நினைவோ ஒரு பறவை 4



ரோஜாப்பூ மிஸ்

இரண்டு வகையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, கேள்விக்கான விடையைக் கற்றுக்கொடுப்பவர்கள்; இரண்டாவது வகை, விடையே இல்லாத கேள்வியைக் கேட்கத் தூண்டுபவர்கள்.
- பாப் டைலன்

உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எப்போதும் நீங்கள் ‘ரோஜாப் பூ மிஸ்’தான். உண்மையில் பிள்ளைகளுக்கு பிரியங்களுடன் பாடம் சொல்லித் தரும் பள்ளிக்கூட டீச்சர்களின் காதோரத்துக் கூந்தல் அலையில் ஊஞ்சல் ஆடுவதற்காகத்தான் இந்த உலகத்தில் ரோஜாப் பூக்கள் பூக்கின்றனவோ! ரத்தச் சிவப்பு, ரோஸ் வண்ணம், மஞ்சள், வெளிர் மஞ்சள், வெள்ளை என உங்கள் கூந்தலில்் நடனமாடும் ரோஜாப் பூக்களுக்காக, நாங்கள் எங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத கணக்குப் பாடம் என்னும் ராட்சஸனைக்கூட நண்பனாக்கிக் கொண்டோம்.

பூ என்பது பூ மட்டுமா மிஸ்? அது ஒரு புன்னகை. பழைய ஞாபகத்தின் புதிய வாசனை. மண்ணில் உதிரும் வானவில் துண்டு. கடவுள் எழுதிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கம். யாரும் படிக்காத, படித்தாலும் புரியாத பிரபஞ்சத்தின் கையேடு. செடிகள் வரையும் சிறுவண்ணக் குறிப்பு.

மண்ணுக்குள் புதைந்தபடி வெளி உலகுக்கு வேர்கள் அனுப்பும் வாசனை மின்னஞ்சல். பூக்களின் இதழ்களில் குழந்தைகளின் முகத்தையும், குழந்தைகளின் முகத்தில் பூக்களின் இதழ்களையும் பார்க்கத் தெரிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரண்டையும் வாடாமல், உதிராமல் பார்த்துக்கொள்பவன் மிகப்பெரும் பாக்கியவான்.

நன்றாக நினைவில் இருக்கிறது. ஐந்தாம் வகுப்பின் வகுப்பு ஆசிரியையாக நீங்கள் எங்களுக்கு முதன்முதலில் அறிமுகம் ஆகிறீர்கள். அதுவரை கதைகளில் மட்டுமே கேட்ட தேவதையை நாங்கள் முதல்முறையாக நேரில் பார்த்தோம். அப்போதுதான் கல்லூரி முடித்து, கல்யாணத்திற்குக் காத்திருக்கும் காலம் வரை, அய்யன்பேட்டை எனும் சிறுநகரத்தின் தனியார் கான்வென்ட் பள்ளியில் நீங்கள் வகுப்பெடுக்க வந்தது நாங்கள் செய்த பாக்கியம். காட்டன் புடவையும், காதோரத்து ரோஜாப் பூவுமாய் நீங்கள் எங்கள் முன்பு நின்றபோது, கற்பூரம் ஏற்றாமல், தீபாராதனை காட்டாமல், நாங்கள் அம்மன் தரிசனம் செய்ேதாம்.

டீச்சரை நேசிக்காத பிள்ளைகள் உண்டா? மிஸ்! நீங்கள் எங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டீர்கள். ஒரு புன்முறுவலில், செல்லம் கலந்த சிறு கண்டிப்பில், சட்டென்று மாறும் சிநேக பாவனையில் நாங்கள் உங்கள் அடிமையானோம்.

எங்களில் எல்லோருடைய தனித்திறமைகளையும் எப்படி நீங்கள் அடையாளம் கண்டுகொண்டீர்கள்? விஜயகுமாரை ஓவியன் ஆக்கினீர்கள். கவிதா ஓட்டப்பந்தயத்தில் பரிசு வாங்கினாள். லோகுவும், கருணாவும் தோட்டக்கலை விற்பன்னர்களாகி, அவரவர் வளர்த்த காய்கறிகளை வகுப்புக்குக் கொண்டு வந்தார்கள். இப்படித்தான் மிஸ்... உங்களால் நானும் கவிஞனானேன்.

ஆஹா, அந்த நாட்கள்! நான் ஏதோ கிறுக்க, நீங்கள் அதைக் கொண்டாட, அதையும் ஒரு குழந்தைகள் பத்திரிகை பிரசுரித்தது. ஜெராக்ஸ் எனும் நகலகங்கள் இல்லாத அந்நாட்களில்... காலத்தை சூன்யமாக்கி, தேதித்தாள்கள் தீர்ந்துபோன காலண்டர் அட்டையில் கத்தரித்து ஒட்டி, அந்தக் கிறுக்கலையும் கவிதையாக எண்ணிப் பூரித்து, வகுப்பறை சுவரில் நீங்கள் மாட்டினீர்கள்; நானும் மாட்டிக்கொண்டு விட்டேன், மிஸ். நீங்கள் கொடுத்த உற்சாகத்தின் விளைவு... இன்றைக்கு இந்தக் கிறுக்கனின் கிறுக்கல்களை உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

மிஸ், எங்கள் வகுப்பறைக்குள் நீங்கள் நுழைந்த முதல் கணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? யெளவனத்தின் உச்சப் படிக்கட்டில் அதிரூப சுந்தரியாய் நீங்கள் நின்ற தருணம் அது. எங்கள் எல்லோரையும்் எழுப்பி, ‘‘படிச்சு முடிச்சதும் நீங்க என்ன ஆகப் போறீங்க?’’ என்று ஒரு கேள்வி கேட்டீர்கள். அந்தக் கேள்வி எங்களைப் புரட்டிப் போட்டது.

அப்படியெல்லாம் யாரும் என்னவாகவும் ஆகிவிட முடியாது என்று இந்த நாற்பது வயதில் புரிகிறது. ஆனாலும், ஆசிரியைகள் கேள்வி கேட்பதையும், மாணவர்கள் பதில் சொல்வதையும் யாரால் தடுக்க முடியும்? எங்கள் கனவுகளை நாங்கள் சொன்னோம்... நீங்கள் சரியாகத்தான் வழிகாட்டினீர்கள்... எல்லாக் கனவுகளும் கலைந்துவிடும் மேகங்கள்தான் என்பதைக் காலம்தான் புரிய வைத்தது. இதையொட்டி நான் எழுதிய கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தக் கவிதை:

மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப் பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்:
‘‘படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?’’

முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
‘‘டாக்டர்’’ என்றார்கள்
கோரஸாக.

இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது பார்க்க நேர்கிறது.

‘‘இன்ஜினியர் ஆகப் போகிறேன்’’
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி நெய்யப்
போய்விட்டான்.

‘‘எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்’’
கடைசி பெஞ்ச்
சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்,
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை ஆராய்கிறான்.

‘‘ப்ளைட் ஓட்டுவேன்’’
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு,
டி.என்.பி.எஸ்.சி. எழுதி
கடைநிலை ஊழியனானான்.

‘‘அணுசக்தி விஞ்ஞானியாவேன்’’
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

வாழ்க்கையின் காற்று
எல்லோரையும்
திசைமாற்றிப் போட,
‘‘வாத்தியாராவேன்’’
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.

‘‘நெனைச்ச வேலையே செய்யற,
எப்பிடியிருக்கு மாப்ளே?’’
என்றேன்.
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்துக்கொண்டு
‘‘படிச்சு முடிந்ததும்
என்ன ஆகப் போறீங்க? என்று
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை!’’
என்றான்.

இப்படித்தான் மிஸ், காலம் எங்களை வெவ்வேறு கரைகளில் புரட்டிப் போட்டு விட்டது. ஆனாலும், நீங்கள் அளித்த அறிவெனும் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.இப்போது யோசித்துப் பார்க்கிறேன். நீங்கள் எங்களுக்குக் கல்வியை மட்டும் கொடுக்கவில்லை.

அதையும் தாண்டி வாழ்க்கையின் அனுபவத்தையும் கற்றுக் கொடுத்தீர்கள். காலாண்டுத் தேர்வின்போது முன்னால் அமர்ந்திருந்த விஜயகுமாரின் பேப்பரைப் பார்த்து நான் எழுதிக்கொண்டிருந்தேன். பின்னால் இருந்து இதைக் கவனித்த நீங்கள், என் முதுகில் செல்லமாகத் தட்டி, ‘‘நேர்மையா படிச்சு நாற்பது மார்க் வாங்கு, போதும். அது போதும் எனக்கு. காப்பியடிச்சு நூறு மார்க் வாங்க வேண்டாம்’’ என்று சொன்னபோது நான் ஃபெயிலாவதற்கும் தயாராக இருந்தேன்.

வாழ்க்கையில் நாம் சந்திக்க விரும்பும் நபர்கள், எப்போதும் நம்மை விட்டு விலகியே இருப்பார்கள். இந்த முப்பது வருடங்களில், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்னவாக இருக்கிறீர்கள்? என்று தேடிக்கொண்டே இருந்தேன். சமீபத்தில்தான் உங்கள் தொலைபேசி எண் கிடைத்து, உங்களுடன் உரையாடினேன். புதுவையில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக நீங்கள் பணியாற்றுவது அறிந்து மகிழ்ந்தேன்.

எனக்குத் திருமணமாகி விட்டதா? எத்தனை பிள்ளைகள்? என்று நீங்கள் விசாரித்ததும் நெகிழ்ந்தேன். உங்களைப் பற்றி விசாரிக்கையில், ‘‘எனக்கு என்ன முத்துக்குமரன், தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். எனக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கத் தோணல’’ என்று சொன்னதும், அலைபேசியைத் துண்டித்து விட்டு அழுதேன்.

எங்கள் ப்ரியத்திற்குரிய திலகவதி மிஸ் அவர்களே, உங்கள் அனுமதி யுடன் உங்கள் பெயரைப் பயன்படுத்துகிறேன். உங்களுக்கு சென்னையில் ஒரு மகன் இருக்கிறான். மருமகள் இருக்கிறாள். உங்களோடு விளையாட பேரனும் இருக்கிறான். எப்போது ேவண்டுமானாலும் உங்கள் வீட்டுக்கு வரலாம். வாசல் கதவு திறந்தே இருக்கும்.
பூஎன்பது பூ மட்டுமா?

அது ஒரு புன்னகை. பழைய ஞாபகத்தின் புதிய வாசனை.  மண்ணில் உதிரும் வானவில் துண்டு. கடவுள் எழுதிய நாட்குறிப்பின்  கடைசிப் பக்கம்.எங்கள் கனவுகளை நாங்கள் சொன்னோம்... நீங்கள் சரியாகத்தான்  வழிகாட்டினீர்கள்... எல்லாக் கனவுகளும் கலைந்துவிடும் மேகங்கள்தான்  என்பதைக் காலம்தான் புரிய வைத்தது.

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்