கண்டிப்பு



பஸ் ஸ்டாண்ட் அருகிலிருக்கும் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்க வந்தேன். அங்கே எனக்கு முன்பாக நின்ற ஒரு இளைஞன் கையில் சிகரெட். ஸ்டைலாக புகை ஊதிக்கொண்டு நின்றான் அவன். சற்றே அவனை முறைத்தபடி விலகிச்சென்று பேப்பர் வாங்கினேன்.ஆனால் அதன்பின் அவன் திமிர்த்தனமாக, சிகரெட் புகையை என் முகத்தில் படும்படி ஊதினான். கடைக்காரரும் இதைக் கவனித்தார். ‘‘விடுங்க சார்! சின்னப்பயலுக இப்படித்தான் இருப்பானுங்க’’ என்றார் மெதுவாக.

எனக்கு அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட வேண்டும் போல் கோபம் வந்தது. ஏரியா பையன்... எதற்கு வம்பு என அமைதியாக இருந்துவிட்டேன். திடீரென அங்கு வந்த ஒரு பெரியவர், சிகரெட் பிடிப்பவன் கன்னத்தில் நான் நினைத்தபடியே ஒரு அறை வைத்தார். அதிர்ந்தான் அந்த இளைஞன். கன்னத்தைத் தடவியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றான். நான் அந்தப் பெரியவரை நன்றியுடன் பார்த்தேன்.

‘‘ஐயா! நானே அந்தப் பய கன்னத்துல ஒரு அறை விடணும்னு நினைச்சேன்... நீங்க செஞ்சுட்டீங்க!’’ என்றேன்.உடனே அவர், ‘‘சார்! நீங்க அப்படி அறையணும்னு நினைச்சா, என் கன்னத்துல அறையுங்க! ஏன்னா, நான்தான் அந்தத் தறுதலைப் பயலின் அப்பா!’’ என்றார் குரல் தாழ்த்தி.                                                                 

கு.அருணாசலம்