தானம்



முகேஷ் வீட்டு முகவரியை விசாரித்து உறுதி செய்துகொண்டு, காலிங் பெல்லை தயக்கத்தோடு அழுத்தினார்கள் மயில்சாமியும் அவன் மனைவி சங்கீதாவும்.வெளியே இருந்த கேமரா உள்ளே இருந்த டி.வியில் இருவரையும் காட்டிக் கொடுக்க, பெரும் சத்தத்தோடு வீட்டுக்கதவைத் திறந்தாள் முகேஷின் அம்மா.

‘‘யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?’’ - வீட்டுக்காரம்மா தன் அந்தஸ்துக்கு ஏற்ப தடித்த வார்த்தைகளால் கேட்கவும், மயில்சாமி தடுமாறினான்.‘‘மன்னிச்சிடுங்க... அட்ரஸ் மாறி வந்துட்டோம்!’’ - சொல்லிவிட்டு வெளியேறிய மயில்சாமியைப் பின் தொடர்ந்தாள் சங்கீதா.‘‘ஏங்க... சரியான அட்ரஸ்தானே அது? அப்புறம் ஏன் அப்படிச் சொன்னீங்க?’’

‘‘நம்ம மகன் அரவிந்த் விபத்துல இறந்தப்போ, அவன் கண்களை தானமா கொடுத்தோம். அவன் கண்ணை யாருக்குப் பொருத்தினாங்களோ அவங்களை ஒரு தடவ பார்த்துட்டா அவனையே பார்த்தது போல இருக்கும்னு நினைச்சிதான் அட்ரஸ் வாங்கிட்டு வந்தோம். ஒரு ஏழைக்கு அந்தக் கண்களைப் பொருத்தியிருந்தா சந்தோஷமா பார்த்துட்டு, திரும்பி இருக்கலாம்.

ஆனா, இப்படி ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு பொருத்தியிருக்காங்க. இப்ப நாம உண்மையச் சொன்னா, நாம ஏதோ உதவி கேட்டு வந்தவங்கனு நினைச்சிடுவாங்க. அதான் அப்படிச் சொன்னேன்!’’ என்றபடி கலங்கியிருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் மயில்சாமி.  

ஐரேனிபுரம் பால்ராசய்யா