கள் அடிக்கடி வந்து செக்கப் செய்கிறார்கள். பிஸியோதெரபி பயிற்சியும் தருகிறார்கள். நலம் விசாரிப்பவர்களுக்கே தைரியம் சொல்லும் அஜித்தைக் கண்டு பலரும் வியக்கிறார்கள்.
- மை.பாரதிராஜா
|