கவிதைக்காரகள் வீதி



மருத்துவமனையில் இப்படியொரு காட்சி அபூர்வம்.
பள்ளிக்கூடப் பையுடன் வந்திருக்கிறான்.
அவனுக்கு அல்ல, அம்மாவுக்குத்தான் நலிவு.

வாசல் நடைப் பக்கத்துப் பூஞ்செடி அருகில்
துவங்கியது அவனுடைய வாள் வீச்சு.
குவிந்த வலது கையால் அருவமான வாளை
இடைவெளியற்று லயித்து வீசுகிறான்.   

பெருக்கல் குறிகள் ஒத்த வீச்சில்
காற்றுக் கிழியும் சத்தத்தை அவனே இடுகிறான்.
சண்டையை கணமும் நிறுத்தாமல்
படிகளில் கால் மாற்றி இறங்கி
பக்கவாட்டுத் தாக்குதல்களை வீழ்த்தி

எதிரில் பொருதும் பிரதான சமரனை
வாள்நுனி பாய்ச்சி  சரிக்கும் துல்லியம்
எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.
குனிந்து பார்த்தபடியே இருந்தவன்
கொலைவாளை வெறுத்துத் தூர  எறிந்து
வீழ்ந்தவன் அருகில் கால்மடக்கி அமர்கிறான்.

அவனையே பார்த்துக்கொண்டிருந்த அம்மா
கண்களைத் துடைத்துக்கொள்கிறாள்.
பையன் தன் மடியில் பாவனைக் கருணையுடன்
இறந்தவன் தலையை மடியில் ஏந்துகையில்
அப்படியே ஓடிப்போய் அவனை
அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது
அவளுக்கு.

 கல்யாண்ஜி

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி