ஃபேன்டசி கதைகள்
உயிரோவியம்
செல்வு @selvu
கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே வினோதமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. முதலில் இவையெல்லாம் வினோதமான நிகழ்வுகள் என்று அவனுக்குத் தெரிந்திருக்கவேயில்லை. இன்றுதான் அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் பட்டது. அவனிருந்த வீட்டுக்குள் இயற்கையான பூக்கள் வளர்வதற்கு எந்தவொரு சாத்தியமும் இல்லை.
பதினான்கு அடுக்குகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பன்னிரண்டாவது தளத்தில் இருக்கிறது அவனது வீடு. கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்பாக ரோஜாப் பூக்களின் நறுமணம் திக்குமுக்காட வைத்தது. அருகிலேயே இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. இந்த ரோஜாப் பூக்களின் வாசத்தை தினமுமே அவனால் உணரமுடியவில்லை. கடந்த வாரத்தில் ஒரு நாள்... இந்த வாரத்தில் ஒரு நாள்... அதுவும் வேறு வேறு கிழமைகளில்!
இது இப்படியிருக்க, நேற்றைக்கு யாரோ துப்பாக்கியால் சுடுவது போன்ற சப்தம் கேட்டது. அதையடுத்து வீட்டின் ஒரு மூலையில் துப்பாக்கிக் குண்டும் துளைத்துச் சென்றிருந்தது. இதற்கெல்லாம் சத்தியமாக வாய்ப்பே இல்லையென்று ஐன்ஸ்டைன்கூட சொல்லிவிடுவார்.
ஏனென்றால், துப்பாக்கிக் குண்டு துளைக்கிறதென்றால் அதற்கு எதிர்ப்புறத்தில் துப்பாக்கி இருந்தே ஆக வேண்டுமென்பதை யாரும் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆனால், அங்கே அப்படி துப்பாக்கியோ, துப்பாக்கியை ஏந்திய மனிதனோ, மிருகமோ, ரோபோவோ, எதுவுமேயில்லை. பின்னே எப்படி துப்பாக்கிக் குண்டு வந்திருக்க முடியும்? குழப்பமாகவும், பீதியாகவும் இருந்தது.
துப்பாக்கிக் குண்டு துளைத்த அன்றே வீட்டைக் காலி செய்துவிட்டுக் கிளம்பிவிடலாமென்று முடிவெடுத்தான். ஆனால், தான் போகிற இடத்திற்கெல்லாம் இந்த துப்பாக்கிக் குண்டு வந்தால் என்ன செய்வது? முதலில் இதற்கு என்ன காரணம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்ததும்தான் வீட்டைக் காலி செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். துப்பாக்கிக் குண்டு வந்ததற்கும், ரோஜா மணம் வந்ததற்குமான காரணத்தை ஆராய ஆரம்பித்தான்.
எப்பொழுதிருந்து இந்த மாதிரியான வினோத நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டால் முடிவினைச் சீக்கிரத்தில் எட்டிவிடலாமென்பதால் கொஞ்சம் பின்னோக்கித் தனது நினைவுகளை ஓடவிட்டான். காரணமில்லாமல் இந்த வீட்டில் நடந்த விஷயங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக நினைவுபடுத்தினான். இந்த வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டிருந்தாலும், காரணமில்லாமல், காரணம் என்னவென்றே தெரியாமல் பெரிதாக எந்தச் சம்பவங்களும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
ஒரு வாரத்திற்கும் முன்பாக தான் வாங்கி வைத்திருந்த பால் பாக்கெட் ஓட்டையாகியிருந்தது கொஞ்சம் சந்தேகத்தைக் கிளப்பியது. வாங்கி வரும்போதே சிறிய ஓட்டையிருந்து அதனைக் கிச்சனில் வைக்கிறபோது பெரிய ஓட்டையாகியிருக்கலாமென்று அப்பொழுது சமாதானமாகிக் கொண்டது நினைவு வந்தது. சொல்லப் போனால் அன்றிலிருந்துதான் வினோதமான நிகழ்வுகள் நடைபெற ஆரம்பித்திருப்பதாக உணர்ந்தான்.
