நட்பு



கிரகப் பிரவேச பத்திரிகையுடன் ராஜேஸ்வரன் வருகிறான் என்றதும் சந்தியா அலறினாள்.‘‘என்னங்க, உங்க ஃபிரண்டு பேங்க் மானேஜர். வீடு கட்டிட்டார். நீங்க பிரைவேட் கம்பெனியில சாதாரண வேலையில் இருக்கீங்க. நாம வாடகை வீட்டில் இருக்கோம். அவர் வரும்போது நமக்குக் கஷ்டமா இருக்காதா?’’‘‘ஃபிரெண்ட்ஷிப்ல அதெல்லாம் பார்க்கக் கூடாது சந்தியா!’’ - மனைவியை சமாதானம் செய்தான் சந்தானம்.

ராஜேஸ்வரன் வந்தான். பத்திரிகையைக் கொடுத்துவிட்டு அந்த வாடகை வீட்டை பார்வையால் அளந்தான்.சந்தியாவுக்கு மனசு கூசிற்று. பார்வையாலயே விட்டை நோட்டம் விடுகிறாரே. ‘சொந்த வீடு கட்டிவிட்ட பெருமையில் நண்பன் இன்னமும் வாடகை வீட்டில் இருப்பதை ஏளனமாகப் பார்க்கிறாரோ!’‘‘என்னடா, சந்தானம், இந்த வீட்டுக்கு என்ன வாடகை?’’‘‘12 ஆயிரம் ரூபாய். எதுக்கு கேக்கறே?’’

‘‘சும்மாதான்!’’ - சொல்லிவிட்டு செல்போனை எடுத்து கால்குலேட்டரை ஆன் செய்தான் ராஜேஸ்வரன். சற்று நேரத்தில் ஏதோ முடிவு செய்தவனாய், ‘‘டேய், நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?’’ என்றான்‘‘சொல்லுடா!’’‘‘நீ இந்த வீட்டுக்குக் கொடுக்கிற வாடகைப் பணத்தை லோனா கட்டு. என்னோட பேங்க்லயே லோன் ஏற்பாடு பண்ணித் தர்றேன். உனக்கு சொந்தமா புறநகர்ல ஒரு ஃப்ளாட் வாங்கிடலாம்!’’சந்தியா வியந்துபோய் நிற்க, சந்தானம் தன்னையும் அறியாமல் ராஜேஸ்வரனை சந்தோஷத்தில் கட்டித் தழுவினான்.

அமுதகுமார்