பால் பாக்கெட்டில் பூனை குடித்ததைப் போல ஓட்டையாகியிருந்தாலும் அந்த அபார்ட்மென்ட்டில் இவன் வீட்டுக்குப் பக்கத்தில் எந்தப் பூனையும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் இவன் வீட்டுக்குள் வருவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பின்னே எப்படி இதெல்லாம் நடக்கிறது?
அடுத்த நாள் வீட்டிலிருந்த சில தின்பண்டங்களில் எலி கொறித்ததைப் போல கொஞ்சம் கொஞ்சமாகக் கடிக்கப்பட்டிருந்தன. சில துகள்கள் வீடெங்கும் சிதறியும் கிடந்தன. எலி வருவதற்கும் எந்தச் சாத்தியமும் இல்லாதபோது இதெல்லாம் எப்படி நடந்திருக்க முடியும்?
இதிலெல்லாம் அவனுக்கு அதிகமாகச் சந்தேகமே எழவில்லை. எலியோ, பூனையோ எப்படியோ வந்து போயிருக்கின்றன என்பதாக நினைத்துக் கொண்டான். இந்த உலகில் எலிகளும் பூனைகளும் வரமுடியாத வீடுகள் உண்டா என்ன? ஆனால், அடுத்த நாளில் ரோஜா மணம் வீசியபோதும், அதற்கடுத்த நாளில் துப்பாக்கிக் குண்டு துளைத்தபோதும்தான் பயமும் திகிலும் கூடிவிட்டது.
இதற்கெல்லாம் என்னதான் காரணமிருக்க முடியும்? வீட்டிற்குள் யாரேனும் வந்து போகிறார்களா? இல்லை, ஏதேனும் மந்திரம்? மாயம்? ஒன்றும் புரியவில்லை. ஆனால், ‘இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்காமல் விடப்போவதில்லை’ என்று மட்டும் மனதிற்குள் சூளுரைத்துவிட்டு, என்ன காரணமாக இருக்கமுடியுமென்று யோசித்துக்கொண்டே, வாஷிங் மெஷினில் துவைத்த துணிகளை எடுத்து உலர வைப்பதற்காக ஒவ்வொன்றாகக் கொடியில் போட்டுக் கொண்டிருந்தான். எல்லாமே கடந்த வாரத்தில் வாங்கின புது டி-ஷர்ட்கள்.
முதல் டி-ஷர்ட்டில் பூனையின் கார்ட்டூன் படம் இருந்தது. இரண்டாவதில் எலியின் படம். மூன்றாவதில் ரோஜாப் பூவின் படமும், நான்காவதில் துப்பாக்கி வைத்திருக்கும் ஒரு வீரனின் கார்ட்டூனும் இருந்தது. இப்பொழுதுதான் அவனுக்கு சட்டென்று ஒன்று உரைத்தது. இந்த டி-ஷர்ட்களில் இருந்த கார்ட்டூன் படங்கள் மிகவும் உயிர்ப்புடன் இருந்ததால் மிக அதிக விலை கொடுத்து இவற்றை வாங்கியிருந்தான்.
ஒருவேளை இவைதான் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணமா? அதாவது, அவன் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இருக்கும் உயிர்கள் என்னவெல்லாம் செய்யுமோ, அந்த நிகழ்வுகள் மட்டும் ஒவ்வொரு டி-ஷர்ட்டை அணிந்திருந்த தினங்களிலும் நடந்தது. அப்படியிருந்தால் மொத்தம் ஐந்து டி-ஷர்ட்களை வாங்கினேனே?
அந்த ஐந்தாவதில் என்ன கார்ட்டூன் இருந்தது? யோசித்துக்கொண்டே, தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டைப் பார்த்தான். அதில் சிங்கம்! இதற்கெல்லாம் என்னதான் காரணமிருக்க முடியும்? வீட்டிற்குள் யாரேனும் வந்து போகிறார்களா? இல்லை, ஏதேனும் மந்திரம்? மாயம்? ஒன்றும் புரியவில்லை.
|